வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (21/12/2016)

கடைசி தொடர்பு:16:52 (21/12/2016)

தலைமைச் செயலகம்.... வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!

தலைமைச்செயலகம்

லைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு, அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டு தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இப்போது கூடுதல் அதிர்ச்சியாக தலைமைச் செயலகம்  உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலாளர் அறையிலும் ரெய்டு நடைபெற்றுள்ளது.

முதல்வர், அமைச்சர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தலைமைச் செயலாளர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்று. அவர் நிர்வாகத்திறனுக்கும் , நேர்மைக்கும் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர்கள் மீது குற்றசாட்டுகள் எழுந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். சஸ்பெண்ட் குற்றசாட்டுக்கு உள்ளானவர்கள் மீது துறை ரீதியான விசாரணைகள் நடைபெறும். ஆனால், முதன் முதலாக பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் வீட்டில் இது போன்று ரெய்டு நடப்பது முதன் முறை. அதே போல தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்றது தமிழகத்தில் இதுவே முதன் முறை. ஓமந்தூரார், காமராஜர், அண்ணா போன்றவர்கள் முதல்வராக இருந்து பணியாற்றிய தலைமைச் செயலகத்தில், இப்படி ஒரு தலைமை செயலாளர் இருந்தார் என்பதும் அவரது அலுவலகத்தில்  ரெய்டு நடந்தது என்பதும் தமிழகத்தின் ஆட்சி வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் ஆகவே பார்க்கப்படுகிறது.

ராம்மோகனராவ் 2017-ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் ஜெயலலிதா இவரைத் தலைமைச் செயலாளராக நியமித்தார். கடந்த  ஜூன் 8-ம் தேதிதான் தலைமை செயலாளராகப் பொறுப்பேற்றார். முதல்வரின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றியபோதே சக்தி மிக்கவராக வலம் வந்தவர், தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றபிறகு அவர் நடந்து கொண்டவிதம்தான் இப்போது அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்கின்றனர்.

-கே.பாலசுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்