'எம்.ஜி.ஆரை போல் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை?' - கி.வீரமணி

அப்போலோவில் ஜெயலலிதா

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்கள் தமிழகத்தில் கவலை ரேகைகளை அதிகரித்திருக்கிறது. ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, மேல்சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார் என்று பரவலாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் போதுமானது. உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. முதல்வரை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லப்பட்டது. லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சர்டு பெயல், ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பரிசோதித்தார். 'முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இப்போதைக்கு வெளிநாடு கொண்டு செல்வது சாத்தியமல்ல' என்று பெயல் சொன்னாராம். அதன்பிறகே, இந்த விஷயத்தில் வெளிநாடு என்ற ஆப்ஷன் கைவிடப்பட்டது என்கிறார்கள்.

அதே நேரத்தில் இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அவருக்கு 1984-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்கள் கழித்து. அக்டோபர் 13-ம் தேதி இரவு, எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்போதைய அ.தி.மு.க அமைச்சர்கள் எம்.ஜி.ஆரை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டனர். அக்டோபர் 16-ம் தேதி சென்னை வந்து அப்போலோவில் இருந்த எம்.ஜி.ஆரை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பார்த்தார். இதன்தொடர்ச்சியாக மும்பையில் இருந்து வந்த டாக்டர்கள், எம்.ஜி.ஆர் உடல் நிலையை பரிசோதித்தனர். மேலும் நியூயார்க் புருக்ளின் மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள், சென்னை வந்து முதல்வர் எம்.ஜி.ஆர் உடலை பரிசோதித்தனர். இதையடுத்து  தனி விமானம் மூலம் புரூக்ளின் மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. புரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், நலம் பெற்றுத் திரும்பினார். 

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்போலோ சிகிச்சையில் இருக்கும் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்திருக்கலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் நமது டாக்டர்கள் கண்காணித்து வருவது சற்று ஆறுதலானது என்றாலும் கூட, அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட, இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு உடனடியாக அழைத்துச் செல்லும் வாய்ப்பு பற்றி, அருகிலிருந்து கவனிப்போர், துணிந்து முடிவு எடுப்பது பற்றி அவசரமாக ஆலோசித்து ஆவன மேற்கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரை எப்படி மருத்துவ வசதிகொண்ட தனி விமானம் மூலம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து குணப்படுத்தினார்களோ, அதுபோன்ற சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு பற்றி பரிசீலித்தல் அவசரம் - அவசியம். முதல் அமைச்சர் விரைவாக உடல்நலம் தேற நமது விழைவுகள்" என்று கூறி உள்ளார். 

-கே.பாலசுப்பிரமணி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!