வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (19/12/2016)

கடைசி தொடர்பு:18:14 (19/12/2016)

திருநாவுக்கரசர்- ஈ.வி.கே.எஸ் மோதலுக்கு இதுதான் காரணம்!

" ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் நிலவிவரும் நிலையில்,  அவரது மருத்துவ சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கூறிய என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார். அவர் மனநிலை பாதிக்கப்படாமல் திடமனதோடு இருப்பது சரியானால், ஏன் எல்லா இடங்களிலும், 'தான் அதிமுகவில் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருப்பேன்' எனக் கூறி வருகிறார்?" என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் நிலவிவரும் நிலையில், அவரது மருத்துவ சிகிச்சை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் 'வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் எனக் கோரி வரும் நிலையில், அதற்கு எதிர்வினையாக அதிமுகவினரை முந்திக்கொண்டு திருநாவுக்கரசர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி "வெள்ளை அறிக்கையும் தேவையில்லை, கறுப்பு அறிக்கையும் தேவையில்லை. இந்த அறிக்கைகளால் மறைந்த ஜெயலலிதா உயிரோடு வந்துவிடப்போகிறாரா" என பேட்டி அளித்துள்ளார். அவரது இந்த பேட்டி, தமிழக மக்களுக்கு மட்டுமின்றி அதிமுகவின் விசுவாசமிக்கத் தாெண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. 

இது குறித்து எனது கருத்தை நான் பத்திரிகையாளர்களிடம் கூறியபோது, 'ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை தேவை' என்று கூறினேன். இதற்காக என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என பத்திரிகையாளர்களிடம் சாடியிருக்கிறார் திருநாவுக்கரசர். அவர் மனநிலை பாதிக்கப்படாமல் திடமனதோடு இருப்பது சரியானால், ஏன் எல்லா இடங்களிலும், 'தான் அதிமுகவில் இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருப்பேன்' எனக் கூறி வருகிறார். நேற்று கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் இந்தக் கருத்தினை பதிவு செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு, அதிமுகவில் தான் இருந்திருந்தால் முதலமைச்சர் ஆகியிருப்பேன் எனச் சிந்திப்பதுதான் திடமான மனநிலையா?

வெள்ளை அறிக்கை வேண்டாம் என தாம் சொன்னது சொந்தக் கருத்து அல்ல, காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றும் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் கருத்து என்றால் அது குறித்து செயற்குழுவைக் கூட்டி முடிவெடித்தாரா, அல்லது மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் கலந்து பேசி அறிவித்தாரா? இது குறித்து அவர் தெளிவுபடுத்தினால் அவரது கருத்தினை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.

மேலும், ஜெயலலிதாவோடு தான் பணியாற்றிய காரணத்தால், அவரது மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டாம் என சொன்னதாகக் கூறியிருக்கிறார். இதேபோல் பிரதமர் மோடியோடு பிஜேபியோடு பணியாற்றிய காரணத்தால், அவர் கொண்டு வந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டத்தால் வங்கிகளின் முன்னால் வரிசையில் நாட்கணக்கில் மக்கள் நின்று அவதியுறுவதை கண்டு, இத்திட்டத்தை ஆதரித்து, இதுவும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என திருநாவுக்கரசர் கூறப்போகிறாரா? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க