Published:Updated:

தினமும் 750 கிலோ தீவனம்.. லட்சக்கணக்கான புறாக்கள்.. நெகிழ வைக்கும் உயிர் நேயம்!

ஒரே நேரத்தில் இவ்வளவு புறாக்களை நாம் வேறு எங்கும் காண்பது அரிது. கனமழை கொட்டித் தீர்த்தாலும், புயல் அடித்தாலும், கண்டிப்பாக இங்கு விருந்து உபசரிப்பு நடைப்பெற்றே தீரும்.

புறா கூட்டம்
புறா கூட்டம்

இன்றைய நவீன யுகத்தில் பறவைகளை பெரும் கூட்டமாக பார்ப்பதென்பது மிகவும் அரிதான காட்சியாகிவிட்டது. நகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் தற்பொழுது இதுதான் நிலை. பசியாற்ற வாய்ப்பில்லாத இடத்தில், தமக்கென்ன வேலை என விரக்தி அடைந்த பறவைகள், தங்களது வருகையை நிறுத்திவிட்டன. இதுபோன்ற ஒர் சூழலில், ஒரே இடத்தில் லட்சக்கணக்கான புறாக்களை பெரும் கூட்டமாக பார்ப்பது பரவசத்தின் உச்சமல்லவா. அதுவும் சென்னை மெரினா கடற்கரையில் தினந்தோறும் இப்படி ஓர் அபூர்வம் நிகழ்வது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதிகாலைப் பொழுதில் சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரில் இந்த அழகான அதிசய காட்சியை காணலாம்.

புறா வளர்ப்பு  மையம்
புறா வளர்ப்பு மையம்
சென்னை மெரினா கடற்கரை

வழக்கம் போல் இன்றும் நமக்கு உணவு காத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, பல திசைகளில் இருந்தும் லட்சக்கணக்கான புறாக்கள் சிறகடித்து இங்கு வருகின்றன. ஒரே நேரத்தில் இவ்வளவு புறாக்களை நாம் வேறு எங்கும் காண்பது அரிது. கனமழை கொட்டித் தீர்த்தாலும், புயல் அடித்தாலும், கண்டிப்பாக இங்கு விருந்து உபசரிப்பு நடைப் பெற்றே தீரும். பச்சைப்பயறு, சம்பா, ரவை, வெள்ளை சோளம், கடலை, உப்பு கடலை, மக்காச்சோளம் என விதவிதமான தானியங்கள் விருந்தளிக்கப்படுகின்றன. பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

தினமும் 750 கிலோ தானியங்கள் வீசப்படுகிறது. உயிர்நேய ஆர்வலர்கள் சிலர் ஒன்றாக இணைந்து, புறா வளர்ப்பு மையம் என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக இந்த உன்னத சேவையை ஆற்றி வருகிறார்கள். இங்கு எப்பொழுதும் நிரந்தரமாக தானியங்கள் இருப்பு வைக்கக்கூடிய சிறிய அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் தினமும் அதிகாலை 5 மணியளவில் இங்கு வருகை புரிந்து தானியம் வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். புறாக்களுக்கு தானியம் வழங்க விரும்புகிறவர்கள், இந்த அமைப்பின் நிர்வாகிகளை தொடர்புக் கொண்டு தங்களது பங்களிப்பை செலுத்துகிறார்கள்.

உணவருந்த வரும் புறாக்கள்
உணவருந்த வரும் புறாக்கள்

குறிப்பாக, கொடையாளர்கள் பலர் தங்களது பிறந்த நாள், தங்களது குடும்ப உறவுகளின் நினைவு நாள் போன்ற முக்கிய தினங்களில், தங்களது கைகளால் புறாக்களுக்கு தானியம் அளித்து மன நிறைவு அடைகிறார்கள். தனது தாயின் நினைவு தினத்தன்று இங்கு தானியம் வீசிய ராஜவேலு என்பவரிடம் பேசியபோது, ‘’இது ஒரு அலாதியான அனுபவம். மனசுக்கு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்குது. மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் உணவு தேவை. ஆனால் இன்னைய சூழல்ல, பறவைகளுக்கு இயல்பா உணவு கிடைக்குறதுக்கான வாய்ப்பே இல்லாமப் போயிடுச்சி. பறவைகள் பசியாற்ற, நம்மால் முடிஞ்ச பங்களிப்பை செய்யணும். இந்த அமைப்பின் நிர்வாகிகளையும் கொடையாளர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என நெகிழ்ச்சியோடு பேசினார்.