வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (17/12/2016)

கடைசி தொடர்பு:16:38 (17/12/2016)

சசிகலாவுக்கு 'செக்' வைத்தாரா ஜெயலலிதா? -அ.தி.மு.க உறுப்பினர் அட்டை மர்மம் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'ஜெயலலிதா தலைமையில் நடந்த கடைசி செயற்குழு கூட்டத்திலும் சசிகலா பெயர் இல்லை. அவருக்கு உறுப்பினர் அட்டையையே முதல்வர் வழங்கவில்லை' என்கின்றனர் சசிகலா எதிர்ப்பு அணியினர். 

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக, போயஸ் கார்டனில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் சசிகலா. பொதுக்குழுவை எங்கே நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சசிகலா மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் நீதியரசர் கல்யாண சுந்தரம். "கட்சியின் சட்டவிதிகளைத் தாண்டி குறுக்கு வழியில் சசிகலா தேர்வாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழக்குப் போடப்பட்டது. சட்டரீதியான போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், அ.தி.மு.க.வின் உறுப்பினர் அட்டையை சசிகலாவுக்கு ஜெயலலிதா வழங்கவில்லை என்பதுதான் உண்மை. இதுகுறித்த அனைத்து ஆதாரங்களையும் மத்திய உளவுப் பிரிவு சேகரித்துவிட்டது. 'சசிகலா பொதுச் செயலாளர் ஆனால், அ.தி.மு.க அழிந்துவிடும்' என ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க.வின் சீனியர்கள் ஒரே குரலில் சசிகலாவை ஆதரிக்கின்றனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் அல்லாத ஒருவர், ஒரு கட்சிக்குத் தலைமை தாங்க முடியுமா? என்ற கேள்விதான் எங்களுக்குள் எழுந்துள்ளது" என விவரித்த சசிகலா எதிர்ப்பு அணியினர், தொடர்ந்து நம்மிடம், 

"2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சசிகலாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, 2011-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா. இதுகுறித்து நமது எம்.ஜி.ஆரில் அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு, 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய பின்னரே, அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆனால், 'அவருடைய உறவினர்கள் நீக்கம் தொடரும்' என அறிவித்தார் ஜெயலலிதா. மீண்டும் போயஸ் கார்டனுக்குள் சசிகலாவும் அவரைத் தொடர்ந்து இளவரசியும் வந்துவிட்டனர். இருவருக்கும் கட்சியின் உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா மீண்டும் வழங்கவில்லை. அவர்களும் அதைக் கேட்டுப் பெறவில்லை. கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிலும் சசிகலா பெயர் இல்லை. இதை உறுதியாகச் சொல்லக் காரணம்.

கடந்த ஜுன் 18-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை. அவர் செயற்குழு உறுப்பினராக இருந்திருந்தால் பெயர் இடம் பெற்றிருக்கும். இதுகுறித்து ஆவணங்கள் அனைத்தும் மத்திய உளவுப்பிரிவின் வசம் உள்ளன. இதை வைத்துக் கொண்டு மத்திய அரசு சில வேலைகளில் இறங்கலாம். அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்புக்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். அதில், எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தேர்வு செய்யப்படுபவர் நேர் வழியில் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். இதையும் மீறி பொதுக்குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்ப இருக்கிறோம். அதில், சசிகலாவின் உறுப்பினர் அட்டையை ஆராயுமாறு தெரிவிப்போம். அதை பரிசீலிக்கும்போது அதன் உண்மைத்தன்மை தெரிந்துவிடும். 2012-ம் ஆண்டு கட்சிக்குள் சேர்க்கப்பட்டாலும், உறுப்பினர் அட்டை இல்லாவிட்டால், கட்சிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாகிவிடும். பொதுக்குழு தேதி அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்" என்றார் நிதானமாக. 

பொதுக்குழுவுக்கு எதிராக நடக்கும் விவகாரங்களை சமாளிப்பது குறித்து, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் மன்னார்குடி தரப்பினர். 'டிசம்பர் 24-ம் தேதிக்குப் பிறகு பொதுக்குழு கூடும்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அதுவரையில் போயஸ் வட்டாரத்தின் பதற்றம் நீடித்துக் கொண்டேதான் இருக்கும்! 

- ஆ.விஜயானந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்