'முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்கும் ஏ.பன்னீர்செல்வம்'?

                  பன்னீர்செல்வம்

மிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்கவும் அரசு டெண்டர்கள் உள்ளிட்ட நிர்வாக விஷயங்களை இறுதி செய்யவும் சசிகலாவின் ஏற்பாட்டின்படி முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஏ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்க இன்னொரு பன்னீர்செல்வமா என்று பரபரப்பாகப் பேசத் தொடங்கியுள்ளனர் கோட்டை வட்டாரத்தில்.     

இவர், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பி.ஆர்.ஓ.வாக பணியைத் தொடங்கி ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பதவி பெற்று ஓய்வுப் பெற்றார்.நடராஜனுக்கு மிக நெருக்கமானவர்.அதனால் சசிகலாவின் பரிந்துரையின்பேரில் கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில் சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டார்.

அப்போது,தலைமைச் செயலக வட்டாரத்தில் அதிகார மையமாக விளங்கினார்.அரசில்,அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்வது என்று எல்லா விதத்திலும் அதிகமாகத் தலையிடுகிறார் என்று பன்னீர்செல்வத்தின் மீது கடுமையான குற்றச் சாட்டு எழுந்தது.அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கும் சென்றது.கோபத்தின் உச்சிக்கே சென்ற ஜெயலலிதா நேரில் அழைத்துக் கடுமையாக எச்சரித்து, சிறப்பு அலுவலர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார்.அதனால் ஏ.பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்துவந்தார்.இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போனதால் மீண்டும் ஏ.பன்னீர்செல்வத்தின் நடமாட்டம் போயஸ் கார்டனிலும்,அவ்வப்போது கோட்டை வட்டாரத்திலும் வலுவாக இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின்  மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"எங்க சி.எம். இருக்கும்வரையில் அவரின் கண்ணில் படாமல் இருந்துவந்த ஏ.பன்னீர்செல்வம் இப்போது மீண்டும் ஆட ஆரம்பித்துள்ளார்.அரசின் நிர்வாக விஷயங்களில் ஓவராக நுழைகிறார் என்பதால்தான் அம்மா அவரை விரட்டியடித்தார்.அதை இப்போது யார் செய்ய முடியும்.எல்லாமே எம்.என்.,டி.டி.வி. முடிவுபடிதான் நடக்கிறது.அதைச் உத்தரவாக்கிச் செயல்படுத்தும் இடத்தில் சசிகலா இருக்கிறார்.இப்போது ராம மோகன ராவும் ரெய்டில் சிக்கி இருக்கிறார்.அதனால் டெண்டர் உள்ளிட்ட அரசு விஷயங்களில் சிறப்பு ஆலோசகருக்கு உதவியாக ஏ.பன்னீர்செல்வம் அமர்த்தப்பட்டுள்ளார்.ஓ.எஸ்.டி. என்ற பதவி அவருக்கு அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் முதல்வருக்கு நெருக்கமாக இருக்கமுடியும்.அவருக்கு சசிகலாவின் கருத்துக்களை மிக எளிதாகக் கொண்டு செல்லமுடியும்.தான் அருகில் இல்லாவிட்டாலும் தனது நம்பிக்கைக்குரிய நபர் முதல்வரின் நிழலாக அவரைப் பின் தொடரவேண்டும் என்பதால் சசிகலா இந்த 'மூவ்' வைத்துள்ளார்.இவர் கார்டனில் இருந்துகொண்டே எல்லா விஷயங்களையும் கமுக்கமாக மேற்கொள்வதில் நிபுணர்.இவரின் வீட்டிலிலும் அமைச்சர்கள்,தொழிலதிபர்கள் முகாமிடத் தொடங்குவார்கள்.ஒரு புதிய அதிகார மையமாக வலம் வருவார்." என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!