வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (07/12/2016)

கடைசி தொடர்பு:11:49 (09/12/2016)

ஜெயலலிதாவுக்குப் பிடித்த காரும், மாதுளை மரமும்! - கொடநாட்டில் நெகிழ்ச்சி

 

 

 

 

 

 

நடிகையாக பல கதாபாத்திரங்களில் பார்த்திருப்போம், ஒரு முதல்வராக கம்பீரமாக பார்த்திருப்போம், சோதனைகளை உறுதியாக எதிர்கொண்ட இரும்பு மனுஷியாக  பார்த்திருப்போம். ஆனால், இந்த இரும்பு முகமூடிகளுக்குப் பின்னால் ஒரு மென்மையான முகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. மிக நெருங்கிய வட்டத்துக்கு மட்டுமே அது தெரியும் . ஜெயலலிதாவுக்கு சமீப காலங்களில் பிடித்த கார், கொடநாட்டில் அவருக்குப் பிடித்த இடங்கள், அவருக்கு விருப்பமான மாதுளை மரம்... உலகம் அறிந்திராத இந்த ரகசியங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கோவையைச் சேர்ந்த செந்தில் குமார். 

"2012-ம் ஆண்டு. நான் அப்போது மஹிந்திரா ஷோரூமில் சர்வீஸ் மேனேஜராக இருந்தேன். ஒரு நாள் அன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்தது. அம்மாவின் உதவியாளர் பூங்குன்றன் உங்களோடு பேசுவார் என்று சொன்னார்கள். அழைப்பு வந்தது. அப்போது புதிதாக அறிமுகமாகியிருந்த மஹிந்திரா XUV 500 என்ற வண்டியை எடுத்துக் கொண்டு கொடநாடு வர சொன்னார்கள். சில்வர் கலர் வண்டி வேண்டுமென்றார்கள். ஜூலை, 16-ம் தேதி இரண்டு வண்டிகளில் கொடநாடு சென்றோம்.

பொதுவாகவே கொடநாட்டில் பனிமூட்டம் அதிகமாகத் தான் இருக்கும். அன்றும் அப்படித் தான்.  4-ம் நம்பர் கேட்டின் வழியாக எஸ்டேட்டிற்குள் சென்றோம். அந்த பங்களா கண்ணில்பட்டது. அதற்கு இரண்டு கேட்கள் இருந்தன. கிழக்கு மற்றும் தெற்கில். கிழக்கு வாசலை ஏனோ அவர்கள் பயன்படுத்துவதில்லை. தெற்கு வாசலின் வழியாக உள் நுழைந்தோம். முதல்வரின் பெர்சனல் டிரைவர்கள் இரண்டு பேர் வந்தனர். நான் அவர்களுக்கு வண்டி குறித்த டெக்னிக்கல் விஷயங்களை சொன்னேன். பின்பு, வண்டியின் "ரன்னிங் போர்ட்" என்று சொல்லக் கூடிய , அந்த கால் வைத்து காரில் ஏறும் பகுதியின் அளவுகளை எடுத்தனர். வண்டியை முழுமையாக பரிசோதித்தனர். அதில் ஏறுவதற்கு வசதியாக ஒரு ஸ்டூல் கொண்டு வந்து போட்டனர். எல்லாம் தயாரான பின், அமைதியாக ஒதுங்கி நின்றார்கள். பூங்குன்றன் யாருக்கோ போனில் பேசினார். அநேகமாக சசிகலாவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..." என்றபடி தன் போனில் அந்தக் குறிப்பிட்ட காரின் போட்டோவைத் தேடி எடுக்க முயற்சித்தார். " பங்களாவிற்குள் போகும் போதே போனை வாங்கி வைத்துவிட்டார்கள். ஆனால், வெளியில் வந்து காரை மட்டும் போட்டோ எடுத்திருந்தேன். அது ஏதும் பழைய போனில் போய்விட்டது என்று நினைக்கிறேன்..." என்றவர், ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து தொடர்ந்தார். 

