'கட்சியை விட்டு எப்போதும் வெளியேறக் கூடாது..!'- ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆர் பெற்ற சத்தியம் #JayaMemories | "You should never leave from party" Words of MGR made Jaya to stay in ADMK #JayaMemories

வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (07/12/2016)

கடைசி தொடர்பு:09:59 (07/12/2016)

'கட்சியை விட்டு எப்போதும் வெளியேறக் கூடாது..!'- ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆர் பெற்ற சத்தியம் #JayaMemories

ஜெயலலிதா

1965-ம் ஆண்டு,...சென்னையின் பிரபல ஸ்டுடியோ திடீரென பரபரப்படைந்தது. படத்தின் கதாநாயகன் படப்பிடிப்பு தளத்துக்குள் வந்து கொண்டிருந்தார். வாசலில் நின்ற காவலாளி முதல் படத்தின் இயக்குனர் வரை எழுந்து நின்றனர். ஆனால், படத்தின் கதாநாயகியாக நடிக்கும் நடிகை (ஜெயலலிதா) ஒரு ஈஸி சேரில் அமர்ந்தபடி ஆங்கில நாவலை வாசித்துக் கொண்டிருந்தார்.

“குழந்தே, சின்னவர் வராரு கொஞ்சம் எழுந்து நில்லம்மா” என நடிகையிடம் சென்று காதை கடித்தார் இயக்குனர்.

இயக்குனர் சொன்னதை ஏற்கும் எண்ணமிருந்தாலும், தன் விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்துவதை நடிகை விரும்பவில்லை. இயக்குனரை ஒருபார்வை பார்த்தபடி அழகிய ஆங்கிலத்தில் நடிகை சொன்னார். “ஏன் எழுந்து நிற்கவேண்டும்? அவர் இந்தப் படத்தின் கதாநாயகன், என்றால் நான் கதாநாயகி. தொழில்முறையில் இருவரும் நடிகர்கள். வித்தியாசம் என்பது கதாபாத்திரத்தில்தானே, அவர் என் அருகே வரும்போது எழுந்து வணக்கம் தெரிவிக்கிறேன்” என்றார்.

இயக்குனர் வாயடைத்துப் போனார். விஷயம் கதாநாயக நடிகரின் கவனத்துக்குச் சென்றது. 'நடிகையின் எதிர்காலம் அவ்வளவுதான்' என படப்பிடிப்பு தளத்தில் பேசிக்கொண்டனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நடிகைதான் அந்தக் கதாநாயகனுடன் அதிகப் படங்களில் நடித்த நடிகை எனப் பின்னாளில் புகழடைந்தார். அந்த நடிகை முதல்வர் ஜெயலலிதா. புகழின் உச்சியில் இருக்கும் தன்னிடம் வாய்ப்புகளுக்காகப் போலியாகக்கூட நடிக்க விரும்பாத ஜெயலலிதாவின் குணத்தால் கவரப்பட்ட அந்த நடிகர் எம்.ஜி.ஆர்.

தன்னிடம் ஆதாயம் அடைவதற்காகப் போலியாக வணங்குபவர்களைப் பார்த்து, பார்த்துச் சலித்துப் போன எம்.ஜி.ஆர் என்ற மனிதரின் உள்ளத்தில் ஜெயலலிதா அழுத்தமாகப் பதிந்து போனார். 'ஆயிரத்தில் ஒருவன்'ங திரைப்படம் எம்.ஜி.ஆருக்கு ஒரு புதிய கதாநாயகியை மட்டும் கொடுக்கவில்லை. ஒரு அரசியல் வாரிசையும் கொடுத்தது.

ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்ததில் வயதான நடிகர் என்ற தன் மீதான இமேஜ் உடைந்து போனதை எம்.ஜி.ஆர் உணர்ந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் படங்களில் இடம்பெற்றார் ஜெயலலிதா.

தனக்கென ஒரு தெளிவான பார்வை, அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத குணம், போலியாய் பழகாத பண்பு, இதுதான் அன்றைய ஜெயலலிதா. 

எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்வில் இடம்பெற்றது எப்படி?

