வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (06/12/2016)

கடைசி தொடர்பு:15:13 (06/12/2016)

சசிகலாவிடம் சமரசம் பேசிய வெங்கய்ய நாயுடு!  -முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்ற பின்னணி 

.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. ' புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வமே நியமிக்கப்பட வேண்டும் என்ற மோடியின் கோரிக்கை நிறைவேறிவிட்டது. ஆட்சி அதிகாரத்தில் மத்திய அரசின் கரங்கள் வலுப்பெற்றுவிட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்துவிட்டார். இப்படியொரு சூழல் ஏற்படலாம் என்பதை அறிந்து முதல் நாள் இரவே அனைத்து எம்.எல்.ஏக்களும் சென்னை வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டது. நேற்று காலையில் அப்போலோ மருத்துவமனையின் தரைத்தளத்தில் அதிகாரபூர்வமற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் உடல்நிலையின் கவலைக்கிட சூழல் பற்றி கண்ணீர் மல்க விவரித்தனர் அ.தி.மு.க நிர்வாகிகள். இதன்பின்னர், நேற்று இரவு அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அதிகாரபூர்வ கூட்டம் நடைபெற்றது. 

 "முதல்வர் இறப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியான பிறகு, ஆளுநர் மாளிகையில் நள்ளிரவு 1.30 மணியளவில் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். இதைத் தொடர்ந்து அதிகாலை 3.30 மணியளவில் உறங்கச் சென்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். எந்த உடன்பாடும் இல்லாமல்தான், ஓ.பி.எஸ் பதவியேற்புக்கு சம்மதித்தார் சசிகலா" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம், " அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல்நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல்கள் இருந்ததால், ஆட்சி அதிகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் சசிகலா.

மத்திய அரசின் கவனத்துக்கு நிலைமைகள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட, அவசரமாக சென்னை திரும்பிய ஆளுநர், அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று நிலைமைகளை கவனித்தார். இதுகுறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். 'முதல்வருக்குப் பிறகு புதிய முதல்வராக யாரை நியமிப்பது' என்ற பேச்சு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்படுவதை சசிகலா விரும்பவில்லை. ஆனால், 'அவை முன்னவர் என்ற அடிப்படையிலும் இரண்டு முறை முதல்வராக இருந்தவர் என்பதாலும் ஓ.பி.எஸ் தொடரட்டும்' என மத்திய அரசின் பிரநிதிகள் தெரிவித்தனர். 

இதை ஏற்காத சசிகலா, 'அமைச்சரவையில் உள்ள வேறு யாராவது வரட்டும்' எனக் கூறியிருக்கிறார். தம்பிதுரை பெயர் கடைசி வரையில் பரிசீலனையில் இருந்தது. ஆனால், டெல்லியின் சாய்ஸாக ஓ.பி.எஸ் மட்டுமே இருந்தார். முதல்வருக்கான சிகிச்சைகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், வெளியில் ஆட்சி அதிகாரம் குறித்த பஞ்சாயத்து நீண்டு கொண்டிருந்தது. மாலையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வந்ததும், அவரிடம் விரிவாக விவாதித்தார் சசிகலா. ' இப்படியொரு இக்கட்டான சூழலில் இதுகுறித்து தேவையற்ற விவாதங்களை வளர்க்க வேண்டாம். இப்போதைக்கு ஓ.பி.எஸ் தொடரட்டும். ஜெயலலிதாவின் விருப்பமாகவும் ஓ.பி.எஸ் இருந்தார். எனவே, தொண்டர்கள் மத்தியிலும் பிரச்னை வராது' என விளக்கியிருக்கிறார் நாயுடு. ஒருகட்டத்தில், ' மத்திய அரசின் விருப்பமாக ஓ.பி.எஸ் இருக்கிறார். இப்போதுள்ள சூழலில் இந்த நிலை தொடரட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என சசிகலா உறவினர்கள் அமைதியாகிவிட்டனர். ' நாம் சொல்வதை ஓ.பி.எஸ் கேட்பார்' என உறுதியாக நம்புகிறார் மோடி. ஆளுநர் மூலமாக அனைத்து காய் நகர்த்தல்களையும் செய்து முடித்துவிட்டது மத்திய அரசு" என்றார் ஆதங்கத்தோடு. 

- ஆ.விஜயானந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை