ரெட்டி வீட்டில் ஐ.டி ரெய்டு -120 கிலோ தங்கமும் 'அந்த' 2 நாட்களும்

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால், அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர் அமைச்சர்கள். ' அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் இருந்து வாங்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி அதிகாரிகளே மாற்றிக் கொடுத்துள்ளனர்' என அதிர வைக்கின்றனர் அதிகாரிகள். 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்து நேற்று காலையில் தனியார் ட்ராவல்ஸ் வாகனத்தில் கிளம்பிய வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள், தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தி.நகர் அலுவலகம், காட்பாடியில் உள்ள வீடு ஆகியவற்றில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், 100 கோடி ரூபாய் பணம் மற்றும் 120 கிலோ தங்கம் ஆகியவை பிடிபட்டதாக தகவல்கள் வெளியானது. " தமிழக அரசில் கோலோச்சும் அமைச்சர்களுக்கும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவருக்கும் மிகவும் நெருக்கமானவராக வலம் வந்தவர் சேகர் ரெட்டி. அவரிடம் வருமான வரித்துறை பாய்ந்ததன் பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன" என விவரித்தார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். அவர் நம்மிடம், " தமிழகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடும் தொழிலதிபர்கள் யார் என்ற பட்டியலை தயார் செய்வோம். அதில் சந்தேகப்படும் வகையில் செயல்படுபவர்களை முழுமையாக வலைக்குள் கொண்டு வருவோம். அப்படித்தான் சேகர் ரெட்டியின் தொடர்புகளும் அவர் மூலம் ஆதாயம் அடைந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலைத் தயாரித்தோம். அவர்களுக்குத் தெரியாமலேயே செல்போன் தொடர்புகள், பணத்தை பதுக்கும் இடம் பற்றிய விவரங்களை முழுமையாகப் பட்டியலிட்டோம். ஆளுங்கட்சி புள்ளிகளோடு அவருக்குள்ள நெருக்கம் பற்றிய தகவல்களை, சி.பி.டி.டி (நேரடி வரிகள் விதிப்பு வாரியம்)க்கு தெரியப்படுத்தினோம். அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. 

' எதற்கோ காத்திருக்கிறார்கள்' என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதல்வர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், ரெய்டுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினோம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரெய்டு நடத்துவது என முடிவு செய்தோம். திடீரென நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தில் இருந்து, 'இரண்டு நாட்கள் காத்திருக்குமாறு' தகவல் வந்தது. அதன்பிறகு, முதல்வர் இறப்பு பற்றிய தகவல் வெளியானது. ' உடனே ரெய்டில் இறங்க வேண்டாம். மேலும் இரண்டு நாட்கள் போகட்டும்' எனத் தெரிவித்தனர். அதன்படியே நேற்று சேகர் ரெட்டி உள்பட இரண்டு தொழிலதிபர்களை குறிவைத்துக் களத்தில் இறங்கினோம். ரெட்டியின் வர்த்தகத் தொடர்புகள், பரிவர்த்தனைகள் என அனைத்து விவரங்களையும் சேகரித்துவிட்டோம். வருமான வரித்துறையின் துணை இயக்குநர் ராய் ஜோஸ் தலைமையில், 150 பேர் கொண்ட குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். எதற்காக இந்த அதிரடி ரெய்டு? யாரை வளைப்பதற்காக நடத்தப்பட்டது என்பதெல்லாம் வாரியத்தின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். மாநில அரசில் கோலோச்சும் சிலரை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியாகவும் பார்க்கலாம்" என்றார் விரிவாக. 

" சேகர் ரெட்டியின் வீடுகளில் பணம் வைக்கப்பட்டிருந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்கள் ஊழியர்கள் சிலர். அண்மையில் வெளியான 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுக் கட்டுகள், சீல் பிரிக்கப்படாமல் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வங்கிகளுக்குச் செல்லக் கூடிய நோட்டுகளாக இருந்தால், பிரித்து வைக்கப்பட்டிருக்கும். இவை நேரடியாக ரிசர்வ் வங்கியில் இருந்து வந்தவை. அங்குள்ள அதிகாரிகள் துணையோடு கறுப்புப் பணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் எத்தனை கட்டுகள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு, மொத்தமாக புதிய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற கணக்கிற்கு வந்துள்ளனர். தனித்தனியாக எண்ண ஆரம்பித்திருந்தால் நீண்ட நேரம் ஆகியிருக்கும். மூட்டை, மூட்டையாக பணத்தைக் கட்டிக் கொண்டு வந்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத 120 கிலோ தங்கமும் பிடிபட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகான ரெய்டு என்பதாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. ரெட்டியின் மூலம் ஆளுங்கட்சி புள்ளிகளை வலைக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். வரக் கூடிய நாட்களில் நடக்கப் போகும் அரசியல் காட்சிகளில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர். 

- ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!