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, இயக்குனர் பி.ஆர் பந்துலுவின் குடும்ப நண்பர். ஒருமுறை கன்னடத் திரையுலக பிரமுகர் இல்லத் திருமணம் ஒன்றில் மகள் ஜெயலலிதாவுடன் சந்தியா கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு வந்திருந்த பி.ஆர் பந்துலு, ஜெயலலிதாவை தன் படத்தில் நடிக்க வைக்க விரும்பினார். சந்தியாவிடம் தன் விருப்பத்தை வெளியிட்டார் பந்துலு. "படிக்கிற பிள்ளை. நடிக்க அனுமதிக்க முடியாது" எனச் சொல்லிப் பார்த்தார் சந்தியா. பந்துலு உறுதியாக நின்றார். மிகுந்த தயக்கத்துக்குப் பின்னர் சந்தியா சம்மதித்தார். 'சின்னத கொம்பே' என்ற கன்னடப்படம் ஜெயலலிதா நடித்த முதல் படமாக வெளியானது.

ஜெயலலிதாஇதன் பின்னர், ஶ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' படத்தின் கதாநாயகியானார் ஜெயலலிதா. படத்தின் படப்பிடிப்பு முக்கால் பாகம் முடிந்த நிலையில்தான், எம்.ஜி.ஆருடன் நடிக்கும் அதிர்ஷ்டம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. தனது முந்தைய சில தோல்விப் படங்களால் துவண்டு போயிருந்த பி.ஆர் பந்துலு, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் டைரக்ட் செய்ய விரும்பினார். இதற்கு எம்.ஜி.ஆர் சம்மதம் தெரிவித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக புதிய கதாநாயகியைப் போடலாம் என்று முடிவு செய்தார் பந்துலு. ஆழ்ந்த யோசனையில் பந்துலுவுக்கு ஜெயலலிதா நினைவு வந்தது. எம்.ஜி.ஆரிடம் சொன்னார். அன்று மாலையே ராமாவரம் தோட்டத்தில் இருந்த மினி புரஜெக்டரில் 'சின்னத கொம்பே' திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆர் முகத்தில் புன்னகை தவழ்ந்ததைக் கண்டார் பந்துலு. அவரது கார் ஜெயலலிதாவின் மாம்பலம் இல்லத்துக்கு விரைந்தது. இதுதான் 'ஆயிரத்தில் ஒருவன்' பயணத்தில் ஜெயலலிதா இணைந்த வரலாறு.

ஆனால், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சந்திப்பு இதுமுதல் தடவையல்ல. ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை முதன்முதலாகச் சந்தித்தது தன் ஐந்து வயதில். அப்போது எம்.ஜி.ஆருடன் 'பாக்தாத் திருடன்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் சந்தியா. பெங்களுரு கான்வென்டில் படித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, கோடைகால விடுமுறைக்காக சென்னைக்கு வந்திருந்தார். அன்று அம்மாவுடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த சுட்டிப்பெண் ஜெயலலிதாவை செட்டில் இருந்தவர்கள் துாக்கி, கொஞ்சிக் கொண்டிருந்தனர். ஷாட் இடைவேளையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யார் என விசாரித்தார். 'சந்தியா பெண்ணா' எனக் கேட்டு ஆச்சர்யத்துடன் அவரை கன்னத்தில் கிள்ளி பெயரைக் கேட்டார். அழகு ஆங்கிலத்தில் பேசிய ஜெயலலிதாவின் குறும்புத்தனத்தை ரசித்து விட்டு தலையில் கைவைத்து ஆசிர்வதித்துவிட்டு மீண்டும்ஷாட்டுக்கு கிளம்பினார்.

முதல் சந்திப்புக்குப் பின், 7 வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆருடனான இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது.  அப்போது, சென்னை சட்டக்கல்லுாரியில் ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் தலைமை வகித்தார். ஒரு மாணவனின் 'மிமிக்ரி' நிகழ்ச்சியில் மெய் மறந்த எம்.ஜி.ஆர். தன் கைக்கடிகாரத்தை அவிழ்த்து அவனுக்குப் பரிசளித்தார். அடுத்து நடனமாடிய ஜெயலலிதாவுக்கு பலத்த கைதட்டல். எம்.ஜி.ஆருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதாவது பரிசு தந்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தவர், உடனடியாக தன் உதவியாளரை அனுப்பி வெள்ளிக் கோப்பை ஒன்றை வாங்கி வரச்செய்து, மேடையிலேயே அதை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி நடந்து சரியாக 25 வருடங்கள் கழித்து, மதுரையில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாட்டில் எம்.ஜி.ஆருக்கு வெள்ளி செங்கோல் வழங்கினார் ஜெயலலிதா. இந்த 25 வருடங்களில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இடையே பல்வேறு உணர்வுப்பூர்வமான விஷயங்களும், சின்னச்சின்ன கருத்து மோதல்களும் நடந்து முடிந்திருந்தன.

ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி சக்கைபோடு போட்டது. தன்னுடன் நடித்த, நடிக்கும் கதாநாயகிகளிலிருந்து ஜெயலலிதா முற்றிலும் மாறுபட்டவர் என்கிற தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அநாவசிய பேச்சுக்கள் அவரிடம் இருக்காது. ஆங்கில நாவல்கள்தான் அவரது துணை. தாய் சந்தியாவின் தோழிகள்தான் அவரது தோழிகள். தாயை மீறி எந்த விஷயங்களையும் செய்ய மாட்டார். யாருடனும் அளவான பேச்சுதான். யாரைப் பற்றியும் தேவையின்றி பேசுவது அவருக்குப் பிடிக்காது. பத்திரிகையாளர்களானாலும் பரபரப்புக்காக எழுதுபவர்களிடம் பத்தடி துாரம் தள்ளியே நிற்பார். ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த பல படங்கள் சக்கைபோடு போட்டன. இதனால், இவர்கள் வெற்றி ஜோடி என விநியோகஸ்தர்களால் கணிக்கப்பட்டது. 


பரபரப்பான சினிமா வாழ்வில் ஜெயலலிதாவுக்கு இடிவிழுந்தது போன்ற சோகம் நிகழ்ந்தது. தாயார் சந்தியா எதிர்பாராதவிதமாக மறைந்தார். 'அம்மு' என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அருகில் நம்பிக்கையான மனிதர்கள் இல்லாததால், அவரது நல்லது, கெட்டதுகளில் எம்.ஜி.ஆர் பங்கேற்கத் தொடங்கினார்.தொழில் முறையைத் தாண்டி எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார். ஜெயலலிதாவின் மீது அவர் பாசத்தைக் காட்டினார். சில வருடங்களில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறவில் விரிசல் என கோடம்பாக்கம் பேசிக்கொண்டது. 

தி.மு.க-விலிருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கிய சமயம், அவருக்குக் கட்சியில் தன்னை அடுத்து கவர்ச்சிகரமான பேச்சாளராக ஒருவர் தேவைப்பட்டார். பிரபலமான நடிகர்கள் பலர் அவரது கட்சியில் இருந்தாலும், தன்னுடன் இணைந்து நடித்த நடிகைகளில் யாரேனும் பேச்சாளராக இருந்தால் நலம் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதற்காக, தன்னுடன் நடித்த சில நடிகைகளை அவர் அணுகினார். பலரும் தயங்கினர். ஜெயலலிதாவிடம் அவர் இதுபற்றிப் பேசவில்லை. எம்.ஜி.ஆர் பரபரப்பான அரசியல்வாதியாக உருவெடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடமிருந்து சற்றே விலகியிருந்தார். 

1980-களின் தொடக்கத்தில் ஜெயலலிதா, தன் பெயரில் நாட்டியக்குழு ஒன்றைத் தொடங்கி சென்னை சபாக்களில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். ஒருமுறை ராணி சீதை ஹாலில் நடந்த ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்,  பாராட்டிச் சென்றார். எம்.ஜி.ஆருக்கு இந்தத் தகவல் போனது. 

இயல்பிலேயே இளகிய மனசுக்காரரான எம்.ஜி.ஆர், அ.தி.மு.க மேடைகளில் ஜெயலலிதாவின் நாட்டியக் குழுவுக்கு வாய்ப்பளித்தார். ஜெயலலிதாவைக் காண கூடிய கூட்டம், எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரியதெம்பைத் தந்தது. 1982-ல் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். 1982-ம் வருடம் ஜூன் மாதம் 4-ம் தேதி அ.தி.மு.க உறுப்பினராகச் சேர்ந்த ஜெயலலிதாவை சத்துணவுத் திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் ஆக்கினார். அடுத்த 35 ஆண்டுகள் ஜெயலலிதா பரபரப்பு மிக்க அரசியல்வாதியாக உருவெடுப்பதற்கான விதை இங்கிருந்துதான் தொடங்கியது.

சத்துணவுத் திட்ட ஆய்வுக்காகச் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களிடமும், கட்சியினரிடமும் மனுக்களைப் பெற்று, எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார். கட்சியினரின் பிரச்னைகளை எம்.ஜி.ஆரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததோடு, அவற்றைத் தீர்த்து வைக்கவும் செய்தார். எம்.ஜி.ஆருக்கு இது பிடித்திருந்தது.

1982-ல் கடலூர் மாநாட்டில் 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் பேசிய ஜெயலலிதாவுக்கு சில மாதங்களில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை அளித்துப் பெருமை சேர்த்தார் எம்.ஜி.ஆர். இதன் பின்னர், அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் வளர்ச்சி மேலும் அதிகரித்தது.

