வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (24/12/2016)

கடைசி தொடர்பு:15:58 (26/12/2016)

தமிழகத்தின் புதிய ஆளுநர் இவர்தானா?

ஆளுநர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கி வருகிறது. இதனிடையே, தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பு குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநாராகத்தான் இருக்கிறார். 

வித்யாசாகர் ராவ் தலைமையில்தான் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய அரசின் வழிநடத்துதலின் பேரில் வித்யாசாகர் ராவ் தமிழக ஆட்சியில் முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளார். இந்த நிலையில் புதிய ஆளுநர் நியமனத்துக்கான முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தின் ஆளுநராக கர்நாடக பாஜக மூத்த தலைவர் சங்கரமூர்த்தியை நியமிக்க இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. இவர் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவரும் ஆவார்.  1940ல் கர்நாடகா ஷிமோகாவில் அனுமந்தப்பா மற்றும் காமாக்‌ஷம்மாவுக்கு மகனாகப் பிறந்த இவர் ஆர்ய வைஸ்ய சமூகத்தைச் சேர்ந்தவர்.

பெங்களூரு பல்கலைக் கழகத்தில் அறிவியல் பாடத்தில் பட்டப் படிப்பு முடித்த இவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ஆரம்பத்தில் பாரதிய ஜன சங்கில் சேர்ந்தவர் பின்னர் அதன் மாவட்ட பொதுச் செயலாளராகவும், பின்னர் மாநில பொதுச் செயலாளராகவும் உயர்ந்தார். எமர்ஜென்சியின் போது கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் பெல்காமில் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

1980ல் பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.  கர்நாடகா மில்க் ஃபெடரேஷனுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அதற்கு முன் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர் 1988ல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு 1994, 2000, 2006 மற்றும் 2012 என தொடர்ந்து வெற்றி பெற்றார். 2002 - 2006 காலகட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அந்தச் சமயத்தில் அவை உறுப்பினர்கள் அனைவரின் மதிப்பையும் பெறும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தது.

2006 அவர் மேல்நிலைக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்காக பல முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். 184 கல்லூரிகள் இவருடைய காலகட்டத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.2008ல் அரசு திட்டக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 முதல் கர்நாடகா சட்டமன்றத்தின் அவைத் தலைவராக இருந்து வருகிறார். பாஜக இவரை கர்நாடக மாநிலத்தின் கவர்னராக நியமிக்க முன்பே திட்டமிருந்தது. தற்போது தமிழகத்தின் ஆளுநராக இவர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்து வருகிறது.

தென்னிந்திய மாநிலங்களில் கவர்னராக பணியாற்ற விரும்புகிறேன் என சங்கரமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். தமிழகத்துக்கு இவர் கவர்னராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. ஆனால் அதுகுறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஆனால் அதே சமயம் இவர் நியமிக்கப்பட்டால் எதிர்ப்புகள் எழலாம் என்று மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு குறிப்பு அனுப்பி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள முரண்பாடுகள்தான். அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் தமிழகக் கட்சிகள் மத்தியிலிருந்தும், மக்கள் தரப்பிலும் பெரும் எதிர்ப்புகள் எழலாம் என்பதால் தற்போது தமிழகத்தின் ஆக்டிங் ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவை தமிழகத்தின் ஆளூநராக நியமிக்கவும், சங்கரமூர்த்தியை மகாராஷ்ட்ர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.

- ஜெ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்