‘கண்ணீர் விட்டு அழுத ஜெயலலிதாவை நான் பார்த்திருக்கிறேன்!’ கலங்கும் தீபா | She was inconsolable for a long time, That was the real Jayalalithaa - Deepa

வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (15/12/2016)

கடைசி தொடர்பு:09:46 (16/12/2016)

‘கண்ணீர் விட்டு அழுத ஜெயலலிதாவை நான் பார்த்திருக்கிறேன்!’ கலங்கும் தீபா

கண்ணீர் விட்டு அழுவதுதான் உண்மையான ஜெயலலிதா என அவரது அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். 

இது குறித்து ஆங்கில ஏடு ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ''கடந்த 1974-ம் ஆண்டு ஒரு தீபாவளி தினத்துக்கு முன்னதாக நான் பிறந்தேன். அந்த தருணத்தில் மருத்துவமனையில் எனது பெற்றோருடன் எனது அத்தையும் இருந்ததாக சொல்வார்கள். எனக்கு 'தீபா' என அத்தைதான் பெயர் சூட்டினார்கள். தீபா என்றால் வெளிச்சம் என்று அர்த்தம். ஆனால், எனது அத்தையின் மரணம் குறித்து இன்னும் இருள் விலகாத நிலையில்தான் நான் இருக்கிறேன். நான் அவரை மிகவும் நேசித்தேன். என்னால் முடிந்தவரை அத்தையுடனேயே  அதிகமுறை தங்கவும் முயற்சித்துள்ளேன்.

சிறுவயதில் இருந்தே எனக்கு அவர்தான் எனது ரோல் மாடல். அத்தையின் உறுதி, தன்னம்பிக்கை, தன்னலமற்றத்தன்மை, உழைப்பு இவைகள் எல்லாம் எனக்குப் பிடித்தவை. நாங்கள் போயஸ் கார்டனில் இருந்து வெளியேறிய பிறகு, திடீரென்று  அந்நியர்கள் அங்கே நிரம்பியிருந்தனர். அதற்குப் பிறகும் நான் அங்கே செல்வேன். ஆனால், அவர்களிடம் என்னால் சகஜமாக பழக முடியவில்லை. 

கண்ணீர்

கடந்த 1991-ம் ஆண்டு அத்தை முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற்ற தினத்தன்று எங்கள் குடும்பத்தினருடன் அத்தை மதிய விருந்து உண்டார். அப்போது எனக்கு 16 வயது. மூத்த அதிகாரிகளிடம் எனது தந்தை, எனது சகோதரர் என ஒவ்வொருவரிடமும் அத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னைக் கண்டாலே  அத்தையின் முகம் மலரும். என்னை நன்றாகப் படிக்க சொல்வார். அந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாதவை. ஒருநாள் என்னிடம், 'உன்னை எனது சொந்த குழந்தையாகவே வளர்க்க ஆசைப்பட்டேன் ' என்றார் எனது அத்தை. அந்த வார்த்தையை கேட்ட பிறகு, அத்தையை  சந்திக்க அடிக்கடி போயஸ்கார்டன் செல்வேன். எனது அத்தை பங்கேற்கும் பொதுக் கூட்டங்கள், விழாக்களுக்கு கூட எங்கள் வீட்டுக்கு சிறப்பு அழைப்பிதழ்கள்  வருவது உண்டு. 

ஆனால் வாழ்க்கை ஒன்றும் ரோஜாப் படுக்கை கிடையாதே. எனது தந்தை மறைவுக்கு பிறகு, எனது அத்தையுடனான உறவும் குலைந்தது. அவரைச் சுற்றியிருந்தவர்களே அதற்கும் காரணமாக இருந்தனர். திடீரென்று வளர்ப்பு மகனும் முளைக்க, என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் துயரத்தின் உச்சிக்கே சென்றேன்.. வளர்ப்பு மகன் திருமணமும் எங்களுக்குள் பிளவை அதிகரித்தது. வளர்ப்பு மகன் திருமணத்தால் எனது அத்தை கொடுத்த விலையும் அதிகம். 

இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் நினைத்து பார்த்திருக்கிறேன். எனது தந்தை இறந்த போது எங்கள் வீட்டுக்கு வந்த எனது அத்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார். ஒரு சகோதரனாக அத்தையை வழிநடத்தியதை பள்ளிப் பருவத்தில் எனது தந்தை அவரது கையை பிடித்துக் கொண்டு,  அழைத்து சென்றதைக்  கூறி நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார். கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த  அவரை எங்களால் தேற்ற முடியவில்லை. இதுதான் உண்மையான ஜெயலலிதா. அத்தனை பாசமிக்கவர் எனது அத்தை. 

1997-ம் ஆண்டு எனது அத்தை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது நான் அவரை பார்க்கச் சென்றேன். வெளிப்படையாக அத்தையிடம் பிரச்னைகள் குறித்து பேசினேன். ஆனால் உடனே என்னை அவர் கண்டித்தார். 'நீ குழந்தை உனக்கு ஒன்றும் தெரியாது. வீட்டுக்கு போ... நான் வெளியே வந்ததும் பார்க்கிறேன் ' என்றார். 

அதற்கு பிறகு பல முறை போயஸ் கார்டனுக்கு நான் சென்றிருக்கிறேன். பலமுறை காவலர்களால் துரத்தப்பட்டுள்ளேன். எனது அத்தை என் மீது அத்தனை பாசமாக இருப்பார். நேர்மையானவர். அப்படியிருக்கையில் இப்படி எப்படி நடக்கிறது என்று ஆச்சரியப்பட்டு போயிருக்கிறேன். ஆனாலும் நான் எனது முயற்சியை கைவிடவில்லை.

கடைசியாக 2002-ம் ஆண்டு அத்தை இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற போதுதான் அவரை மீண்டும் சந்திக்க முடிந்தது. அந்த சமயத்தில் அவருடன் பல விஷயங்களைப் பேசினேன். தந்தை குறித்து பேசினேன். இருவருக்குள்ளும் கடுமையாக வாக்குவாதம் கூட நடந்தது. எங்களை அவர்கள் வளர்த்த விதத்தையெல்லாம் கூறி அத்தையிடம் சண்டையிட்டேன். என்னை சமாதானப்படுத்துவதற்காக என்னுடன் 6 மணி நேரம் செலவழித்தார். பின்னர் 'என்னை வீட்டுக்கு போ... நான் பின்னர் வந்து உன்னை பார்க்கிறேன்' என்றார். அதுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது. ''

- எம். குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்