சசிகலா பொதுக்குழுவுக்கு வந்தால்... அதிருப்தி கோஷ்டியின் ஆபரேஷன் பிளாக்!

வரும் 29-ம் தேதி சசிகலா பொதுக்குழுவுக்கு வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கறுப்புச் சட்டை, கறுப்புக் கொடியை காட்டப் போவதாக உளவுத்துறை, கார்டனுக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நேரத்தில் உளவுத்துறை கார்டனுக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் கார்டன் வட்டாரத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
 
 "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும் என்று மூத்த அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அவரைச் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான ஆதரவு கடிதத்தையும் கார்டனில் சசிகலாவிடமே பலர் கொடுத்தனர். இதனால் விரைவில் அ.தி.மு.க.வின் அதிகார மையம் சசிகலாவின் கைக்கு வரும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் சசிகலாவின் தலைமையை விரும்பாதவர்களும் அ.தி.மு.க.வில் இருப்பது அவருக்கு எதிராக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மூலம் தெரியவந்தது. இன்னும் சிலர், ஜெயலலிதாவின் மருமகள் தீபாவை அ.தி.மு.க.வின் தலைமை ஏற்க வரும்படி போஸ்டர் மூலம் பகிரங்க அழைப்பு விடுத்தனர்.

இந்த தகவல்கள் எல்லாம் போயஸ் கார்டனுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டது. எங்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும், யாரை அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வரும் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளர் என்ற முறையில் சசிகலாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டத்தில் கலந்து கொள்ள சசிகலா வந்தால் அவரது தலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நிச்சயம் தங்களது எதிர்ப்புகளை தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கலாம் என்று கார்டன் வட்டாரங்கள் ஆலோசித்து வருகிறது" என்றனர் உள்விவர வட்டாரங்கள். 

 இதுகுறித்த பெயரைக் குறிப்பிட விரும்பாத  சசிகலாவை எதிர்க்கும் அ.தி.மு.க நிர்வாகிகள் கூறுகையில், "சசிகலாவின் தலைமையை எப்போதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மற்ற கட்சிகளைப் போல அதற்கு வெளிப்படையாக எங்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. எங்கள் தரப்பிலும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். எங்களுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு செல்லும் நாங்கள் நிச்சயம் எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம். இதற்காக கறுப்பு நிற சட்டையை உள்ளே அணிந்து அது வெளியில் தெரியாமலிருக்க அதன் மேல் கை பனியனை அணிந்து அதற்கு மேல் வெள்ளை சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளோம். சசிகலாவை தலைமை ஏற்க பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் போது அங்கேயே எங்களது எதிர்ப்பை  தெரிவிப்போம்" என்றனர். 

திருவள்ளூர், காஞ்சிபுரம், கொங்கு மண்டலம், தென்மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் எதிர்ப்பாளர்களை பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

நமது நிருபர்  
  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!