வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (13/12/2016)

கடைசி தொடர்பு:13:19 (13/12/2016)

வர்தா சிதைத்த காஞ்சி!

காஞ்சிபுரம் : தானேவுக்கு கூட தலைவணங்காத காஞ்சிபுரம் மாவட்டம் ‘வர்தா’ புயலின் கோரத் தாண்டவத்தால் சிதைந்து போனது. 40 வருடங்களில் இல்லாத அளவுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது வர்தா புயல்.

வர்தா புயலின் தாக்கத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே காண முடிந்தது. நேற்று அதிகாலையில் இருந்தே மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. காலை 11 மணியில் இருந்து காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்தது. மதியம் 1 மணி துவங்கி மாலை 4 மணி வரை உச்சத்தை எட்டியிருந்தது புயலின் தாக்கம். மரங்கள் வேறோடு சாய்ந்து விழுந்தன. குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட பொருட்கள் காற்றின் வேகம் தாங்க முடியாமல் பறந்தன.

ஏராளமான மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் என அனைத்து சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கேளம்பாக்கம்- வண்டலூர் சாலை, கல்பாக்கம்-பெங்களூர் மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் மரங்கள் வேரோடு வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின் கம்பங்கள் வீழ்ந்ததால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் மாவட்டமே இருளில் மூழ்கியது. வர்தா புயலுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் 7 வயது சிறுமியும், தாம்பரம் அருகே உள்ள உள்ளாகரத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.

மீட்பு மற்றும் நிவாரப்பணிகள் முழு வீச்சில் நடக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வர்தா புயல் காஞ்சிபுரம் மாவட்டத்தை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

- பா.ஜெயவேல்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்