திருச்செந்துார் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரப் பணிகளில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளித்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு எதிராக, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிலர் அளித்த புகார்களை எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டாரே தவிர, அதற்காக எந்த கோபமும் கொள்ளவில்லை. மாறாக, 'அரசியல் களத்தில் ஆர்வமாய் இருக்கும் ஒரு திறமையான பெண்ணுக்கு இத்தனை எதிர்ப்புகளா?' என எம்.ஜி.ஆர் உருகினார். ஜெயலலிதாவுக்கு கட்சியில் தனிப்பட்ட செல்வாக்கும், ஆதரவும் பெருகத் தொடங்கியது.

எம்.ஜி.ஆரின் ஆதரவு இருந்த நிலையில், கட்சி அலுவலகத்துக்கு சரியாக வருவதில்லை என பொதுச் செயலாளர் ராகவானந்தத்துக்கே விளக்கம் கேட்டு ஜெயலலிதா நோட்டீசு அனுப்பிய விவகாரம் கட்சிக்குள் மட்டுமில்லாது வெளியேயும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. எதிரும் புதிருமாகக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகி வருவதை எம்.ஜி.ஆர் உணர்ந்தார். கட்சியில் நிலவிய குழப்பத்தைத் தீர்க்கும் வகையிலும், டெல்லியில் மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள திறமையான நபர் தேவை என்பதாலும் ஜெயலலிதாவை அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினராக்கினார் எம்.ஜி.ஆர்.

தமிழக அளவில் எம்.ஜி.ஆர் தனக்கு அளித்த புகழ் வெளிச்சத்தை இந்திய அளவில் பரவவிட நினைத்த ஜெ, அதை மாநிலங்களவையில் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டினார. 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், ஜெயலலிதாவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பயன்படுத்தி, கட்சியில் இருந்து ஜெ-வை மேலும் ஓரங்கட்ட சிலர் முயன்றனர். 

மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்றபோது, ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகின. அப்போது லோக்சபாவுக்கும், சேர்த்து தமிழக சட்டமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த நிலையில், பிரசாரப் பணிகளிலிருந்து ஜெயலலிதா திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டார். ஓரிரு கூட்டங்களுக்கு மட்டும்தான் அழைப்புகள் வந்தன. தமிழகம் முழுவதும் தன் ஆதரவாளர்களைக் கொண்டு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. சென்டிமெண்டாக தன் அரசியல் குரு, எம்.ஜி.ஆர் போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல் கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொன்னார். பிரசார மேடையிலேயே கட்சிக்குள் உள்ள எதிர்அணியைப் பற்றி விமர்சனம் செய்தார். பதிலுக்கு ஜெயலலிதாவைப் பற்றி எதிரணியினரும் விமர்சித்தனர். இதையடுத்து, ஜெயலலிதாவின் ராஜ்யசபா துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதாக, எம்.ஜி.ஆர் பெயரில் அமெரிக்காவில் இருந்து டெலக்ஸ் செய்தி வந்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிராமங்கள் தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டார். உருக்கமாகப் பேசினார். மக்களிடம் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனிடையே உடல்நலம் தேறி 1985-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி எம்.ஜி.ஆர் சென்னை திரும்பினார். எதிரணியினர் விமான நிலைய காத்திருப்பு அறையில் ஜெயலலிதாவை தடுத்ததாகச் சொல்லப்பட்டது.

சில தினங்கள் கழித்து, கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை ஜெயலலிதா சந்தித்தார். கட்சியில் தனக்கு எதிராக நடந்தவற்றை எல்லாம் பட்டியலிட்டார். எதற்கும் கவலைப்படாமல் கட்சி வேலைகளைப் பார்க்கும்படி சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர். அடுத்த சில நாட்களில் ஜெயலலிதாவிடம், கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என 'அண்ணா' நாளிதழில் எம்.ஜி.ஆர் அறிவிப்பு வெளியிட்டார்.

கட்சியில் நிலவும் கோஷ்டிப்பூசலைத் தவிர்த்து, ஒருங்கிணைக்கும் திறமையும் தகுதியும் ஜெயலலிதாவுக்கு இருந்ததை எம்.ஜி.ஆர் மறுக்கவில்லை. ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள், கட்சி போனாலும் பரவாயில்லை, ஜெயலலிதாவை ஒழித்தால் போதும் என்கிற நிலைமைக்கு வந்திருந்ததையும் எம்.ஜி.ஆர் உணர்ந்தே இருந்தார். 1985-ம் ஆண்டு செப்டம்பரில் ஜெயலலிதாவை மீண்டும் கொள்கைப் பரப்புச் செயலாளராக்கினார். ஆச்சர்யம் என்னவென்றால், ஜெயலலிதாவிடம் இருந்து பறிக்கப்பட்ட அந்தப் பதவிக்கு எம்.ஜி.ஆர். அதுவரை வேறு யாரையும் நியமிக்கவில்லை.

