அம்மாவும்... அம்மாவின் அம்மாவும்!

அம்மா

‘அம்மா’ என்பது ஜெயலலிதாவுக்கு தொண்டர்களால் அளிக்கப்பட்ட அடையாளம்! தமிழக அரசியல் என்பது பெரியார், ராஜாஜி, காமராசர், ஜீவா, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று இதுவரை ஆண்களுக்கான இடம் என்று அறியப்பட்ட சூழலில், தந்தை, பேரறிஞர், மூதறிஞர், பெருந்தலைவர், புரட்சித்தலைவர், கலைஞர் என அந்த ஆளுமைகளுக்கான பட்டங்களும் தவிர்க்க முடியாததாவிட்டது.

தமிழக ஆட்சி அரசியலில் தனித்த ஒரு பெண் ஆளுமையான ஜெயலலிதாவுக்கு  முன்னும் பின்னும் வேறு யாரும் இல்லை. அவர் மட்டுமே தனித்து அறியப்படுகிறார். ஆளுமைகள் என்றாலே அவர்களுக்குப் பட்டங்கள் அளிப்பதும் அளித்துக்கொள்வதும் அரசியலும் கலையுலகும் ஒருங்கிணைந்து இயங்கும் தமிழகச் சூழலில் தவிர்க்கமுடியாதது.

அப்படி பெண் ஆளுமையான ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பட்டம், ‘அம்மா’. தொடக்கத்தில் ‘தங்கத்தாரகை’ , ‘புரட்சித் தலைவி’ என்று மட்டுமே அழைக்கப்பட்டு வந்தவர், அவரது அரசு அறிமுகப்படுத்திய தொட்டில் குழந்தை திட்டத்துக்குப் பிறகுதான் தொண்டர்கள் மற்றும் பெண்களால் அதிகமாக ‘அம்மா’ என அழைக்கப்பட்டார்.

‘அம்மா’,ஜெயலலிதாவின் மனதுக்கு நெருக்கமான சொல்லும் அதுவே!.அவரது ஆட்சிகாலங்களில் அவர் அறிவித்து வரும் திட்டங்கள் அதற்கு சான்று. தொட்டில் குழந்தை திட்டம், பெண்கள் பொது இடங்களில் பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க ஏதுவாக இலவசமாக அமைக்கப்பட்ட அம்மா தாய்ப்பால் புகட்டும் அறைகள். கர்ப்பிணி பெண்களுக்கான ‘அம்மா’ மகளிர் சிறப்பு சஞ்சீவி’ திட்டம். அரசு சார்பில் இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை என அவர் அறிவித்த சில ‘அம்மா’ திட்டங்கள்தான் தமிழக அரசியலில் அவரை ‘அம்மா’ என்று அழைக்கப் பதவிக்காலங்களில் விதைத்த விதைகள்.

‘அம்மா’ என்கிற ஆளுமைக்கு அரசியலில் அஸ்திவாரமிட்டவர் எம்ஜி.ஆர் என்றால், எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவை அடையாளம் காட்டியது சினிமா. சினிமாவை ஜெயலலிதாவின் வாழ்வில் பிரிக்க முடியாததொரு அங்கமாக்கியது, அவரது ‘அம்மா’ வேதவல்லி (எ) சந்தியா.பெற்றோர்களின் எஞ்சியிருக்கும் நீட்சிதான் பிள்ளைகள். சந்தியாவின் ஆரம்பகாலங்களுடைய நீட்சியாகவே ஜெயலலிதா வளர்ந்தார்.

சந்தியாவுக்கு, ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அதாவது பதினோராவது வயதிலேயே மணமாகிவிட்டது. புத்தகங்கள் படித்தல், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், நீச்சல் டென்னிஸ் ஆகியவற்றைக் கற்றார். கணவர் ஜெயராமின் மறைவுக்குப் பிறகு ஒரு கம்பெனியில் காரியதரிசியாக பணிபுரியத் தொடங்கினார். அவரது தங்கையின் அறிமுகத்தால்தான் சந்தியா சினிமாவுக்கு வந்தார். தன் பன்முகத் திறமைகளுக்கான களமாக சினிமாவைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகத்தான் இருந்தது.

