தமிழகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் !

பாதுகாப்பு

ப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இதயநோய் சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். என்றாலும், முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக, பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க ஆதரவாளர்களும், கட்சித் தொண்டர்களும், பெருந்திரளான பொதுமக்களும் சென்னை வந்து அப்போலோ மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கியுள்ளனர். இதனால், அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள கிரீம்ஸ் சாலை முழுவதுமே மக்கள் கூட்டத்தில் நிரம்பி வருகிறது. ஏராளமான பெண்களும், தொண்டர்களும் கண்ணீர் விட்டுக் கதறிய வண்ணம், உணர்ச்சிப் பெருக்குடனும் பதைபதைப்பிலும் காணப்படுகின்றனர். இதையடுத்து மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அந்தவழியாக வாகன போக்குவரத்தை சீராக்கவும், ஆயிரக்கணக்கான போலீசார் கிரீம்ஸ் சாலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில். தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே ராஜேந்திரன், ஏ.டி.ஜி.பி திரிபாதி மற்றும் காவல்துறை பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேற்றிரவு அவசர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் சி.ஹெச். வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து நேற்றிரவு அவசரமாக சென்னை திரும்பி, அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று நிலைமை குறித்து கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடத்தில், ஆளுநர் அங்கிருந்து ராஜ்பவன் திரும்பினார். நள்ளிரவுக்குப் பின்னர், ஆளுநர் மருத்துவமனை பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்வரின் உடல்நிலை போன்றவை குறித்து மத்திய அரசுக்கு தகவல் அளித்தார்,

முதல்வரின் உடல்நிலை குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் தமிழக ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

எனினும், இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. .பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவியர் அசாதாரண சூழ்நிலையிலேயே வகுப்புகளுக்குச் சென்றதை காண முடிந்தது.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையைச் சுற்றிலும் ஏழு அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளன. 2 ஆயிரம்  போலீசார்  பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் செல்லவும், வாகனப் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டம் - ஒழுங்கு  பிரச்னையில்லை!

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். 'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏதும் இல்லை' என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, தேவைப்பட்டால் கூடுதல் பாதுகாப்புப் படைகளை அனுப்பத் தயார்  என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

144  தடை உத்தரவு வருமா ? 

சென்னை மாநகரில் கூட்டமாகக் கூடுவோரை காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு சொல்லி அனுப்பிவைக்கின்றனர். மேலும் சி.ஆர்.பி.எஃப் படை வீரர்களும் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால், மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

- கே. புவனேஸ்வரி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!