வர்தா புயல் பாதிப்புகள்: இந்த கோடையை நம்மால் சமாளிக்க முடியுமா?

வர்தா


வர்தா புயலின் பாதிப்புகளில் இருந்து மெல்ல மெல்ல சென்னை மீண்டு வருகிறது. இன்னமும் சாலைகளின் இருபுறமும் வீழ்ந்த மரங்களின் மிச்சங்கள் காண கிடைக்கின்றன. வர்தா புயலால் விழுந்த மரங்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியிருக்கும் என கணிக்கிறார்கள்.

பொதுவாக பொருளாதார அடிப்படையில் இயற்கை சீற்றங்களால் நிகழும் அழிவுகளை அளவிடுவார்கள். ஆனால், புயலால் ஏற்படும் பாதிப்புகள் அதையும் தாண்டியவை. புயல் அழிக்கும் மரங்களை எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஒரே நாளில் வளர்த்து விட முடியாது. அந்த வகையில் சென்ற ஆண்டு சென்னை சந்தித்த மழை வெள்ள பாதிப்புகளை விட வர்தாவின் பாதிப்பு மோசமானது.

இந்த புயலையும் சமாளித்து விழாமல் நின்ற மரங்களை கவனியுங்கள். அவை நாட்டு மரங்கள். அதன் ஆணி வேர் பலமானவை. இவை குறைவான நீரையே உறிஞ்சும். பலமாக நிற்கும். இந்த வகை மரங்களைதான் அதிகம் வளர்க்க வேண்டும்.

மரங்களால் மனிதர்கள் மட்டுமே பலனடைவதில்லை. அந்த மரத்தையே நம்பியிருந்த பல நுண்ணுயிர்களும், பறவைகளும் கூட இதனால் பாதிப்படைந்திருக்கின்றன.

வர்தா பாதிப்புகள் இதோடு முடியவில்லை. வீழ்ந்த மரங்கள் இதுவரை நமக்காக செய்து வந்த பணியினை செய்ய மாற்று நம்மிடம் இல்லை. இத்தனை மரங்களை இழந்திருக்கும் சென்னை, வரப்போகும் கோடைகாலத்தை சமாளிக்க நிச்சயம் திணறப் போகிறது.

நிழல் தர மரங்கள் அதையும் தாண்டி பல நல்ல விஷயங்களை செய்பவை. சுற்றுச்சூழலின் வெப்பத்தை நிர்ணயிப்பதில் மரங்களின் பங்கு முக்கியமானது. மரங்களற்ற, திறந்த வெளிகள் அதிக வெப்பநிலையை கடக்கும் என்பதுதான் உண்மை. மைதானங்கள் தரும் வெப்பத்தை உணர்ந்தாலே இது புரியும். இரவு நேரங்களில் சில ஏரியாக்களை கடக்கும்போது சில்லென முகத்தில் அடிக்கும் காற்று, அங்கு இருக்கும் நிறைய மரங்களின் விசிட்டிங் கார்டு தான். அந்த மரங்கள் இல்லாததால் சென்னையின் பெரும்பாலான ஏரியாக்களில் அடுத்த சம்மர் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக இருக்கலாம் என்கிறார் சூழலிலாளர்கள். 

சென்னை போன்ற மாநகரங்கள் கான்க்ரீட் காடுகள் தான். நெருக்கமான கட்டடங்கள் இன்னும் நிலைமையை மோசமாக்கும்.சூரிய வெப்பத்தை ரிஃப்ளெக்ட் செய்வது கான்க்ரீட் கட்டிடங்கள் முதலிடத்தில் இருக்கின்றன. இவை 60% வெப்பத்தை பிரதிபலிக்கும். தார்ச்சாலைகள் 45 சதவிகிதம். மரங்கள் வெறும் 10% மட்டுமே வெப்பத்தை பிரதிபலிக்கும். இந்த மரங்கள் இல்லாததால் அந்த சூரிய வெப்பத்தை நாம் நேரிடையாக தாங்கியாக வேண்டும். 

இதற்கு முன் பெரிய புயல்களை சென்னை சந்தித்த போதெல்லாம், அதை தொடர்ந்து வந்த கோடை அதிக வெப்பமாகவே இருந்திருக்கிறது. இந்த ஆண்டும் மோசமாகவே இருக்கும். இதை சமாளிக்க வழக்கத்தை விட அதிகமான ஏ.சியை மக்கள் பயன்படுத்துவார்கள். அது இன்னும் சிக்கலைதான் ஏற்படுத்தும்.

இதற்கு உடனடி தீர்வாக ஒன்று மட்டுமே இருக்க முடியும்.அது, மரங்கள் இருந்த இடத்தில் செடிகளை, புதர்களை வளர்ப்பதுதான். இதை அரசே செய்ய நினைத்தாலும் ஓர் ஆண்டுக்கு மேல் ஆகும்,. விழுந்த மரங்களை ஆங்காங்கே தன்னார்வத்துடன், அந்தந்த ஏரியா மக்களே சரி செய்ததை போல, செடிகளை வளர்ப்பதையும் செய்வது நல்ல பலனை தரும். அந்த புதிய பசுமையின் பலனை அனுபவிக்க போவதும் அவர்கள்தான்.

- கார்க்கிபவா

படம்: அசோக் குமார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!