ஜெ.ஜெயலலிதாவாகிய ஆளுமையின் அடையாளம்!

ஜெயலலிதா

லகின் மிகப்பெரிய வல்லரசே ஒரு பெண்ணை தனது அரியணையில் ஏற்றிப் பார்க்க விரும்பாதபோது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து... இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைக்கும் பலம் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் உண்டு. சினிமா நடிகை, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் இப்படி பல முகங்கள் கொண்ட ஜெயலலிதாவின் ஆளுமை முகம் சிறப்பு வாய்ந்தது. ஒரு மேலாண்மை பாடத்தில் ஒரு தலைவனுக்குரிய ஆளுமைகளாக என்ன கூறப்பட்டுள்ளதோ... அத்தனையும் அவரின் இயல்பான குணங்களாகவே இருந்துள்ளன.

ஒன் வுமன் ஆர்மி!

ஜெ. வின் முதல் 20 வருடங்கள் அம்மாவின் வளர்ப்பு என்றால், அடுத்த 20 வருடங்கள் எம்.ஜி.ஆர் வளர்ப்பு. சினிமா மற்றும் அரசியலில், முதல் 40 வருடங்கள் யாரோ ஒருவரின் கண்காணிப்பிலேயே இருந்த ஜெயலலிதா, பின்னர் அனைவருடனும் சகஜமாக பழகி, கட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் பதில் கூறி, ஒரே மூச்சில் 20 மேடைகளில் பேசி... 1990-க்குப் பிறகு, குறுகிய வட்டம், சிலரோடு மட்டுமே நெருக்கமான பழக்கம் என பெரும்பாலும் தனியாகவே இருந்திருக்கிறார். ’ஒரு தலைவன் எந்த அளவுக்கு தனது பர்சனல் பக்கத்தைத் தனிமைப்படுத்திக் கொள்கிறானோ... அவனால் பொதுவெளியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’ என்பது மேலாண்மை விதி. இது, ஜெயலலிதாவின் 25 வருட அனுபவம். ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுகளோ... கட்சி பொதுக்கூட்டங்களோ அவர், பேசும்போது குறுக்குப் பேச்சுக்கு இடமிருக்காது... சரியோ, தவறோ? ஜெயலலிதாவின் சில தீர்க்கமான முடிவுகள்... யார் என்ன சொன்னாலும் இறுதி வடிவம் ஜெயலலிதா என்ற தனி ஒரு நபரால் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில், ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.

யாருக்கும் முக்கியத்துவம் இல்லை!

ஒரு தலைவன் எப்போதுமே ஒருதலைபட்சமான முடிவுகளை எடுக்கக் கூடாது. குறிப்பிட்ட நபருக்கு மட்டும் சாதகமாக இருக்கக் கூடாது. இதனை தனது அமைச்சரவை மாற்றங்களிலும், கட்சிப் பதவிகளிலும் அசாதாரணமாக செய்து காட்டியுள்ளார் ஜெயலலிதா. தவறு என்று வந்துவிட்டால், நம்பிக்கையான அமைச்சர் எனப் பெயர்பெற்றவருக்குக்கூட அடிப்படை உறுப்பினர் பதவிகூடக் கொடுக்காமல் ஒதுக்கிவைப்பதிலும் சரி, திறமையான ஒருவர் கீழ் நிலையில் இருந்தால்... அவரை உரிய இடத்துக்குத் தூக்கிவிடுவதிலும் ஜெயலலிதாவின் செயல்களில் இயல்பாகவே உள்ள குணம். பிடிக்காது என்றால் பிடிக்காதுதான். இந்த அசாதாரண மனோபாவம்தான் ஜெயலலிதாவின் அடையாளம்.

துணிச்சல்!

‘‘ஒரு விஷயத்தைத் தவறாகச் செய்தால் ஒப்புக்கொள்ளுங்கள், அதனை அடுத்த முறை நடக்காமலும், சென்ற முறையைவிடச் சிறப்பாகவும் செய்துகாட்டுங்கள்’’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் வரிகள். ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் தவறான முடிவெடுத்துவிட்டீர்களா என்ற கரண தப்பாரின் பேட்டியாக இருக்கட்டும், வழக்குகள் நிரூபிக்கப்பட்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்த கர்ஜனையாகட்டும், துணிச்சல் இல்லாவிட்டால் ஜெயலலிதா என்றைக்கோ அரசியலைவிட்டு வெளியேற்றப்பட்டிருப்பார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் கர்ஜனை மிகுந்த வார்த்தைகள் அவ்வளவு பெரிய அரங்கில் அனைவரையும் ஒரே பக்கமாக இழுக்கும் ஆளுமை நிறைந்தவை. கருணாநிதியை எழுத்திலும், பேச்சிலும் வெல்வது கடினம் என்றால், அதற்கு சற்றும் சளைக்காதவர் ஜெயலலிதா.  இந்தத் துணிச்சல்தான் 110 விதியில் அத்தனை அறிவிப்புகளையும் யார் விமர்சித்தும் கேட்காமல் அரங்கேற்றியது. இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதாவின் நிழல்கூடப் பிடிவாதமாகத்தான் இருக்கும். அதுதான் ஜெயலலிதா. தன் தவறுகளில் இருந்து சட்டென்று மீண்டு வெற்றிபெறும் குணம் கொண்டவர் ஜெயலலிதா.

