வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (05/12/2016)

கடைசி தொடர்பு:14:59 (05/12/2016)

'எம்.எல்.ஏக்கள், மா.செக்களுக்கு அவசர அழைப்பு ஏன்?'  -விடிய விடிய ஆலோசித்த சசிகலா

மிழக முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 'கழகத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் எம்.எல்.ஏக்களும் அப்போலோ வருமாறு ஓ.பன்னீர்செல்வம் அழைத்தார். சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன' என்கின்றனர் மாவட்ட நிர்வாகிகள். 

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலிலதா. ' கார்டன் திரும்புவதை முதல்வரே உறுதி செய்வார்' என அப்போலோ நிர்வாகமும் தெரிவித்து வந்தது. இதுகுறித்து நேற்று மீடியாக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், 'முதல்வர் பூரண உடல்நலம் பெற்றுள்ளார். விரைவில் வீடு திரும்புவார்' என்றார். ஆனால், மதியத்திற்கு மேல் வந்த தகவல்கள் அனைத்தும் அ.தி.மு.க தொண்டர்களை நிலைகுலைய வைத்துள்ளன. மாரடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவலால் அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் பதற்றமடைந்தனர். 'ஆளுநர் அப்போலோ விரைவு; மத்திய துணை ராணுவப் படை வருகை' போன்ற தகவல்கள் பரவியதால், அப்போலோ முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் திரண்டனர். நள்ளிரவு 11 மணிக்கு தலைமைச் செயலாளருடன் தீவிரமாக விவாதித்தார் நிதிமையச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு, ஓ.பி.எஸ் தரப்பில் இருந்தே எம்.எல்.ஏக்களுக்கு போன் கால் பறந்தது. ' மருத்துவமனைக்கு 11 மணிக்குள் வந்துவிடுங்கள்' என்ற தகவல் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. 

"மருத்துவமனையில் முதல்வர் உடல்நிலை குறித்து தகவல் வெளியான நேரத்தில், மன்னார்குடியில் உள்ள சசிகலா உறவினர்களுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது. ' யார் எங்கு சென்றிருந்தாலும் உடனடியாக சென்னையில் ஒரே இடத்தில் கூடுமாறு' தகவல் சொல்லப்பட்டது. நேற்று மதியம் உறவினர் ஒருவரின் திருமணத்தில் இருந்த திவாகரனுக்கு, அவருடைய மகள் டாக்டர்.ராஜமாதங்கி தகவல் அனுப்பினார். நேற்று இரவு சென்னை வந்த திவாகரன், விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டார். போயஸ் கார்டனின் பாதுகாப்பு குறித்துத்தான் மன்னார்குடி உறவுகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சுதாகரன் முதற்கொண்டு சசிகலாவின் உறவுகள் அனைவரும் கூடிவிட்டனர். அடுத்தகட்ட நிலவரங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்" என விவரித்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர், "முதல்வர் உடல்நிலையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், கூடுதல் படைகளைக் கேட்டதாக அதிகாரிகள் சொல்கின்றனர். அதேவேளையில், இன்று காலை அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் ஆதரவு கடிதம் எழுதி வாங்கும் வேலைகள் நடக்க இருக்கிறது. முதல்வர் உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல்கள் நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி விரும்பத்தகாத விஷயங்கள் நடந்துவிடக் கூடாது எனவும் அவர் அச்சப்படுகிறார்" என்றார் விரிவாக.

"அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில், கட்சி தொடர்பாக எந்த முடிவையும் முதல்வர்தான் எடுக்க முடியும். ஆட்சிக்கும் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழல்களை எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திவிடக் கூடாது என்பதால், காவல்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ' ஓர் எம்.எல்.ஏவுக்கு ஓர் இன்ஸ்பெக்டர்' என்ற முறையில் தீவிர பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ' இந்தப் பணிக்கு இதைவிட பெரிய பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தலாம்' என விவாதிக்கப்பட்டது. இறுதியில், 'இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு வழங்கலாம்' என்ற முடிவுக்கு வந்தார்கள். இன்று எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் கடிதம் வாங்கிவிட்டு, அவர்களை கார்டனின் முழுக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிலைமை சுமூகமாகும் வரையில், எந்த எம்.எல்.ஏவும் சொந்த ஊருக்குத் திரும்புவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

- ஆ.விஜயானந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்