" எல்லோரும் அமைதியாக நின்று கொண்டிருந்தோம். முதலில் சசிகலா வந்தார். அவருக்குப் பின்னால், முழு கருப்பு கலர் சல்வாரில், ஃப்ரீ ஹேரில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வந்தார்கள். பொது மேடைகளில், போட்டோக்களில் அவரை வேறொரு பிம்பத்தில் பார்த்துப் பழகி, அவ்வளவு கேஷ்வலாக பார்ப்பதற்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. அவருக்கு கதவு திறந்து வைக்கப்பட்டது. ஏறி உட்கார்ந்தார். நான் கொஞ்சம் உயரம் என்பதால், கூட்டத்தின் பின்னால் நின்றிருந்தாலும், அவரின் பார்வைக்கு நான் நன்றாகவே தெரிந்தேன். என்னைக் கூப்பிட்டார். வந்து வண்டியை எடுங்கள் என்றார். எனக்கா... ஒரே பதட்டமாகிவிட்டது. "மேம்... எனக்கு ப்ரோட்டோகால் ஏதும் தெரியாது. அதுமட்டுமில்லாமல், வழியும் எனக்குத் தெரியாது" என்றேன். "No Problem. I will direct you, Just Drive..." என்று சொன்னார். அதற்கு மேல் என்ன பேச... ஏறி உட்கார்ந்தேன். பின்னால், சசிகலாவும், இளவரசியும் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். உடன் வந்த பாதுகாவலர்களையும் வேண்டாம் எனத் தடுத்துவிட்டார் " என்று சிறிய இடைவெளிக்குப் பின்னர், அந்தப் பயணக் கதையை தொடங்குகிறார்.

" படபடப்புடன் தான் அந்த பயணத்தைத் தொடங்கினேன். என்னிடம் வண்டியின் டெக்னிக்கல் விஷயங்களைக் கேட்டுக் கொண்டார். டீசல் ஃபுல் டேங்க் அடித்தால் எத்தனை கிலோமீட்டர் போகும் என்பது வரை உன்னிப்பாக அத்தனை விஷயங்களையும் கேட்டபடியே வந்தார். முதலில் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியவர் எனக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டார். 'தெரியும்' என்றதும், தமிழிலேயே பேசத் தொடங்கினார். ஒரு இடத்தில் நிறுத்தச் சொன்னார். அங்கு எஸ்டேட்டில் வேலை செய்தவர்கள் எல்லோரும் வந்தார்கள். அவர்களிடம் நலம் விசாரித்தார். சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு குடும்ப நிலவரங்களைக் கேட்டறிந்தார். ரொம்ப சீரியசாகவே இதுவரை  பார்த்திருந்த அவர், இவ்வளவு மென்மையாகப் பேசக் கூடியவரா என்று ஆச்சர்யப்பட்டு போனேன்.

பின்பு, கொஞ்ச தூரத்தில் மற்றுமொரு சின்ன பங்களா இருந்தது. அங்கு போகச் சொன்னார். அங்கு பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. 'இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கிருந்து காலையில சன்ரைஸ் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கும்" என்று அவ்வளவு சந்தோஷத்தோடு சொன்னார். பின்பு, ஒரு இடத்தை சுட்டிக் காட்டி " சசி... இங்க ஒரு ஆர்ச் மாதிரி மாதுளை மரம் இருந்ததே. எங்கே அது?' என்று கேட்டார். அது வெட்டப்பட்டது என்று அறிந்து ரொம்பவே வருத்தப்பட்டார். பின்பு, அவர்களுக்குள் சில பெர்சனல் விஷயங்களைப் பேசிக் கொண்டார்கள். இப்படியாகத் தொடர்ந்த அந்தப் பயணம் முடிந்தது. வண்டியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொள்ளச் சொன்னார். இறுதியாக, " அவ்வளவு தானே, நான் இறங்கிக் கொள்ளலாமா? வண்டி குறித்து நீங்கள் சொல்ல வேண்டிய விஷயங்கள் இன்னும் ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டுவிட்டு எனக்கு நன்றியை சொல்லிவிட்டுத் தான் வண்டியை விட்டு இறங்கினார். அந்த நாளை இன்று நினைத்தாலும் குழந்தைகளுக்கு வரும் "சின்ட்ரெல்லா" கனவு போலிருக்கிறது எனக்கு... " என்று உணர்வின் வார்த்தைகளோடு முடிக்கிறார். 

இந்த ஒருவர் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்கள் ஜெயலலிதாவுடனான ஏதோ ஓர் நினைவுகளில் உணர்ச்சிவயப்பட்டிருக்கும் சமயமாக இது இருக்கிறது. ஒரு பேட்டியில் ஜெயலலிதாவிடம் கேட்டார்கள்... " பேரன்பை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?". " இதுவரை இல்லை. எதிர்ப்பார்ப்பில்லா பேரன்பு என்று ஒன்று இருப்பதாக நான் நம்பவில்லை. இருந்தாலும் அதை நான் அனுபவித்ததில்லை..." என்று சொன்னார். அப்படியான ஒரு பேரன்பை வாழும்போது அவர் உணரும் வாய்ப்பே வாய்க்காமல் போனது வரலாற்று சோகம்.

                                                                                                                                          - இரா. கலைச் செல்வன்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்