வர்தா புயல் எவ்வளவு மழையைப் பொழிந்தது தெரியுமா?

வர்தா புயல்

மிழகத்துக்கு வடகிழக்குப் பருவமழையால் மட்டுமே அதிக மழை பெய்யும். இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக அக்டோபர் 30-ம் தேதிதான் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஒரு மாதத்துக்கும் மேலாக வடகிழக்குப் பருவமழை ஏமாற்றியது. நாடா புயலும் தமிழகத்தை ஏமாற்றி விட்டுச் சென்றது. இந்த சூழலில் வர்தா புயல் காரணமாக வட தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்திருக்கிறது. எனினும் தமிழகத்துக்கு வழக்கத்தை விட 61 சதவிகிதம் அளவுக்கு மழை குறைவாகப் பெய்திருக்கிறது என்பதே உண்மை நிலவரம்...

வழக்கத்தை விட குறைவு...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக மழை பெய்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை கடந்த 13-ம் தேதி வரை 339.1 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 54 சதவிகிதம் குறைவாகும். காஞ்சிபுரத்தில் 334.6 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 44 சதவிகிதம் குறைவாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் 246.7 மி.மீ மழை பெய்துள்ளது. இது 55 சதவிகிதம் குறைவாகும்.

மழை அளவு
(அக்டோபர் 1 முதல் டிசம்பர் 13 வரை)

தமிழகம் 157.1 மி.மீ
புதுச்சேரி 171.3 மி.மீ

பற்றாக்குறை
தமிழகம் 61 சதவிகிதம்
புதுச்சேரி 79 சதவிகிதம்

டெல்டா மாவட்டங்களில் குறைவு

டெல்டா மாவட்டங்களிலும் வழக்கத்தை விட குறைவாகவே மழை பெய்திருக்கிறது. நாகை மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி வரை 219 மி.மீ மழைதான் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 73 சதவிகிதம் குறைவாகும். தஞ்சை மாவட்டத்தில் 170.3 மி.மீ மழைதான் பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 65 சதவிகிதம் குறைவாகும். திருவாரூர் மாவட்டத்தில் 192.4 சதவிகிதம் மழைதான் பெய்திருக்கிறது. இங்கும் வழக்கத்தை விட 70 சதவிகிதம் மழை குறைவாகப் பெய்திருக்கிறது.

வர்தா-வால் 5 சதவிகிதம் மழை

இனி தமிழகத்துக்கு மழை இருக்கிறதா? என்பது குறித்து வானிலை மைய இயக்குநர் பாலசந்திரனிடம் கேட்டோம்...

"வர்தா புயல் தாக்கம் காரணமாக எவ்வளவு மழை பெய்தது?"

"வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30-ம் தேதிதான் தொடங்கியது. வர்தா புயல் உருவாவதற்கு முன்பு வழக்கமான மழையளவை விட 66 சதவிகிதம் மழை குறைவான நிலையே இருந்தது. வர்தா புயலின் தாக்கத்தால் 5 சதவிகிதம் மழை பெய்துள்ளது. வர்தாவுக்குப் பின்னும் கூட 61 சதவிகிதம் மழை பற்றாக்குறை இருக்கிறது"

"இப்போது வரை பெய்திருக்கின்ற மழை போதுமானதா?"

"தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் போதுமான மழை பெய்யவில்லை என்ற நிலை இருந்தது. இந்தச் சூழலில் வர்தா காரணமாக மழை கிடைத்தது நல்ல விஷயம்தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்திருக்கிறது. பல ஏரிகள் நிரம்பி இருக்கின்றன. சென்னை புறநகரில் சோழிங்கநல்லூரில் 38 செ.மீ மழை பெய்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில்  நல்ல மழை பெய்துள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் மழை அளவு குறைவுதான். வட தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்திருக்கிறது. வர்தா கரையை கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி  வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழையைக் கொடுத்துள்ளது"

"வடகிழக்குப் பருவமழைகாலம் முடிந்து விட்டதா?"

"இல்லை. இன்னும் முடியவில்லை. வடகிழக்குப் பருவமழை காலம் என்பது டிசம்பர் 31-ம் தேதி வரை இருக்கிறது. வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றக் கூடும். அது புயலாகவும் மாறக்கூடும். ஆனால், அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது"

- கே.பாலசுப்பிரமணி
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!