இந்நிலையில்தான் தன் செல்ல மகள் அம்முவை ஆளுமை உள்ளவராக ஆக்குகிறார் சந்தியா. மூன்று வயதில் நடனம் கற்றுக் கொடுக்கத் தொடங்குவது, பிறகு பியானோ வாசிக்கக் கற்றுக்கொடுப்பது, காலச்சுழற்சியில் இலக்கியப் புலமை என சந்தியாவின் சுதந்திர நீட்சியாகத்தான் அம்முவாகிய ஜெயா வளருகிறார். ஒரு ஆளுமைக்கான அஸ்திவாரத்தை சந்தியாதான் அவருக்கு வித்திடுகிறார்.

சினிமாவில் இருந்தாலும் தன் பிள்ளைக்குச் சினிமா வேண்டாம் என முடிவெடுக்கும் சந்தியா, ஒரு கட்டத்தில் தன் முடிவினை மாற்றிக் கொள்கிறார். அம்முவும் சந்தியாவுடன் சினிமா ஷுட்டிங் ஸ்பாட்டுகளுக்குச் செல்வார். அனைத்தையும் அந்த வயதுக்கே உண்டான ஆர்வத்துடன் கண்கள் விரிய அணுகுவார். சினிமா நாடகம் என அவ்வப்போது தலைகாட்டிய அம்மு, முழுநேர நடிகையாக தன் பதினாறாம் வயதில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெண்ணிற ஆடை படம் வழியாக ஜெயலலிதா அறிமுகமாகிறார்.

அந்தப் படத்தில் அவர் அம்முவை நடிக்க வைப்பதாக இல்லை. ஶ்ரீதரின் நிர்பந்தத்தின் பேரில்தான் நடிக்கவைத்தார், ஆனால், ஒன்று மட்டும் நிதர்சனம், சினிமா என்னும் பெருநகரத்திற்குள் அம்முவை கரம் பிடித்து அழைத்து வந்து அதில் அவருக்கான பாதையை ஏற்படுத்தித் தந்தது சந்தியாவும் ஸ்ரீதரும்.

ஆனால், அம்மு சுதந்திரமாக வளர வகை செய்தாலும், ஒரு அம்மாவாக சந்தியா முழுமையான வெற்றி அடைந்தாரா? ஜெயலலிதா, ஒரு பேட்டியில் இவ்வாறு கூறுகிறார், “என் அம்மா இருந்திருந்தால், நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன், என் அப்பா இருந்திருந்தால் நான் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். சினிமா ஜெயலலிதா தேர்ந்தெடுக்க விரும்பிய பாதையாக இருந்திருக்கவில்லை. மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்ததால், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அவருக்கான இடம் காத்திருந்தது. மேலும் அவருக்குச் சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது. இந்திய ஆட்சிப்பணிக்காகப் படிக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தார். ஆனால், இறுதியில் நடந்தது வேறு.

விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் அம்மாவின் தேவையும் இருப்பும் தனக்கு எவ்வளவு அவசியமானதாக இருந்தது என்பதை அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘எந்தப் பொது நிகழ்ச்சிக்கும் செல்லும் முன் எந்தப் புடவையை உடுத்திக் கொண்டு தயாராகுவது என்கிற குழப்பத்துடன் பீரோவில் இருக்கும் அத்தனை புடவைகளையும் எடுத்து என் முன் விரித்துப் போட்டு விட்டு குழப்பத்தில் விழித்தபடி உட்கார்ந்திருப்பேன். அம்மா வருவார், ‘அம்மு! இன்னும் கிளம்பாம ஏன் உட்கார்ந்துட்டு இருக்கே? சரி !சரி! சீக்கிரம் இந்தப் புடவையைக் கட்டிக்கொண்டு கிளம்பு என்பார். நானும் அதனை உடுத்திக் கொண்டு கிளம்புவேன். ஆனால், என் அம்மா இல்லாமல் நான் கலந்துகொண்ட முதல் விழா சென்னை சினிமா ரசிகர்கள் நடத்திய பரிசளிப்பு விழாதான். அந்த விழாவுக்குச் செல்லும் முன்பு, என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவின் புகைப்படத்தின் முன்பு என்னுடைய புடவைகளை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். கண்களை மூடிக்கொண்டு அம்மாவை மனதில் நினைத்தபடி ஒரு புடவையைத் தொட்டேன். அதை உடுத்திக்கொண்டுதான் அன்றைய நிகழ்வுக்குச் சென்றேன்” என்கிறார்.

