புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்... இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்!

கிரிஜா வைத்தியநாதன்

மிழக தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பவர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது இதுவே முதல் முறை என்று சொல்லப்பட்டது. எனவே, இப்போது ராமமோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இடைநீக்க உத்தரவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

ராமமோகன ராவ் வீட்டில் ரெய்டு தொடங்கியதில் இருந்தே அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி பரபரப்பாக வெளியாகத் தொடங்கியது. தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிலேயே பல ஆண்டுகள் அனுபவம் படைத்தவர்கள், மூத்தவருக்குத்தான் தலைமைச் செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், ராமமோகன ராவ் விஷயத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி வரிசையில் 19-வது இடத்தில் இருந்த ராமமோகன ராவுக்கு மற்ற 18 பேர்களை புறம் தள்ளி விட்டு தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. எனவே, இந்த முறை யாருக்கு தலைமைச் செயலாளர் பதவி தரப்படும் என்று கேள்வி எழுந்தது. 

நிலநிர்வாகத் துறையில் கூடுதல் முதன்மைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறையில் கூடுதல்முதன்மைச் செயலாளர் ஆக இருக்கும் கே.சண்முகம், பவர்பின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.கே.ஜெயகோடி ஆகிய மூன்று பேரின் பெயர்தான் தலைமைச்செயலாளர் பதவிக்கு அடிபட்டது.  

இப்போது கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எந்தவிதச் சர்ச்சைக்கும் ஆளாகாத ஒருவர் என்கிறார்கள். இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1959-ம் ஆண்டு பிறந்த இவர்  நடிகர் எஸ்.வி.சேகரின் உறவினர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன் 1981-ம் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் இணைந்தவர். மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறை, கல்வித் துறைகளில் உயர் அதிகாரியாக இருந்து பணியாற்றியுள்ளார். சுகாதாரத் துறையில் மட்டும் 15 ஆண்டுகள் பணியாற்றி குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்துள்ளார். நலவாழ்வு பொருளாதாரம் தொடர்பான ஆய்வு படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்ற கிரிஜா வைத்தியநாதன், சமூக நல்வாழ்வு துறையிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார், தமிழகத்தில் தாய் சேய் நலத்திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்  புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா .மாநில சுகாதார சங்கத் திட்ட இயக்குநராக இவர் இருந்த போது, தமிழகம் சிறந்த செயல்பாட்டிற்கான விருதை பெற்றது. சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்தவர் கிரிஜா வைத்தியநாதன்....

இவருடைய பெயர் கடந்த முறையே தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது, கிடைக்காத பொறுப்பு தற்போது கிடைத்துள்ளது. தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்போடு நிர்வாக சீர்த்திருத்தத் துறையையும் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 - கே. பாலசுப்பிரமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!