கார்டனுக்குள் 'நோ' என்ட்ரி!  -பூங்குன்றனுக்கு கல்தா கொடுத்த சசிகலா #அப்டேட் | Sasikala restricts Jayalalithaa's assistant Poongundran from entering Poes Garden

வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (09/12/2016)

கடைசி தொடர்பு:20:14 (09/12/2016)

கார்டனுக்குள் 'நோ' என்ட்ரி!  -பூங்குன்றனுக்கு கல்தா கொடுத்த சசிகலா #அப்டேட்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் கார்டனில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் சொல்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவின் கார்டன் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தற்போது அங்கு மிஸ்ஸிங். ' கார்டனுக்குள் நுழைய வேண்டாம் என சசிகலா உத்தரவிட்டுள்ளார்' என்கின்றனர் கார்டன் ஊழியர்கள். 

"தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பூங்குன்றன். இவரது அப்பா புலவர் சங்கரலிங்கம். இவர் சசிகலாவுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தவர். அந்தவகையில் ஜெயலலிதாவுக்கு அரசியல் ரீதியாகவும் நம்பிக்கைக்குரிய நபராகவும் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் சசிகலா. ஜெயலலிதாவின் மேடை பேச்சுக்கான உரை முதற்கொண்டு அறிக்கை தயாரிப்பது வரையில் சிறப்பாக செயல்பட்டு வந்தார் சங்கரலிங்கம். அவருக்குப் பிறகு, கார்டன் செயலாளராக பதவிக்கு வந்தார் பூங்குன்றன். முதல்வரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கினார். கட்சி நிர்வாகிகள் மீது எழுப்பப்படும் புகார் கடிதத்தில் இருந்து, கட்சியின் உள்விவாகாரங்களில் ஏற்படும் மோதல் வரையில் அனைத்தையும் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஜெயலலிதாவைச் சந்திக்க வருபவர்கள் யாரும் பூங்குன்றனைக் கடந்து செல்ல முடியாது என்ற நிலை இருந்து வந்தது. 

ஜெயலலிதாவின் அசைவுகளை வைத்தே, அனைத்தையும் தீர்மானிப்பவராக இருந்தார். இதனால் கார்டன் நிர்வாகத்தில் நீண்ட காலம் கோலோச்சி வந்தார். சசிகலாவால் கார்டனுக்குள் கொண்டு வரப்பட்ட பூங்குன்றன், தற்போது அவராலேயே ஒரங்கப்பட்டுள்ளார். இதற்கான பின்னணி என்ன என்பது மிகுந்த ரகசியமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் உடல் ஏற்றப்பட்டிருந்த பீரங்கி வண்டியில் அருகில் நின்றிருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு போயஸ்கார்டனுக்குள் நேற்று சென்ற அவருக்கு ஓர் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார் சசிகலா. 'இனிமேல் கார்டன் பக்கம் நீங்கள் வர வேண்டாம். உங்களுக்கு இன்னொரு முக்கிய வேலை இருக்கிறது' என்று சொல்லப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பூங்குன்றன் கண்ணீர் மல்க அங்கிருந்து வெளியேறினார்" என்கின்றனர் கார்டன் உதவியாளர்கள். 

கார்டனில் இருந்து வெளியேறியது உண்மையா என பூங்குன்றனிடம் கேட்டோம். நமது கேள்விக்குப் பதில் சொல்ல அவர் விரும்பவில்லை. பூங்குன்றனுக்கு ஏன் தடைவிதித்தார் சசிகலா என அ.தி.மு.க வட்டாரத்தில் தீவிர விவாதம் கிளம்பியுள்ளது. 

தற்போதைய அப்டேட்

தற்போது பூங்குன்றன் போயஸ் கார்டனில் தான் இருப்பதாகவும், வெளியேற்றப்படவில்லை என்றும் வாட்ஸ்-அப்களில் ஃபார்வார்டு மெசெஜுகள் அனுப்பி வருகிறார். 

- எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்