'மத்திய அரசிடம் கவனமாக இருக்க வேண்டும்!’ - எச்சரிக்கை மணியடித்த எம்.எல்.ஏக்கள் கூட்டம்

 

முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ' ஆட்சி மற்றும் கட்சியில் ஏற்பட்டுள்ள சூழல்களைக் கையாள்வது குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது' என்கின்றனர் மாவட்ட நிர்வாகிகள். 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த சமீபத்திய அறிக்கையால், தொண்டர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். நேற்று இரவு சசிகலா உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, ' அனைத்து எம்.எல்.ஏக்களும் சென்னை வருமாறு' அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனையின் தரைத் தளத்திலேயே எம்.எல்.ஏக்கள் அமர வைக்கப்பட்டனர். சில நிமிடங்களில் உள்ளே வந்த நிதியமைச்சர் மிகுந்த சோகத்துடன் இருந்தார். கட்சி எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகள் விளக்கியுள்ளனர். " முதல்வரின் உடல்நிலையைப் பற்றித் தகவல் கிடைத்தவுடன், நாங்களாகவே சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம். இரவு 2 மணியளவில் ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. ' அப்போலோவில் சிறு கூட்டம் நடக்கும். அதன்பிறகு தலைமைக்கழகத்தில் கூட்டம் நடக்கும்' எனத் தகவல் சொன்னார்கள். இன்று காலை கூடிய கூட்டத்தில் நிர்வாகிகள் சில விஷயங்களை முன்வைத்தார்கள். ' இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இப்போதுள்ள சூழலைப் பயன்படுத்தி மத்திய அரசு உள்ளே நுழையப் பார்க்கிறது. அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த அழைப்பு வந்தாலும், உடனே தெரியப்படுத்துங்கள்' என அறிவுரை வழங்கினார்கள். 'முதல்வருக்கு சிகிச்சை முடியும் வரையில் எம்.எல்.ஏக்கள் யாரும் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டாம்' எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மிகவும் கவலையோடுதான் நிலைமையை கவனித்து வருகிறோம்" என்கிறார் கொங்கு மண்டல நிர்வாகி ஒருவர். 

"முதல்வர் உடல்நிலையில் திடீர் என பாதிப்பு ஏற்பட்ட தகவலை வெளியில் கூறாமல், சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது அப்போலோ மருத்துவ டீம். ஆனால், மருத்துவமனை வட்டாரத்தில் இருந்தே மத்திய அரசுக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, சமூக வலைத்தளங்களிலும் தகவல் வேகமாகப் பரவிவிட்டது. இதையடுத்து, இன்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னைக்கு வருகிறது. ஏற்கெனவே, முதல்வரின் உடல்நிலையைக் கண்காணிக்கவே எய்ம்ஸ் குழு வந்ததாகச் சர்ச்சை எழுந்தது. கடந்த சில வாரங்களாக, முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ வெளியிடும் தகவல்களால் அதிருப்தி அடைந்தனர் எய்ம்ஸ் டாக்டர்கள். 'முதல்வர் உடல்நிலை குறித்து தெளிவாகப் பேசுங்கள். நீங்களாகவே மாறுபட்ட ஒன்றைச் சொல்ல வேண்டாம்' எனக் கேட்டுக் கொண்டனர். அதற்குப் பதில் அளித்த மருத்துவமனை நிர்வாகி ஒருவர், 'நோயாளியின் தரப்பில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதைத்தான் தெரிவிக்க முடியும்' என உறுதியாகக் கூறிவிட்டார். 'முதல்வரைச் சுற்றி நடப்பதை அறிந்து கொள்ள, மத்திய அரசு விரும்புவதைத்தான் இதுபோன்ற செயல்கள் காட்டுவதாக' உறுதியாக நம்புகிறார் சசிகலா. இப்போதுள்ள சூழலைப் பயன்படுத்திக் கொள்ள, மத்திய அரசு முனைப்பு காட்டினால் எம்.எல்.ஏக்களும் மாவட்ட நிர்வாகிகளும் இணங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஓ.பி.எஸ் என்ன சொல்கிறாரோ அதன்படியே எம்.எல்.ஏக்கள் செயல்பட இருக்கின்றனர்" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

முதல்வரின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களை கவலையோடு கவனித்து வருகிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். பிரார்த்தனைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

- ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!