‘நான் அவன் இல்லை!’ - சசிகலாவுக்கு எதிரான வாட்ஸ் அப் வதந்தியால் அலறும் முன்னாள் அமைச்சர்

திருப்பூர் : "சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் எழுதியதாக கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எஸ்.எம்.ஆனந்தன், சின்னம்மாவுக்கு எதிராக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என மறுப்பு அறிக்கை வெளியிட்டு, காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

கிட்டத்தட்ட மிகப்பெரும்பான்மையான அ.தி.மு.க. நிர்வாகிகள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பேற்கச் சொல்லி சசிகலாவிடம் தொடர்ச்சியாக கோரி வருகிறார்கள். 'சின்ன அம்மா' என அழைத்தும், அவரை கட்சிப் பொறுப்பை ஏற்க வலியுறுத்தியும் தமிழகம் முழுக்க விளம்பரங்கள் பெருமளவில் அ.தி.மு.க.வினரால் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் துவங்கி அனைவரும் 'சின்ன அம்மா' புராணம் பாடத்துவங்கி விட்டார்கள்.

இந்த சூழலில், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் பெயரில் 'சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு கட்சி பொறுப்பை ஏற்கட்டும்' என்ற கடிதம் ஒன்று பரவி வருகிறது. அதில், "மிக நீண்ட சிந்தனைக்குப் பின்னரே இந்தப் பதிவை நான் எழுதுகிறேன். ஏனெனில் நான் சார்ந்திருக்கும் இயக்கம் அம்மா அவர்களின் ஆளுமைத்திறனால் ராணுவக்கட்டுப்பாடோடு கம்பீரமாய் வளர்ந்த இயக்கம். இந்த இயக்கத்துக்கு எனது கருத்துகளால் கேடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

நான் அம்மாவின் பிள்ளை. அவரது கட்டுப்பாட்டின் கீழ் ஓரளவுக்கு அரசியலை அறிந்த இளைஞன். எனது பதிவின் சாராம்சமும் கருத்துகளும் இதோ. திருமதி. சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுகொள்ளத்தயார். சசிகலாவின் தலைமையை முழு மனதோடு ஏற்று, அம்மாவுக்காக எப்படியெல்லாம் கழக பணி செய்தேனோ அதேபோல் சசிகலாவுக்காகவும் பணியாற்றிட தயார்.

அதற்கு முன்பாக தொண்டர்கள் வைக்கும் ஒரு பரிட்சையில் சசிகலா தேர்ச்சி பெற வேண்டும். கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி துவங்கி டிசம்பர் 5-ம் தேதி வரை அப்போலோ மருத்துவமனையில் அம்மா அவர்களுக்கு எந்தமாதிரியான சிகிச்சைகள் நடைபெற்றன என்பதை முழு வீடியோ ஆதாரத்தோடு வெளியிட வேண்டும். இதை வெளியிட்டு நிரூபித்து விட்டால் அம்மா அவர்கள் எழுதிய உயிலில் வேறு யார் பெயர் இருந்தாலும் அவர்களை தவிர்த்து உங்களை மானசீக தலைவியாக ஏற்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 'மானமுள்ள மாவட்டச் செயலாளரின் கடிதம்' என்ற பெயரில் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது.

இந்நிலையில் இந்த கடிதத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என எம்.எஸ்.எம். ஆனந்தன் விளக்கமளித்துள்ளார். அதோடு, நான் சின்னம்மாவுக்கு எதிராக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளார் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார். அதில், "திருமதி. ஜெயமணி என்பவர் தான் இந்த செயலை செய்திருக்கிறார் எனவே, ஜெயமணி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரியுள்ளார்.

எம்.எஸ்.எம். ஆனந்தன் அமைச்சராக இருந்த போது, அவர் மீது பாலியல் மற்றும் பண மோசடி புகார் கொடுத்தவர் ஜெயமணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பேற்க அழைப்பு விடுக்கும் வகையில், பல்வேறு இடங்களில் தட்டிகளை அமைத்துள்ளார் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

- தி.ஜெயப்பிரகாஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!