‘ஜெயலலிதா இடத்தை சசிகலா நிரப்புவார்!’  - புலவர் புலமைப்பித்தனின் லாஜிக்

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. 'மன்னார்குடி குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல், அவர் கட்சியை வழிநடத்த வேண்டும்' என வேண்டுகோள் வைக்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன். 

அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில், அவருடன் இருந்து பணியாற்றியவர்களில் முக்கியமானவர் புலவர் புலமைப்பித்தன். ஏறத்தாது 44 ஆண்டுகளாக அ.தி.மு.கவில் உறுப்பினராக இருந்து வருகிறார். 'அ.தி.மு.கவின் அவைத் தலைவராக புலவரை நாம் பெற்றிருப்பது, நாம் செய்த பாக்கியம்' என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர். தற்போது அ.தி.மு.கவில் இருந்தாலும், கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். தேர்தல் நேரங்களில் மட்டும் ஜெயலலிதாவுக்குப் பாட்டெழுத வெளியில் வருவார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளராக அ.தி.மு.கவினரால் முன்னிறுத்தப்படுகிறார் சசிகலா. ' ஜெயலலிதாவைப் போல், கட்சியை கட்டுக்கோப்பாக சசிகலாவால் வழிநடத்த முடியுமா?' என்ற கேள்வியை, புலவர் புலமைப்பித்தனிடம் கேட்டோம். 

"முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு, கட்சியின் வளர்ச்சிக்கு சசிகலாவின் தேவை அவசியம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். ஜெயலலிதாவுடன் அவருக்குள்ள நட்புக்கு 34 ஆண்டுகள் ஆகின்றது. அவர்கள் இருவருக்கும் இடையில், நட்பு தொடங்கியபோது, அவருடைய வயது 31. தற்போது அவருக்கு வயது 65. அந்த இள வயது என்பது வாழ்க்கையின் வசந்தகாலம் தொடங்கும் பருவம். தன்னுடைய குடும்பத்தைவிட்டுத் துறவு மனநிலையோடுதான் கார்டனுக்குள் வந்தார். ஜெயலலிதா பட்ட துன்பத்தில் பாதிக்கும் மேல் இவரும் அனுபவித்தார். ஓராண்டு சிறைத் துன்பத்தையும் அனுபவித்தார்.

ஜெயலலிதாவுடன் இருந்ததில் லாபம் என்று பார்ப்பதைக் காட்டிலும், இதை ஒரு தியாகம் என்றே பார்க்க வேண்டும். வேறு ஒரு பெண்ணுக்காக தனக்கு சம்பந்தமில்லாத துன்பங்களை அவர் அனுபவித்தவர். அவர் மீது மற்றவர்களுக்கு ஆயிரம் சந்தேகங்கள் வரலாம். தலைவர் இறந்தபோதுகூட, மோரில் விஷம் வைத்துக் கொடுத்தார்கள் என்றெல்லாம் தகவல் பரப்பினார்கள். சந்தேகம் மிக மோசமான நோய். அப்படி சந்தேகப்படுகிறவர்கள் தீய நோக்கோடு செயல்படுகிறார்கள் என்று அர்த்தம். இன்றைக்குக் கட்சி கட்டுக்கோப்போடு செயல்படுகிறது. சசிகலா மீது சந்தேகப்பட துளியும் இடமில்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனையில் சந்தேகப்படும் அளவுக்கு எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. மருத்துவமனையின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும் என அந்த நிர்வாகத்திற்கு அக்கறை இருக்காதா? 

ஆட்சித் தலைமைக்கு ஓ.பி.எஸ் இருக்கிறார். கட்சித் தலைமை சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது நீடித்து வந்த அதே கட்டுக்கோப்பு நீடிக்கும். அவரைத் தவிர, வேறு யாரும் அந்த இடத்திற்கு வர முடியாது. இரண்டாம் கட்டத் தலைமையை ஜெயலலிதா உருவாக்கவில்லை. 'ஆட்சிக்கு ஓ.பி.எஸ் சரியானவர்' என்பதுதான் என்னுடைய கருத்து. முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவிக்கு வந்திருக்கிறார். அவர் அமைதியானவர், ஆர்ப்பாட்டமில்லாதவர். ஆட்சியை ஒழுங்காக நடத்துவார். ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டும் வேறு வேறு நபர்களிடம் இருப்பதுதான் நல்லது. மீண்டும் மன்னார்குடி ஆட்களால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வராது. அம்மாவின் புகழைக் காப்பாற்றுவதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கும். ஜெயலலிதாவுடன் அருகில் அமர்ந்து, 34 ஆண்டுகள் அரசியல் பயிற்சி பெற்றவர் சசிகலா. எந்தச் செயலை எப்படி அணுக வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். ஜெயலலிதாவின் அரசியல் மாணவி சசிகலா. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக ஜெயலலிதாவும் சசிகலாவும் இருந்தார்கள். தற்போது என்னுடைய உடல்நிலை சரியில்லாததால், நேரில் சென்று சசிகலாவை சந்திக்க முடியவில்லை. 

ஜெயலலிதா அளவுக்கு அவரால் செயல்பட முடியுமா என்பது நாம் எதிர்பார்க்கும் நம்பிக்கை. தலைவர் மறைந்தபோது பெரிய வெற்றிடம் உருவானது. இரண்டு அணிகளாகப் பிரிந்தார்கள். நான் அப்போது ஜெயலலிதாவின் பக்கம் நின்றேன். அவரால் கட்சியை வளர்க்க முடியும் என நம்பினேன். நான் ஆதரித்ததை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஆனால், மிகப் பிரமாண்டமாக அ.தி.மு.கவை வளர்த்தார் ஜெயலலிதா. தொடர்ச்சியாக 29 ஆண்டுகள் அ.தி.மு.கவை எஃகு கோட்டையாக உருவாக்கினார். அதேபோல்தான், சசிகலாவையும் நான் நம்புகிறேன். மன்னார்குடி உறவுகள் என்பது வெளியில் சொல்லப்படும் தேவையற்ற குற்றச்சாட்டுகள். எனக்கு சில உறவுகள் இருக்கின்றார்கள் என்றால், அவர்கள் என்னை வந்து சந்திப்பது இயல்பானது. அவர்களுடைய தலையீடு அரசியலில் இருந்தால்தான் தவறு. அதை ஒரு பெரிய குறையாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. சசிகலா யாருக்கும் கட்டுப்பட மாட்டார். அவருக்குள்ள லட்சியம், ஜெயலலிதா விட்டுப் போன இடத்தை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பதுதான்" என்றார் விரிவாக. 

-ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!