நான், எனது - தலைமை + ஆளுமை:

அனைத்துத் தலைவர்களின் உரையும், நாம், நமது என்ற போக்கிலேயே இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஜெயலலிதா. ‘எனது ஆட்சியில் நடந்த சாதனைகள்’, ‘மக்களுக்காக நான்... மக்களால் நான்’ எனும் தனிமனித விஷயத்தை முன்னிறுத்துவதில் ஜெயலலிதா கில்லாடி. ‘வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல்’ என்ற வாசகம் ஜெயலலிதாவுக்குத்தான் பொருந்தும். இவர், வீழ்ந்தபோதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் திரும்ப வரவேண்டும் என்று ஆக்ரோஷமாக யோசிக்கும் மனோபாவத்தை இவரிடம் பார்க்க முடியும். ஜெ.வுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர்களும் சரி, ஜெயலலிதாவுக்கு பின் அரசியலுக்கு வந்தவர்களும் சரி... கட்சியில் ஜெயலலிதாதான் எல்லாம் என்று நினைக்கவைத்தது அவரது ஆளுமைதான். அதுதான் அனைவரையும் இவரைப் பார்த்து இரும்பு மனுஷி எனச் சொல்ல வைத்துள்ளது.

ஜெ.ஜெயலலிதா எனும் ரோல்மாடல்!

தமிழ்நாட்டில் கட்சி, அரசியல் ஆர்வம் இல்லாத பல பெண்களிடம் சென்று... ‘உங்கள் ரோல்மாடல் யார்’ என்றால், ‘ஜெயலலிதா’ என்ற பதில் சற்றும் தாமதமில்லாமல் வரும். இந்திரா காந்திக்கு நிகரான பிரச்னையைச் சந்தித்தவர், சொந்தக் கட்சியாலேயே சில காலம் ஓரங்கட்டப்பட்டவர். வழக்காக இருந்தாலும் சரி, பர்சனல் சறுக்கல்களாக இருந்தாலும் சரி... அதிலிருந்து மீண்டுவர மிகவும் கடுமையாகப் போராடிக்கொண்டே இருந்திருக்கிறார் ஜெ. கடைசியாக அவரது உடல்நிலையோடும்கூட அவர் போராடிக்கொண்டுதான் இருந்திருக்கிறார். ‘‘உங்களை யாரோடும் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். அது, உங்களையே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்’’ என்பது ஹிட்லரின் வரிகள். ஜெயலலிதா தன்னை யாரோடும் ஒப்பிடாத தலைவர் என்பது அனைவரும் அறிந்ததே. 

இன்று, அவர் மறைந்துவிட்டார் என்றாலும்... நான், ஜெயலலிதாபோல இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரது சமூக வலைதள பதிவுகளில் பிரதிபலிக்கிறது. ‘ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்துவிட்டார்’ என்பதை, ஒரு நாடு இத்தனை சீரியஸாகப் பார்க்கிற‌து என்றால்... அது, ஜெயலலிதாவாக மட்டுமே இருக்க முடியும். ஒரு பெரிய நிறுவனம், ஒரே தலைவனின் கீழ் நீண்டகாலம் நன்றாக இயங்குகிறது. திடீரென அவரை இழக்கிற‌து என்றால், அங்கு மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும். அந்த நிலைதான், அ.தி.மு.க-வுக்கும். ஜெயலலிதா போன்ற தனிமனித ஆளுமையின் வெற்றிடத்தை நிரப்ப பல வருடங்கள் ஆகும். எந்த ஒரு பெண்ணாவது மிகுந்த துணிச்சலோடு நான், எனது என்ற தொணியில் பேசினால் முதலில் நினைவுக்கு வருவது ஜெயலலிதாவாகத்தான் இருக்கும்.

- ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!