வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (19/12/2016)

கடைசி தொடர்பு:15:11 (19/12/2016)

சசிகலாவை சந்திக்கும் படலம் எப்படி நடக்கிறது? ஒரு மாவட்டச் செயலாளரின் நேரடி அனுபவம் #VikatanExclusive

போயஸ் கார்டனுக்கு வரும் மாவட்டச் செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா பெரும்பாலும் உரையாடுவதே இல்லையாம். சைகை மூலமே பேசிவிடுகிறார். அதோடு ஜெயலலிதாவைப் போல யாரும் சசிகலாவை நெருங்க விடாமல் கயிறு மூலம் தடுப்புகளை ஏற்படுத்தியே சந்திக்க அனுமதிக்கின்றனர் என்கின்றனர் கார்டன் நிர்வாகிகள்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளர் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சசிகலாவை பொதுச் செயலாளராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த தீர்மான நகல் மற்றும் சசிகலாவுக்கான தங்களது ஆதரவு கடிதத்தை போயஸ் கார்டனில், மாவட்டச் செயலாளர் தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து கொடுத்து வருகின்றனர். 

முன்பெல்லாம் தினமும் திறக்கப்படாத போயஸ் கார்டன் கதவு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியினரை சந்திக்க தினமும் குறிப்பிட்ட நேரம் திறந்து வைக்கப்படுகிறது. 'சசிகலாதான் பொதுச் செயலாளர்' என்ற ஆதரவு கடிதத்தை கொடுக்க வரும் நிர்வாகிகள்,  போயஸ் கார்டனின் வராண்டா வரை அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விவரம் கார்டனில் இருக்கும் முக்கிய நிர்வாகி ஒருவர் மூலம் சசிகலாவுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கட்சிப் பிரமுகர்கள் போயஸ் கார்டனுக்கு சென்றால் என்ன நடக்கும் என்று விவரிக்கிறார் சமீபத்தில் அங்கு சென்று வந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் ஒருவர். "கார்டனில் இருக்கும் நிர்வாகிகளை முதலில் சந்தித்தோம். அப்போது அவர்கள் எங்களது விவரங்களை கேட்டனர். பிறகு, வராண்டா முன்பு வெள்ளை நிற கயிறுடன் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் அந்தக் கயிற்றை இழுத்துப்  பிடித்துக் கொண்டவுடன் அதற்குப் பின்னால் மாவட்டச் செயலாளர் முதல் அனைவரையும்  வரிசையாக நிற்க வைக்கிறார்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு அங்கு சின்னம்மா வந்தார். அவரிடம், எங்கள் விவரத்தை கார்டன் நிர்வாகி தெரிவித்தார். அதையெல்லாம் அமைதியாக சசிகலா, கேட்டார். பிறகு, நாங்கள் கொடுத்த ஆதரவு கடிதத்தை பெற்றுக் கொண்டு சைகை மூலமே சின்னம்மா பதில் அளித்தார்.

அப்போது, 'சின்னம்மா, நீங்கள்தான் அடுத்த பொதுச்செயலாளர், முதல்வர்' என்று கட்சியினர் சொன்னதும், அதற்கும் அமைதியாக தலையை அசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அம்மாவை (ஜெயலலிதா) சந்திக்கும் போதுதான் இதுபோன்ற கெடுபிடிகள் இருக்கும். தற்போது அதே நிலையே தொடர்கிறது. மாவட்டச் செயலாளராக இருப்பவர்களிடமிருந்தும் சில அடி தூரம் விலகியே சின்னம்மா இருக்கிறார். இது சில மாவட்டச் செயலாளர்களுக்கு வருத்தம் அளித்தாலும் இன்றைய சூழ்நிலையில் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் கட்சியினர் உள்ளனர்" என்றார்.

இதுகுறித்து கார்டன் வட்டாரத்தில் விசாரித்தால், "சின்னம்மாவை சந்திக்க வரும் கட்சியினர் உணர்ச்சிவயப்பட்டு அவரது அருகிலேயே சென்றுவிடுகின்றனர். அதை தவிர்க்கவே கயிறு மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும், அம்மா இறந்த துக்கத்திலிருந்து இன்னும் சின்னம்மா மீளவில்லை. இதனால், அவருக்கு தெரிந்தவர்களைத் தவிர மற்ற கட்சியினரிடம் மனம்விட்டு பேசுவதில்லை. அவ்வாறு அவர் பேசினால் அழுதுவிடுகிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் பல கி.மீட்டர் தூரத்திலிருந்து வரும் தொண்டர்களுக்கு ஆறுதல் கூறவே கட்சியினரை அவர் சந்தித்து வருகிறார். துக்கத்தை மறைத்துக் கொண்டு சைகை மூலமே தொண்டர்களிடம் பேசி வருகிறார். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" என்றனர்.

ஜெயலலிதாவுக்குரிய மரியாதை இப்போதே சசிகலாவுக்கும் கட்சியினரால் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பாணியிலேயே சசிகலாவின் ஒவ்வொரு அசைவுகளும் கட்சியினரிடம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரிகிறது!

- நமது நிருபர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்