ஓய்வூதியத்துக்காக தியாகிகள் போராடுவது வேதனையின் உச்சம்


ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதைக் காட்டிலும், ஓய்வூதியத்துக்காக அவர்கள் நடத்திய போராட்டம் கொடுமையானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி  அய்யாதேவர், ஓய்வூதியம் கேட்டு தாக்கல் செய்த மனுவை, மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தியாகி ஓய்வூதியம் தமக்கு வழங்கக் கோரி, உயர்நீதிமன்ற கிளையில் அய்யாதேவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதைக் காட்டிலும், ஓய்வூதியத்துக்காக சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டதை நிரூபிக்க நடத்தும் போராட்டம் கொடுமையானது என கருத்து தெரிவித்துள்ளார்.

அய்யாதேவர் என்பவர், நாட்டின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு, 1943-ம் ஆண்டு கர்நாடகத்தின் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கடந்த 1943 முதல் 1944-ம் ஆண்டு வரையிலான சிறை ஆவணங்கள் அழிந்துவிட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது அரசின் தவறு. அரசிடம் தவறு இருக்கும்போது மனுதாரரை குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது எனவும் நீதிபதி குறிப்பிட்டார். மனுதாரரின் தியாகி ஓய்வூதிய விண்ணப்பத்தை நிராகரித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறிய நீதிபதி, மனுதாரருக்கு 2 வாரத்தில் சுதந்திர போராட்ட தியாகிக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!