வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (19/12/2016)

கடைசி தொடர்பு:15:24 (19/12/2016)

அரசு செல்போன் காலர்-டியூனாக ‘பாட்ஷா’ வசனம்! - கொந்தளிக்கும் பப்ளிக்

ர்தா புயலின் தாக்கத்தால் சென்னையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சேதத்தின் வடு இன்னும் மறையவில்லை. புயல் புரட்டிப்போட்டதில், அறுந்து விழுந்த மின்கம்பிகள் மற்றும் சாய்ந்த கம்பங்களை சீரமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிற போதிலும், பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான இடங்கள் இன்னமும் இருளிலிருந்து விடுபடவில்லை.

சாமான்ய மக்களின், ஒரே பொழுதுபோக்கான தொலைக்காட்சிக்குரிய கேபிள் இணைப்புகளும் புயலால் பெருமளவு சேதம் அடைந்துள்ளன. இதனால் துண்டிக்கப்பட்டுள்ள கேபிள்களை சரிசெய்யும் பணிகள் நடைபெறுவதால், மக்கள் தொலைக்காட்சிகளில் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மின்தடை சீரமைப்பு மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க குறைந்தபட்சம் மாநகராட்சி மண்டலத்துக்கு இரண்டு துணை மின்நிலையங்கள் வீதம் செயல்பட்டு வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் விடுமுறை என்றால், தண்டையார்பேட்டை ஆய்வாளர் கூடுதலாக பொறுப்புகளைக் கவனிப்பார்.

அரசுத் துறைகள் பலவற்றில் ஆள்பற்றாக்குறை காரணமாக இதுபோன்ற பொறுப்பு ஆய்வாளர்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கூடுதலாக பக்கத்து அலுவலகத்தையும் கண்காணிக்க வேண்டிய நிலை உருவாகும். அதிகாரிகளின் போன் நம்பரையும் இதுபோன்று பொறுப்பு போன் நம்பராகக் கொடுப்பார்களா என்பது புரியவில்லை.

 

 

இந்நிலையில், 'வர்தா' புயல் தாக்கத்திற்குப் பின்னர் மின்வாரிய துணை மின்நிலைய செயல்பாடுகள் குறித்து அறிந்து வரச் சென்ற போதுதான், இதுபோன்ற 'பொறுப்பு போன்' நம்பர்' பற்றி அறிய முடிந்தது. மின் வாரியத்தின் இரண்டு துணை மின்நிலையங்களுக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரே செல்போன் எண்ணை பயன்படுத்துவது வேடிக்கையாக இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குப்பட்ட ராயபுரம் மற்றும் பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் மின்சார இணைப்பை சரிசெய்ய வலயுறுத்தியும், மின் தடையை ரத்து செய்யக் கோரியும் தினமும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை காண முடிந்தது.

மின்சார வாரியத்தின் துணை மின் நிலையங்களுக்கு போன் செய்தால், "சம்பந்தப்பட்ட அதிகாரி விடுமுறையில் சென்றிருக்கிறார். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது" என்று பொறியாளர் நிலையில் உள்ள அதிகாரிகளே தெரிவிப்பதாகக குமுறுகின்றனர் வடசென்னைவாசிகள். "பல நேரங்களில் போனை எடுப்பதில்லை. அப்படியே எடுத்தாலும், விடுப்பில் சென்றிருப்பதால், நாங்கள் என்ன செய்யமுடியும்?" என்கின்றனர் அவர்கள்.

மின்தடை தொடர்பாக, சாலைமறியலில் ஈடுபடுவோரிடம் அரசியல்வாதிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை. ஒவ்வொரு முறையும் அதில் ஈடுபடுவது போலீசார் மட்டுமே.

சாலைமறியல் தொடர்பாக, வடசென்னையைச் சேர்ந்த ஒருவர், "வண்ணாரப் பேட்டை- ஆர்.கே.நகர் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் மின் வாரிய தொடர்பு எண்ணாக 9445850974 என்ற ஒரே மொபைல் எண்ணை அளித்துள்ளனர். அந்த எண்ணில் பேசிப்பாருங்கள்" என்று நம்மிடம் தெரிவித்தார்.

உடனடியாக அந்த எண்ணுக்குப் பேசிப் பார்தோம். "ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான்... ஆனா கைவிட மாட்டான்.." என்ற 'பாட்ஷா' படத்தில் வரும் ரஜினிகாந்த் வசனம் ரிங் டோனாக ஒலித்தது. ஆனால், அந்த அழைப்பை யாரும் எடுக்கவில்லை. நீண்ட ரிங் டோன் போய் நிறைவடைந்தது. உடனடியாக அந்த நபர், "இதுமாதிரி நாங்க. நூறு முறை கேட்டுட்டோம். ஆனா, இதே மாதிரிதான். யாரும் எடுப்பதில்லை. எடுத்தாலும் பொறுப்புடன் எந்தப் பதிலும் சொல்வதில்லை, வேறுவேறு துணை மின்நிலையங்களுக்கு ஒரே தொலைபேசி எண்ணை அளித்திருப்பதுடன், இதுபோன்ற நிலை நீடித்தால், நாங்க என்ன செய்ய முடியும்" என அங்கலாய்த்தார்.

மக்களின் அன்றாட வேதனை,  ஆட்சியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, நம்முடைய வரிப்பணத்தில் இருந்து அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு, முழுமையாகப் பணியாற்றாமல் இருக்கும் இதுபோன்ற சில அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் வேதனையான வேடிக்கை. இது நாட்டுக்கு நல்லதல்ல !

-ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்