வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (19/12/2016)

கடைசி தொடர்பு:12:14 (20/12/2016)

'முதலில் ஸ்வைப் மெஷின்..அடுத்து 2000 கடைகள் மூடல்':பரபரப்பில் டாஸ்மாக்!  

                  டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளில் நிலவும் சில்லறைத் தட்டுப்பாடு சிக்கலைத் தீர்க்க, தமிழகத்தில் உள்ள அனைத்துவித டாஸ்மாக் கடைகளிலும் 'ஸ்வைப் மெஷின்கள்'' வைக்க முடிவு செய்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.வரும் ஜனவரி மாதம், முதல் வாரத்துக்குள் மாநிலம் முழுக்கவுள்ள  6,856 கடைகளிலும் 'ஸ்வைப் மெஷின்' வைக்கப்படும் என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள்.
 
இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ராமு,

"இந்தியா முழுக்க சில்லறை தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.பிரதமர் மோடி, பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.அதனையடுத்து டாஸ்மாக் கடைகளில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சரக்கு விற்பனை சரிவில்தான் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தரும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கொடுக்கமுடியாமல் பணியாளர்கள் தவித்து வருகிறார்கள். பல கடைகளில் தினமும் சில்லறை இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்களுக்கும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும் வாக்குவாதம் நடப்பது வாடிக்கையாகவே இருக்கிறது.

இதனால் விற்பனையும் மந்தமாகியுள்ளது. அதனால் எல்லா கடைகளிலும் ஸ்வைப் மெஷின் வைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக டாஸ்மாக் நிர்வாக உயரதிகாரிகள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து 'ஸ்வைப் மெஷின்' வைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.இந்த வாரத்தின் இறுதிக்குள் ஸ்வைப் மெஷின் வைக்கும் திட்டம் குறித்த ஆலோசனைகள் முடிந்து, வரும் 2017-ம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் எலைட் கடைகள் உட்பட அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின் நடைமுறைக்கு வரும்." என்று தெரிவித்தார்.

            டாஸ்மாக்

2000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது எப்போது?

உச்ச நீதிமன்றம்,  தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 2000 கடைகளை மூடவேண்டும் என்றும், அதற்கு வரும் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்றும்  உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுக்க தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுமார் 3000 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இவற்றில் எந்தெந்தப் பகுதியில் உள்ள கடைகள் மூடப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளால் அல்லல்பட்டு வரும் பொதுமக்கள்,  மாநில அரசுக்கு அளித்த புகார்களின் அடிப்படையில் கடைகள் மூடப்படுமா அல்லது புதியதாக பொதுமக்கள் மத்தியில் இருந்து புகார்கள் பெறப்பட்டு அவற்றைப் பரிசீலனை செய்து, அதனடிப்படையில் கடைகள் மூடப்படுமா என்பது தெரியவில்லை. இந்நிலையில்,கடைகள் மூடுவது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

அவர் கூறுகையில்,"உச்ச நீதிமன்றம் 2000 கடைகளை மூட காலஅவகாசம் கொடுத்துள்ளது. அதனால் உடனடியாக மூட வேண்டியதில்லை. ஏற்கெனவே 500 கடைகள் மூடப்பட்டுள்ளன.சரக்கு விற்பனை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனைகள் நடந்துவருகின்றன. அநேகமாக நீதிமன்றம் கூறியுள்ள தேதிக்கு முன்பாகவே கடைகள் மூடப்படவும் வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

- சி.தேவராஜன்

    .                           

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்