வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (06/12/2016)

கடைசி தொடர்பு:18:13 (06/12/2016)

பெண்களின் முன்னேற்றத்துக்கு கை கொடுத்த ஜெயலலிதாவின் 10 திட்டங்கள்!

ஆண்கள் மட்டுமே நீடித்த ஆதிக்கம் செலுத்தக்கூடிய அரசியலில், பிரகாசிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அப்படி ஜானகி ராமச்சந்திரனைத் தொடர்ந்து, தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வராகப் பொறுப்பேற்றார் ஜெயலலிதா. 1991, 2001, 2002, 2011, 2015, 2016-ம் ஆண்டு காலகட்டங்களில் முதல்வராக பதவி வகித்ததன் மூலமாக, தமிழகத்தில் அதிக முறை முதல்வராக பதவி வகித்தவர் என்ற பெருமையும் ஜெயலலிதாவையே சேரும்.

ஒரு பெண்மணியாக அரசியலில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தாலும், முதலமைச்சராக தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. குறிப்பாக, பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி மகளிர் முன்னேற்றத்திற்கு ஏணியாக இருந்தார் அந்த இரும்புப் பெண்மணி. பெண்களுக்கான அத்தகைய முன்னோடித் திட்டங்களில், சிறந்த 10 திட்டங்கள் இங்கே...

 1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்
1992-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. அத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் 50,000 ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25,000 வைப்புத் ரூபாயும் இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தால் கிடைக்கும் தொகை, ஏழைப் பெண்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளுக்கு உதவியது, லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றனர்.

2. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
இது தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்றாலும்,  இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம், படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் என அதை உயர்த்தினார் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டு 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, இத்திட்டத்தில் வழங்கப்பட்ட உதவித் தொகையுடன், தாலிக்கு வழங்கும் தங்கத்தின் அளவை 8 கிராமாக உயர்த்தி வழங்கினார் ஜெயலலிதா. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு பல ஆயிரம் பெண்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

3. தொட்டில் குழந்தை திட்டம்
பெண் குழந்தைகள் வளர்ப்பை சுமையாக நினைத்து, அதிக அளவில் பெண் சிசுக்கொலை நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில், 1992-ம் ஆண்டு ஜெயலலிதா கொண்டுவந்த சிறந்த திட்டம், தொட்டில் குழந்தை திட்டம். இத்திட்டத்தின் மூலம், பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர் அதை அரசின் பதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்பட, அந்தக் குழந்தைகள் அரசு மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களால் வளர்க்கப்படுவார்கள். இத்திட்டத்தால், தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

4.  சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம்
பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. இந்த திட்டத்தின்படி கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்கள், மாணவிகள், இல்லத்தரசிகள் மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், பெண்களுக்கு ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வாக அமைந்தது.

 

5. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம்
ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடையை கண்காணித்து, அவர்கள் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா.

6. மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்
கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் சுயமாக முன்னேறவும், சுயதொழில் செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும், அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுத்திட்டத்தின் மூலம் கடனுதவிப் பெற வழிவகுத்தார் ஜெயலலிதா. இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்ததில், இத்திட்டத்துக்குப் பெரும் பங்கு உண்டு

7. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்
அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசின் பரிசாக, சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பூ, குழந்தைக்கான ஆடை உள்ளிட்ட 16 பொருட்கள் வழங்கும் 'அம்மா குழந்தைகள் நல பரிசுப் பொட்டகம்' என்ற புதிய திட்டத்தை, 2015-ம் மார்ச் மாதம்  அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா.

8. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம்
பாலூட்டும் தாய்மார்கள் பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாத தவிப்பை கருத்தில்கொண்டு, அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார் ஜெயலலிதா. பல குழந்தைகளின் அழுகையும் அம்மாக்களின் இயலாமையும் தணிந்தது.

9. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்!

அம்மா மகப்பேறு சஞ்சீவி  திட்டத்தின் வழியாக, மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க 11 வகை மூலிகை மருந்துகள் அடங்கியிருக்கும் மருத்துவக் குணமுள்ள மூலிகைகள் கொடுக்கப்படும். மசக்கையால் வரும் வாந்தி, மயக்கத்தைக் கட்டுப்படுத்துதல் தொடங்கி மகப்பேறு மாதம் வரை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்ற மூலிகைகளைத் தருவதுதான் இந்தத் திட்டம்.  

10. வெற்றிப் பெண்மணி தந்த விருதுகள்
வீர, தீரச் செயல் புரியும் பெண்களை கௌரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று 'கல்பனா சாவ்லா' விருதுடன், ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் வழங்கியது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. மேலும், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை அடங்கிய ‘அவ்வையார் விருதை' வழங்கி ஊக்கப்படுத்தினார் ஜெயலலிதா.

இது தவிர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு கால நிதியுதவித் திட்டம் தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்டாலும், கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் வகையில், அவர்களுக்கு மகப்பேறு கால உதவித்தொகையை ரூ.18,000 ஆக உயர்த்தினார் ஜெயலலிதா.

பெண்களை நேசித்த ஜெயலலிதா தமிழகப் பெண்களின் வாழ்வில் மலர்த்திய மாற்றங்களுக்கான வணக்கங்களையும் நன்றிகளையும் வரலாறு நின்று சொல்லும்!  

- கு. ஆனந்தராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்