‘சசிகலாவை எதிர்த்துப் போட்டியிடத் தயார்!’ - பதற வைக்கும் அ.தி.மு.க பொதுக்குழு | Will contest ADMK General secretary post against sasikala, says sasikala pushpa

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (09/12/2016)

கடைசி தொடர்பு:11:59 (09/12/2016)

‘சசிகலாவை எதிர்த்துப் போட்டியிடத் தயார்!’ - பதற வைக்கும் அ.தி.மு.க பொதுக்குழு

போயஸ் கார்டனில் இன்று காலை சசிகலாவைச் சந்திக்கச் சென்றுள்ளனர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தம்பிதுரையும். ' கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் எப்படி நடத்தப்படுகிறது என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, கட்சியின் செயற்குழுவும் பொதுக்குழுவும் விரைவில் கூட இருக்கிறது. 'கட்சியை வழிநடத்த பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார்' என அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். நேற்று போயஸ் கார்டனில் ஓ.பி.எஸ், மதுசூதனன் உள்ளிட்ட கட்சியின் சீனியர்களிடம் ஆலோசனை நடத்தினார் சசிகலா. தற்போது தம்பிதுரையுடன் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் சசிகலா. "ஜெயலலிதா இருந்தவரையில், கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக அவர்தான் இருந்தார். பொதுக் குழு உறுப்பினர்களும் அவருடைய பெயரை முன்மொழிவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால், ஜெயலலிதாவால் அறிவிக்கப்படாதவரான சசிகலாவை முன்னிறுத்துவதை கட்சியின் சீனியர்கள் சிலர் விரும்பவில்லை. எனவே, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா. இந்தத் தேர்தலில் மதுசூதனன், பண்ருட்டி ராமச்சந்திரன், பி.எச்.பாண்டியன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி போன்ற சீனியர்களில் ஒருவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட வேண்டும்' எனவும் குறிப்பிட்டிருக்கிறார். 

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், 'அ.தி.மு.கவில் வலிமை வாய்ந்த பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்வு விரைவில் நடக்க இருக்கிறது. கட்சியின் விதிகளுக்குட்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறதா என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து, சிலர் பதவிக்கு வர நினைக்கிறார்கள். ஆணையத்தின் முழுக் கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்' எனவும் குறிப்பிட்டிருக்கிறார். சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களைத் திரட்டி, பொதுக் குழு உறுப்பினர்களுக்கு முழு சுதந்திரம் தரும் வகையில் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்" என விவரித்தவர்கள், 

" பொதுக்குழு உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தி, அ.தி.மு.க சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளராக ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை சசிகலா தரப்பினர் விரும்பவில்லை. போட்டியின்றி தேர்வு செய்யப்படும்போது, கட்சியின் கட்டுப்பாடு தன் கையில் இருக்கிறது என்பதைக் காட்ட முடியும் என நினைக்கிறார். ஆனால், ஒரு தரப்பில் இருந்து எழும் அதிருப்திகளால் தம்பிதுரையை கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்வு செய்வதற்கான பேச்சுக்களும் நடந்து வருகின்றன. ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில், பொதுக்குழு உறுப்பினராகவும் சசிகலா புஷ்பா இருக்கிறார். எனவே, போலீஸ் பாதுகாப்போடு பொதுக்குழு கூட்டத்திற்கு வருவதற்கும் திட்டமிட்டிருக்கிறார். கூடவே, சசிகலாவை முன்னிறுத்தினால் அவரை எதிர்த்துப் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், பிற மாநிலத்தில் உள்ள கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்களும் புஷ்பாவுக்கு ஆரதரவாக உள்ளனர். அவர்களிடம் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். சசிகலாவால் பாதிக்கப்பட்ட கட்சியின் சீனியர்களும் அவருக்கு ஆதரவாக உள்ளனர்." என்கின்றனர்.

அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களின் மனநிலையையொட்டி, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இருக்கிறார் சசிகலா. 'மத்திய அரசின் அழுத்தத்துக்கு ஏற்ப, தம்பிதுரையே முன்னிறுத்தப்படலாம்' என்கின்ற குரல்களும், போயஸ் வட்டாரத்தில் இருந்தே எழுகிறது. 

- ஆ.விஜயானந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்