‘எதிர்த்துதான் நின்றேன்; எதிரியாக அல்ல!’ ஜெயலலிதாவின் முதல் போட்டியாளர் நெகிழ்ச்சி!

ஜெயலலிதா

 

''இதெல்லாம் நடக்கும்னு நான் எப்படி நினைச்சுப் பார்க்கலையோ, அதேபோலதான் அன்னைக்கும் அதெல்லாம் நடந்ததை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அ.தி.மு.க. கட்சி ரெண்டா உடைஞ்சது. ஜானகி அம்மாவும் ஜெயலலிதா அம்மாவும் ரெண்டு அணிகளா பிரிஞ்சாங்க. 1989-ல முதன் முதலா ஜெயலலிதா அம்மா போடி சட்டமன்றத் தொகுதியில போட்டியிட்டாங்க. அவங்களை எதிர்த்து ஜானகி அம்மா என்னைத் தேர்தல்ல போட்டியிட வெச்சாங்க. வெற்றி அம்மாவுக்கு தான். என்னதான் நான் அன்னைக்கு ஜெயா அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டாலும், எப்பவும் அவங்க எனக்கு நல்ல தோழிதான்'' கண்ணீர் மல்கப் பேசுகிறார் 'வெண்ணிற ஆடை' நிர்மலா.

1965-ம் ஆண்டில் வெளியான 'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில்தான் ஜெயலலிதா, நிர்மலா இருவருமே அறிமுகம் ஆனார்கள். எம்.ஜி.ஆரின் 'ரகசிய போலிஸ் 115' உள்ளிட்ட 5 படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர்  இருந்த காலகட்டத்தில்  அவருடன் கட்சியில் உறுப்பினராக இருந்த நிர்மலா, பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். திரைத்துறையில் ஆரம்பித்து அரசியல் களம் வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை இணைத்துக்கொண்டிருந்தவரிடம், மலரும் நினைவுகளைப் பகிரக் கேட்டோம்.

''தனி ஒரு பெண்ணா இருந்துகொண்டு அரசியலில் சாதித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான அன்பாலும் மரியாதையின் காரணமாவும்தான், நான் திரும்பவும் அவங்க முன்னிலையில அ.தி.மு.க-வுல இணைஞ்சேன். எனக்கு அவங்க நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பை கொடுத்தாங்க. மறைந்த தலைவர் எம்.ஜி.ஆரும் எனக்கு அதே பொறுப்பைக் கொடுத்திருந்தார்.

 

ஜெயலலிதா அம்மா ரொம்ப தைரியமானவங்க. எம்.ஜி. ஆர் இறந்த சமயத்துல ராஜாஜி மஹால்ல, பீரங்கி வண்டியில் அமர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கீழ தள்ளப்பட்டாங்கன்னு, அந்தப் பழைய செய்தியை எல்லாரும் நினைவுல கொண்டு வர்றாங்க. அந்த ஒரு சம்பவம் மட்டுமில்ல... இதுபோல அவங்க வாழ்க்கையில பல கஷ்டங்களை அனுபவிச்சு இருக்காங்க.

ஒருமுறை தேர்தல் நடந்து முடிஞ்ச சமயத்துல அவங்களுக்கு ஒரு விபத்து நடந்துச்சு. வேகமா வந்த லாரி அவங்க போன வாகனத்தில் மோதி, கால்ல அடிபட்டுருச்சு. ஆனாலும் மனம் தளராம அதுல இருந்து குணமாகி மீண்டு வந்தாங்க. அந்த தைரியமும் தன்னம்பிக்கையும்தான் பல சோதனைகளையும் தாண்டி அவங்களை முதல்வராக்கி அழகுப் பார்த்துச்சு.

ஜெயலலிதா அம்மாவோட பழகின நாட்களை இப்ப நினைச்சாலும் சந்தோஷம்தான். எங்க ரெண்டு பேருக்குமே ஷூட்டிங் சமயத்துல சேலை கட்டிக்கத் தெரியாது. ஒருத்தருக்கு கட்டி முடிக்குற வரைக்கும் இன்னொருத்தர் காத்திருப்போம். ஹேர் ஸ்டைல், மேக்கப் பத்தியெல்லாம் நிறையப் பேசுவோம். எங்க ரெண்டு பேருக்குமே பரதநாட்டியத்துல ஈடுபாடு இருந்ததால நாட்டியம் பத்தியும், எங்க குருநாதர்களைப் பத்தியும் நிறையப் பேசுவோம். என்னதான் நெருங்கிப் பழகினாலும் 'வாங்க', 'போங்க'னு மரியாதையாதான் பழகுவாங்க. தேவையில்லாம பெர்சனல் விஷயங்களைப் பேச மாட்டாங்க. நாகரிகமா பழகுற பக்குவத்தை அவங்ககிட்ட இருந்து கத்துக்கணும்.

ஜெயலலிதா அம்மாவுக்கும் எனக்கும் தயிர்சாதம் ரொம்பப் பிடிக்கும். ஷூட்டிங் டைம்ல பெரும்பாலும் அதுதான் எங்களுக்கு லன்ச். உடல் எடை கூடாம இருக்க என்ன பண்ணனும்னு  நாங்க ரெண்டு பேரும் பேசிட்டிருப்போம். அதெல்லாம் ஒரு நிலாக்காலம். அவங்களுக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிகம். பல மொழிகள் பேசக்கூடியவங்க. கடைசி காலம் வரை கட்சிக்காகவும் மக்களுக்காகவுமே தங்களை அர்ப்பணிச்சவங்க.

கடைசியா அவங்களை நான் ஒரு தருணத்துல சந்திச்சப்போ, 'உங்ககிட்ட நான் நிறையப் பேசணும், நேர்ல வந்து பாருங்க'னு சொல்லி இருந்தாங்க. ஆனா கடைசி வரைக்கும் அவங்களைப் பார்க்க முடியாம இந்தக் கோலத்துல பார்ப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கல!"

கண்ணீர் பெருக நிறுத்துகிறார் நிர்மலா!

ஜெயலலிதா இன்னும் பலரின் நினைவுகளில் நீங்காமல் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்!

- பொன்.விமலா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!