நடிகையாகப் பரிமாணம் எடுத்ததன் ஆரம்பக் காலங்களில் தான் ஷூட்டிங் விட்டு வீடு வந்ததும் அம்மா எங்கே என்று தேடுவதை வழக்கமாக வைத்திருந்ததைக் குறிப்பிடுகிறார். அம்மா வீட்டில் இல்லையென்றால், தன் அறைக்கே போக மாட்டாராம். அம்மா வந்ததும் அவருடன் பேசிவிட்டுதான் செல்வாராம். 1965-ல் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பின் மூலம் எம்.ஜி.ஆருடனான நட்பு பரிமளிக்கத் தொடங்கிய பிறகும் கூட அவருக்கு அம்மா சொல்தான் மந்திரமாக இருந்திருக்கிறது. யார் வந்து ‘நீ நன்றாக நடித்தாய், நடனமாடினாய்’ என்று சொன்னாலும் கூட, விருதுகளே தரப்பட்டாலும் கூட அம்மாவின் பாராட்டு ஒன்றைத்தான் அவர் முழுமையாக எதிர்பார்த்து இருந்திருக்கிறார். அன்றைக்கு ஷூட்டிங் செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்பதைக் கூட அம்முவுக்கு அவர் அம்மாதான் முடிவு செய்ய வேண்டும். அம்முவுக்கான சுதந்திரத்தை அவரது அம்மாவே கட்டமைத்தார் எனச் சொல்லலாம். 1971 முடிய ஜெயாவின் நடிப்பில் ஒவ்வொரு கட்டத்தையும் வடிவமைத்தது அவர்தான். அந்த வருடம் அக்டோபர் மாதம் இறக்கிறார் சந்தியா. அதுவரை ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒவ்வொரு கட்டமாகச் செதுக்கி வந்த சந்தியாவின் இன்மை அவருக்குப் பெருத்த இழப்பாக இருக்கிறது. அம்மா என்கிற ஒருவரை இழந்தது ஒருபக்கம் இருந்தாலும், வாழ்வில் தன் அடுத்த கட்டத்தை எப்படி நகர்த்திச் செல்வது என்று தெரியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார் ஜெயலலிதா.

1972-ல் தானும் தன் தாயும் சேர்ந்து கட்டிய வீட்டுக்கு வேதா இல்லம் எனப் பெயர்வைத்துக் குடிபுகுகிறார் ஜெயலலிதா. புதுமனைப் பிரவேசமும் அரசியல் பிரவேசத்துக்கான ஆயத்தமும் ஒருசேரத் தொடங்கியது எனலாம், அன்று தொடங்கி சரியாகப் பத்து வருடங்களில் அவரது அரசியல் பிரவேசம் நிகழ்கிறது. அம்மா இல்லை! அரசியலில் நுழைகிறார்!தலைவியாக்கப்படுகிறார்! ‘அம்மா’ எனப்படுகிறார்!

தன் அம்மாவுக்காக ஜெயலலிதா எழுதிய கவிதை ஒன்று

என் அன்பான தாய்க்கு!

உனக்கொரு அம்மா இருந்தால்

அவளை அன்பாகக் கவனித்துக் கொள்!

அவள் அமர்ந்திருந்த நாற்காலியை

வெறுமையாகப் பார்க்கும்வரை

அவளது அருமை உனக்குப் புரியாதென்பதை

இப்போதே அன்புடன் கவனி!

- ஐஸ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!