ஜெயலலிதா எம்.ஜி.ஆர் அவருக்கு அளித்த முக்கியத்துவமும் எதிரணியை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் பின்னடைவைச் சரிகட்டித் தொண்டர்களை உற்சாகப்படுத்த மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டை கூட்டச் சொல்லியிருந்தார் எம்.ஜி.ஆர். மாநாட்டுப் பேரணியை தொடங்கி வைக்கும் வாய்ப்பும் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. அதே மேடையில் எம்.ஜி.ஆருக்கு தலைமைக்கழகம் சார்பில் வெள்ளி செங்கோலை வழங்கி, அவரது காலில் விழுந்து வணங்கினார் ஜெயலலிதா. தனக்கு அளிக்கப்பட்ட செங்கோலை ஜெயலலிதாவிடம் திருப்பிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இது எதேச்சையாக நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்டு நடந்ததா? என்பது இன்றளவும் புரியாத புதிர். ஆனால் இந்த நிகழ்வை, 'எம்.ஜி.ஆருக்குப் பின் கழகத்தினை ஏற்று நடத்தப்போகும் தன் வாரிசை அடையாளம் காட்டும் முகமாகத்தான் எம்.ஜி.ஆர் செங்கோலை ஜெயலலிதாவிடமே திருப்பியளித்ததாக  ஆதரவாளர்கள் பேசிப்பேசி மாய்ந்து போனார்கள். அதேநேரம் ஜெயலலிதாவிடம் சில மாற்றங்கள் தென்பட்டன. அந்த வருடம் ஆர்.எம். வீரப்பன் பிறந்த நாளுக்கு அவரது வீடு தேடிப் போய் வாழ்த்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின் அறிவுறுத்தலில்தான், இது நடந்ததாகப் பேசப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 1987-ம் வருடம் டிசம்பர் 24-ம் தேதி மறைந்தார். எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்கச் சென்றவருக்குத் தோட்டத்தில் பெரும் அவமதிப்பு நிகழ்ந்தது. 


ராஜாஜி ஹாலில் சொட்டுத்தண்ணீரும் அருந்தாமல் எம்.ஜி.ஆரின் அருகில் அமர்ந்திருந்தார். அப்படி ஒரு புகைப்படம்தான் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற அரசியல் சாணக்கியத்தனம் அவருக்கு இருந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் கட்சி இரண்டாக உடைந்தது. 

எம்.ஜிஆர் இறுதி ஊர்வலம்

"இத்தனை துயரங்களுக்கும் இடையில் கட்சியை விட்டுச் செல்லாததற்கு காரணம் தன் தாயார் சத்யா படத்தின் மீது எம்.ஜி.ஆர் தன்னிடம் சத்தியம் வாங்கியதே என்று தான் செல்லும் கூட்டங்களில் எல்லாம் எம்.ஜி.ஆருக்கும் தனக்கும் உள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார் ஜெ.

1989-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக ஜெ அணி, 27 இடங்களில் வென்றது. அதிமுக ஜானகி அணி, பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அணியுடன் இணைந்து ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வானது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991-ம் வருடம் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க காங்கிரஸ் உடன் கூட்டணி கண்டது. ராஜிவ் காந்தி மரணத்தினால் எழுந்த அனுதாப அலையும் அ.தி.மு.க அணிக்கு அமோக வெற்றியைத் தேடித் தந்தது. அ.தி.மு.க கூட்டணி 225 தொகுதிகளை வென்று முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அ.தி.மு.க என்ற தனிமனித ஈர்ப்பினால் உருவான ஒரு கட்சியின் ஆயுளை ஜெயலலிதா போன்ற ஒருவரே நீட்டிக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் எம்.ஜி.ஆர்.

1991-ல் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்ற செய்தி வந்தபோது ஜெயலலிதாவை விட எம்.ஜி.ஆரின் ஆன்மா பெரும் நிம்மதியடைந்திருக்கும். காரணம் எம்.ஜி.ஆரின் இறுதி ஆசை அதுவாகத்தான் இருந்தது.

-எஸ்.கிருபாகரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்