முதல்வர் உடல்நிலை வதந்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறது போலீஸ் | Dont spread rumours about Jaya health as Police keenly Monitoring Social Media

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (05/12/2016)

கடைசி தொடர்பு:10:58 (05/12/2016)

முதல்வர் உடல்நிலை வதந்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்கிறது போலீஸ்

முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள காவல்துறை, சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

உடல்நலம் பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் முதல்வரின் உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரவியதால் நேற்றிரவு கடைகள், பெட்ரோல் பங்க் மூடப்பட்டது, பேருந்து நிலையங்கள் வெறிச்சோடியது. தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை இயக்குநரகம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள காவல்துறை, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க