உலக மருத்துவர்களை வரவழைத்து முதல்வரை காப்பாற்றுங்கள்: திருநாவுக்கரசர் வேண்டுகோள்

ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிட உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் சிறந்த மருத்துவர்கள் வரவழைத்து அவரது உடல்நிலையை சரி செய்ய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா  மாரடைப்பிற்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகிற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பு கவலை தருகிறது.  

தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற எல்லோரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மக்களின் பிரார்த்தனை வீண் போகாது. முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

மேதகு ஆளுநரும், தமிழக அரசும், மத்திய அரசும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறிட உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் சிறந்த மருத்துவர்களோ, தேவையான சிறப்பு மருந்துகளோ தேவைப்பட்டால் வரவழைத்து அதிகபட்ச அக்கறையோடு அவரது உடல் நிலையை சரி செய்ய எல்லா உயரிய, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ளப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!