சசிகலா பொதுச் செயலாளரானால் இதுதான் நடக்கும்! சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அலர்ட்

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே சசிகலா, பொதுச் செயலாளராகக் கூடாது என்று சட்டபஞ்சாயத்து இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்று கட்சியின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் பகிரங்கமாகவே சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ கூறுகையில், "கால் நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கோலோச்சியவர் ஜெயலலிதா. ஒரு அரசியல் இயக்கத்தை கட்டுகோப்புடன்  வழி நடத்தியவர் அவர். ஜெயலலிதாவின் மரணம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அ.தி.மு.க.வில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலாதான் வரவேண்டும், அவரை விட்டால் அந்த கட்சியை யார் வழிநடத்த முடியும் என திட்டமிட்டு செயற்கைதனமாக அந்தக்கட்சியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் கருத்து உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சசிகலாவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பே இல்லாதது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். யார் வந்தால் என்ன? அது அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னை என்று ஒதுங்கி வேடிக்கை பார்க்க முடியாது. ஏனெனில் யார் இந்த கட்சியை வழிநடத்த முன்வருகிறார்களோ அவரின் கட்டுப்பாட்டில் தான் தமிழக அரசும் இயங்கும். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமிழக மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.  அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றால் நாளை அவர் முதல்வராகவும் வாய்ப்புள்ளது. இது நடந்தால் தமிழக அரசு மிகவும் மோசமான நிலைக்கு வந்துவிடும். அது அனைத்து தமிழக மக்களையும் பாதிக்கும் என்பதால்தான் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்க கூடாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் எச்சரிக்கிறது. இதற்கு சில காரணங்களையும் சொல்கிறோம்.

* சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றால் தமிழக அரசு சசிகலாவின் கட்டுப்பாட்டில் இயங்கும். அதனால் சசிகலாவின் உறவினர்களின் சொல்படிதான் தமிழக அரசு இயங்கும். அரசு நிர்வாகத்தில் பல அதிகார மையங்கள் உருவாகி ஊழலில் தமிழக அரசு சிக்கித் தவிக்கும். ஏனெனில் ஜெயலலிதாவால் துரோகிகளாக கண்டறியப்பட்டு கட்சியை விட்டு விரட்டப்பட்டவர்களை கொண்டு கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். இது கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்லதல்ல.

* வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். இன்று அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஊழலில் சொத்து சேர்த்து தண்டனை பெற்றவர் ஊழல் இல்லா ஆட்சியை எப்படி கொடுக்க முடியும்?

* ஜெயலலிதாவுக்கு எதிராக துரோக சதிவலை பின்னியதில் சசிகலாவுக்கும் பங்குண்டு என்பதால் சசிகலா உட்பட 14  பேரை கட்சியை விட்டு 19/12/2011ல் ஜெயலலிதா நீக்கினார். பிறகு சசிகலா 28/03/2012ல் ஜெயலலிதாவுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தார்.

அந்த கடிதத்தில் சசிகலா கூறியது, "அக்கா எடுத்த ஒழுங்கு நடவடிக்கைக்கு பின்புதான் அதற்கான காரணம், பின்னணி, வெளியில் என்ன நடந்தது என்ற உண்மைகள் எனக்கு தெரிய வந்தன. அக்காவுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வேதனை அடைந்தேன். இவை எல்லாம் எனக்கு தெரியாமலேயே நடந்துள்ளன. அக்காவுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். இனிமேல் அவர்களுடன் எனக்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. அரசியலில் ஈடுபட வேண்டும், கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும், அமைச்சர் பதவியை அடைய வேண்டும், ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு கிடையாது. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன்" என்ற மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு தான் 31/03/2012ல் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துகொள்வதாகவும் மற்ற துரோகிகளான எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர்.என்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், பி.வி.மகாதேவன், தங்கமணி உள்ளிட்டோரும் மேலும் அடுத்த அறிக்கையில் கலியபெருமாள், எம்.பழனிவேல், வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி சுந்தரவனம், சுந்தரவனம், வைஜெயந்திமாலா, ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடரும் என்று தெரிவித்திருந்தார். இன்று வரை மேற்கண்ட 19 பேரும் ஜெயலலிதாவின் துரோகிகள் பட்டியலில் தொடர்கிறார்கள். இந்த துரோகிகளை வைத்துக்கொண்டு சசிகலா, ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் சகுனி ஆட்டம் ஆடியதை நாடே அறியும். ஜெயலலிதாவால் துரோகிகளாக விரட்டப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு இன்று சசிகலா, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறார். நீக்கப்பட்ட தன் உறவுகளுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்ன சசிகலா, அரசியல் ஆசை இல்லை என்று சொன்ன சசிகலாதான் இன்று மீண்டும் ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சியை தன் வசப்படுத்த காய்களை நகர்த்துகிறார். இதை தடுக்கத்தான் சட்ட பஞ்சாயத்து இயக்கம் களம் இறங்குகிறது.

* யார் யாருக்கோ கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்த ஜெயலலிதா, தனது உடன் பிறவா சகோதரியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு ஏன் கட்சியில், ஆட்சியில் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கவில்லை என்று எண்ணிப்பார்க்க வேண்டும். 30 ஆண்டு காலம் உடனிருந்து உதவிய சசிகலாவுக்கு அவ்வாறான தகுதிகள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் அவருக்கு எந்த பொறுப்பையும் ஜெயலலிதா கொடுக்கவில்லை. அவரை பொறுத்தவரை சசிகலா நல்ல உதவியாளர், உடன்பிறவா சகோதரி அவ்வளவு தான். வேலைக்காரரை குறுக்கு வழியில் எஜமானியாக்க துரோகிகள் கூட்டம் முயற்சி செய்வதை தடுக்க வேண்டும். தகுதியானவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

* யாரெல்லாம் சசிகலாவை பொதுச் செயலாளராக ஆதரவு அளிக்கிறார்கள் என்று பார்த்தால் ஜெயலலிதாவால் துரோகிகளாக கண்டறியப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள். மேலும், ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்ட கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் உயர் அரசு அலுவலர்கள். கொள்ளையடிக்க நினைக்கும், உள்ளாட்சி பொறுப்பாளர்கள், எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள். இந்த மூன்று பிரிவினர் தான் சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என அரசியல் சடுகுடு வேலையில் இறங்கி உள்ளார்கள்.

உண்மையான கட்சி தொண்டர்களும், அதிமுக விசுவாசிகளும் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட மன்னார்குடி துரோகிகளை விரட்ட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதுதான் ஜெயலலிதாவுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். எனவேதான் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க கூடாது என எச்சரிக்கை செய்கிறது.

ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால், இந்த துரோகச் செயலை மக்களிடத்தில் எடுத்து சென்று மக்களை திரட்டி ஊழல் ஆட்சியை துரோக அரசியலை அகற்றி ஊழலில்லா மக்கள் வளர்ச்சிக்கான நல்லாட்சி அமைய சட்ட பஞ்சாயத்து இயக்கம் களமிறங்கும் என துரோகிகளை இதன் மூலம் எச்சரிக்கிறோம்" என்றார்.


- எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!