வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (23/12/2016)

கடைசி தொடர்பு:14:21 (23/12/2016)

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி வழங்கினார் முதல்வர் ஓ.பி.எஸ்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு ஊக்கத் தொகை 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 2 கோடி ரூபாய்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 1 கோடி ரூபாய்; வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் என உயர்த்தி வழங்க 19.12.2011 அன்று ஆணையிட்டார். 

அதேபோன்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாய், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் என ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கினார். பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த த.மாரியப்பனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு தமிழக அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று 10.9.2016 அன்று அறிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி, பாரா ஓலிம்பிக்ஸ் 2016 போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற த.மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையான 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார், த. மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா ஆகியோர் உடனிருந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க