மின்கட்டணம்: விரைவில் நல்ல செய்தி வருகிறது! 

மின்கட்டணம் செலுத்தும் தேதியை நீட்டிப்பது குறித்த நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

வர்தா புயல் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. சென்னையில் முக்கிய இடங்களுக்கு மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லை. மக்கள் இருளில் தவிர்த்து வருகின்றனர். குடிநீர் இல்லாமல் மக்கள் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதால் பணம் எடுக்க முடியாமலும், மி்ன்கட்டணம் செலுத்தாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மின்கட்டணம் செலுத்தும் தேதியை நீட்டிப்பது குறித்து நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 நாளில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றும், 54 உயர் அழுத்த மின்கோபுரங்களை சீரமைக்க ஒருவார காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

6 ஆயிரம் மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், மேலும் 20 ஆயிரம் மின்கம்பங்கள் புதிதாக நடப்படும் என்றும், சென்னையில் பூமிக்கு அடியில் மின்கம்பி செல்வது போல் புறநகர் பகுதிக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!