‘ராமமோகன ராவ் ஊழல் பற்றி சசிகலாவுக்குத் தெரியாதா?' - கொதிக்கும் சீமான் | Doesn't sasikala know about Rama mohana rao's corruption-asks seeman

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (26/12/2016)

கடைசி தொடர்பு:12:50 (27/12/2016)

‘ராமமோகன ராவ் ஊழல் பற்றி சசிகலாவுக்குத் தெரியாதா?' - கொதிக்கும் சீமான்

ருமான வரித்துறையின் வளையத்தில் இருக்கிறார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். 'ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடுதான் இத்தனை ஆயிரம் கோடிகளை சேர்த்திருக்கிறார். இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டால், அவருடைய ஆதரவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். 'எப்போது வேண்டுமானாலும் ஐ.ஏ.எஸ்கள் வீட்டில் ரெய்டு நடக்கலாம்' என்பதால், கோட்டைக்குள் பதற்றத்துடன் கால் வைக்கிறார்கள். அதே அளவுக்கு சீனியர் அமைச்சர்கள் மத்தியிலும் கலக்கம் தென்படுகிறது. சேகர் ரெட்டியின் தொடர்பில் ஆடிய அமைச்சர்களின் வீடுகளையும் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறது வருமான வரித்துறை. "தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் ரெய்டு நடந்திருக்கிறது.

அவருடைய சொத்து மதிப்பே 70 ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். அவருடைய வீட்டில் இருந்து கணக்கில் வராத தங்கமும் பல கோடி ரூபாய் பணமும் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதற்கு முன்னதாக, சேகர் ரெட்டி வீட்டில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதைப் பார்த்தோம். கரூர் அன்புநாதன், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் என ஒவ்வொருவர் வீட்டிலும் பணப் பதுக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராம மோகன ராவ் வீட்டில் இவ்வளவு பணம் கைப்பற்றப்படுகிறது என்றால், அவர் ஒரேநாளில் பணத்தை சேர்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் மீது சொத்து சேர்ப்பது, லஞ்ச ஊழலில் ஈடுபட்டது போன்றவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தைக் கொள்ளையடிக்க, அவருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது யார்?" எனக் கொந்தளிப்போடு பேசத் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தொடர்ந்து நம்மிடம், 

"கடந்த பத்து ஆண்டுகளில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் 70 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது. இந்த பத்தாண்டுகளில் யார் ஆட்சியில் இருந்தார்கள்? இந்திய நாட்டின் பட்ஜெட்கூட இந்தளவுக்கு இல்லை. ராமமோகன ராவ் வீட்டில் சேர்க்கப்பட்ட பணம் பற்றி அப்போது நிர்வாகத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கும் கார்டன் நிர்வாகத்தைக் கவனித்து வந்த சசிகலாவுக்கும் தெரியாதா? அவர்களுக்குத் தெரியாமலேயே இவ்வளவு கோடிகளை அவர் சேர்த்துவிட்டார் என்றால், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அப்படியானால் தெரிந்தேதான் ஊழலை அனுமதித்தீர்களா? இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது? முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அருகிலேயே சேகர் ரெட்டி நின்று கொண்டிருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு உங்களுக்கும் என்ன தொடர்பு? உங்கள் இருவருக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது? வயிற்றுப் பிழைப்புக்காக மரம் வெட்டப் போனவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு ஒரு வருத்தம்கூட ஆந்திர அரசு தெரிவிக்கவில்லை.

எங்கள் மண்ணின் சிலைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்கு விற்ற தீனதயாளனை தொழிலதிபர் என்கிறார்கள். எங்களைத் திருடன் என்கிறார்கள். ராவும் ரெட்டியும் இத்தனை ஆயிரம் கோடிகளைக் கொள்ளையடித்ததை என்ன பெயர் சொல்லி அழைப்பது? இவர்களுக்கு வெறும் அபராதம் மட்டும் விதித்துவிட்டுச் செல்வதை ஏற்க முடியாது. இவர்களை சிறைப்படுத்தி, தண்டனை விதிக்கப்பட வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தும் சோதனைகளில், இத்தனை ஆண்டுகளில் எத்தனை பேர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வெறும் அபராதம் என்றால், கொள்ளை அடிப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும்.  

100 விழுக்காடு பணம் எடுத்தால், பத்து விழுக்காடு பணத்தை அபராதமாக விதிக்கின்றனர். இனியும் இதுபோன்று அபராதம் விதிக்கக் கூடாது. ராமமோகன ராவுக்கும் சேகர் ரெட்டிக்கும் என்ன தண்டனை தரப் போகிறார்கள்? பதவி நீக்கமும் பணப் பறிப்பும் மட்டும்தானா? குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லையா? அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் ராம மோகன ராவுக்கும் தொடர்பு இருந்ததா இல்லையா? அப்படியானால், வருமான வரித்துறையின் விசாரணைக்குள் சசிகலாவையும் கொண்டு வர வேண்டும். சேகர் ரெட்டியுடன் ஓ.பன்னீர்செல்வம் நெருக்கமாக இருக்கிறார். இதைப் பற்றிப் பதிலே சொல்லாமல் அவர் மௌனமாக இருக்கிறார்.

இந்திய அரசியல் வரலாற்றில் காமராஜர், ராஜாஜி போன்றவர்கள் ஆண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்திருக்கிறதா? ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட காமராஜரின் சட்டைப் பையில் 119 ரூபாய் இருந்தது என்கிறார்கள். பொதுப் பணித்துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த கக்கன், அரசு மருத்துவமனையில் பாயில் படுத்திருந்து இறந்து போனார். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

இங்கே ஒவ்வொரு அமைச்சரிடம் பல ஆயிரம் கோடிகள் பதுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி இருந்தால் மக்களுக்கு எப்படி நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்? இங்கே மக்கள் நலன் சார்ந்த அதிகாரமாக எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. இவர்கள் வீட்டில் புதிய ரூபாய்த் தாள்கள் எப்படி வந்தன? வங்கியில் இருந்தே நேரடியாக பணம் வருகிறது என்றால், எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது என்று பாருங்கள்.

இந்த அரசாங்கத்தில் நேர்மையாக உழைப்பவர்கள் பைத்தியக்காரர்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் வசதிக்குத்தான் அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். தலைமைச் செயலாளர் பதவிக்கு சகாயம் வந்திருந்தால், பதுக்கல்காரர்களை ஒழித்திருப்பார். இவர்களுடைய கொள்ளைக்கு அவர் ஒத்துவர மாட்டார் என்பதற்காகத்தான் தொடர்ந்து பழிவாங்குகிறார்கள். அரசுத்துறையிலேயே ஒதுக்கப்பட்ட துறைக்கு, அவரை மாற்றுகிறார்கள். இப்படி இருப்பதால்தான் சேகர் ரெட்டிகளும் ராமமோகன ராவ்களும் உருவாகிறார்கள்" என குமுறலோடு பேசி முடித்தார். 

- ஆ.விஜயானந்த்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்