ஜெயலலிதாவுக்குப் பிடித்த ஏமாற்றுக்காரர் யார் தெரியுமா?

ஜெயலலிதா

"என்ன! ஏமாற்றுபவரைக் கூட பிடிக்குமா?" என்ற கேள்வி பலரது மனத்தில் எழுவது புரிகிறது.

பிறருக்கு நஷ்டம் அல்லது துன்பம் ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றுபவர் எவராயினும் வெறுக்கத்தக்கவர்தான். சந்தேகமில்லை.
ஆனால், இங்கே குறிப்பிடவிருக்கும் 'ஏமாற்றுக்காரர்' செய்த 'மோசடியினால்' எவரும் பாதிக்கப்படவில்லை. மாறாக நன்மையே விளைந்தது.

இந்தியாவை ஆண்ட முகலாய சாம்ராஜ்ய சக்ரவர்த்திகளில் ஒருவரான ஜகாங்கீருடைய மூத்த மகன் இளவரசர் குஸ்டோ (1587 - 1622). தாஜ்மகாலைக் கட்டிய முகலாய சக்ரவர்த்தி ஷாஜகானுடைய அண்ணன்தான் இளவரசர் குஸ்ரோ.
1606-ம் ஆண்டில் தந்தை ஜகாங்கீருக்கு எதிராகக் கலகம் செய்து அவர் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்த குற்றத்துக்காக, குஸ்ரோவுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. குஸ்ரோவின் கண் பார்வை பறிக்கப்பட வேண்டும் என்று ஜஹாங்கீர் ஆணையிட்டார்.

தந்தையின் தீர்ப்புக்குத் தலைவணங்கிய குஸ்ரோ, ஒரே ஒரு வேண்டுகோளை பணிவுடன் விடுத்தார். கொடூரமான இந்தத் தண்டனையை தனக்குத் தானே நிறைவேற்றிக்கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டுமென கோரினார். அதற்கு ஜகாங்கீர் சம்மதம் தெரிவித்தார்.

குஸ்ரோவிடம் ஒரு நீண்ட இரும்பு ஊசியும், எரியும் தீப்பந்தமும் தரப்பட்டது. தீயில் காய்ச்சிய இரும்பு ஊசியை எப்படி கண்விழிக்குள் பாய்ச்சுவது, எப்படி கண்பார்வையை அழித்துக்கொள்வது என்று அரண்மனைச் சிறைச்சாலையில் வழக்கமாகத் தண்டனை நிறைவேற்றுபவர் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார். மேலும் குஸ்ரோவிடம் தையல் ஊசியும், நூலும் தரப்பட்டது. அத்துடன் இளவரசர் அரண்மனையில் ஒரு தனி அறைக்குள் அடைக்கப்பட்டார். வெளியில் பலத்த காவல் போடப்பட்டது.
வெளியில் வந்தபோது குஸ்ரோவின் பார்வையற்ற கண்கள் இறுக்கமாக மூடப்பட்டு கண் இரப்பைகளின் ஓரங்கள் நூலால் தைக்கப்பட்டிருந்தன.

ஓராண்டு கழிந்தது. அதற்குள் ஜகாங்கீர் தன் மூத்த மகனுக்கு விதித்த இரக்கமற்ற தண்டனையை எண்ணி பெரிதும் பச்சாதப்பட்டார். அவசரப்பட்டு ஆத்திரத்தில் இப்படி ஆணையிட்டு விட்டோமே என்று பெரிதும் வருந்தினார். சாம்ராஜ்யத்திலுள்ள அத்தனை பெரிய திறமை வாய்ந்த வைத்தியர்களையும் வரவழைத்தார். "எப்படியாவது என் மகனுக்கு கண் பார்வை திரும்பக் கிடைக்கச் செய்யுங்கள்!" என்று மன்றாடினார்.

வைத்தியர்கள் மிகுந்த கவனத்துடன் இரப்பைகளைச் சேர்த்து தைக்கப்பட்டிருந்த நூல்களை மெதுவாக அகற்றினார்கள்.
இமைகள் திறந்ததும் குஸ்ரோவின்  விழிகள் எந்தச் சேதமும் இன்றி முழுதாக இருப்பதைக் கண்டு பிடித்தார்கள் - வியந்தார்கள்.
எல்லோருக்கும் அளவிலா மகிழ்ச்சி! விரைவில் குஸ்ரோவால் நன்றாகப் பார்க்க முடிந்தது.

எப்படியும் தந்தையின் மனம் ஒருநாள் மாறும், அவருடைய சினம் தணியும் என்பதை முன் கூட்டியே எதிர்பார்த்த குஸ்ரோ, சாதுர்யமாக கண் விழிகளை ஒன்றும் செய்யாமல் அவற்றுக்கு மேல் கண் இரப்பைகளை இழுத்து மூடி தானே நூலால் தைத்துக் கொண்டார்.

கொடூரமான விதியை இப்படி தந்திரமாக மதியால் வென்ற 'ஏமாற்றுக்காரரை' எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்.


- 'தாய்' வார இதழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய தொடரின் ஒரு பகுதி.
நன்றி: தாய் இதழ், தொகுப்பில் உதவி: குறள் பித்தன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!