வாக்காளர்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் கொடுத்தது இவரது பணம் தான்! ராமதாஸ் பகீர் தகவல்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களுக்கு சேகர் ரெட்டி வழங்கிய பணத்தை வாரி இறைத்தனர் என்றும், இதற்காக அதிமுக வேட்பாளர்கள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழக ஆட்சியின் அடித்தளத்தையே தகர்க்கும் அளவுக்கு வலுவான பல ஆதாரங்களை சேகர் ரெட்டி வீட்டிலிருந்து வருமானவரித்துறை கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 234 வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவிர மற்ற அனைவருக்கும் தேர்தல் செலவுகளுக்காக சேகர் ரெட்டி பெரும் தொகை கொடுத்ததாக முன்பே குற்றச்சாட்டுகள் எழுந்தன. மொத்தம் 197 வேட்பாளர்களுக்கு தலா ரூ.4 கோடி வீதம் சேகர் ரெட்டி கொடுத்ததாகவும், இதற்கான ஒப்புகை ஆவணத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கையெழுத்து வாங்கி கோப்பாக தயாரித்து வைத்திருந்ததாகவும், அவற்றை வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றிருப்பதாகவும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இச்செய்தியின் உண்மைத் தன்மையை வருமானவரித்துறையோ, சேகர் ரெட்டியோ தான் உறுதி செய்ய முடியும் என்றாலும், சந்தர்ப்ப சூழலின்படி பார்த்தால் இந்த செய்தியை பொய் என்று ஒதுக்கிவிட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சேகர் ரெட்டி மிகவும் நெருக்கமானவர். சேகர்ரெட்டிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசின் பரிந்துரைப்படி தான் ஆந்திர அரசு வழங்கியது. தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் பலருடன்  தொழில் பங்குதாரராக சேகர் ரெட்டி இருந்திருக்கிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், இப்போதும் நினைத்த நேரத்தில் போயஸ்தோட்டத்துக்குச் சென்று வரும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக சேகர் ரெட்டி திகழ்ந்துள்ளார். இப்போது கூட சேகர் ரெட்டியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் பெரும் பகுதி மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானது தான் என்று கூறப்படுகிறது. ஆட்சி மேலிடத்துக்கு இவ்வளவு நெருக்கமாக சேகர் ரெட்டி இருக்கும் நிலையில், அவர் 197 வேட்பாளர்களுக்கு தலா ரூ.4 கோடி வீதம் மொத்தம் ரூ.788 கோடி கொடுத்ததாக கூறப்படுவதை  புறந்தள்ளிவிட முடியாது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை மட்டுமே செலவிட முடியும் என்று தேர்தல் ஆணைய விதிகளில் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருகிறது. ஆனால், சேகர் ரெட்டியிடமிருந்து அதிமுக வேட்பாளர்களுக்கு தலா ரூ.4 கோடி வழங்கப்பட்டிருந்தால், அதற்கு இணையான தொகையை வேட்பாளர்கள் அவர்களின் சொந்தப் பணத்திலிருந்து செலவழித்து இருக்கக் கூடும். அப்படியானால், அதிமுக வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ரூ.8 கோடி செலவழித்து தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இது அனுமதிக்கப்பட்ட தொகையை விட 28.57 மடங்கு அதிகம். அவர்களின் வெற்றி செல்லாது என அறிவிக்க இது ஒன்றே போதுமானதாகும்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தனர். அதிமுக வேட்பாளர்களுக்கு சேகர் ரெட்டி தான் பணம் தந்திருக்கிறார். இவ்வாறு பணத்தை வாங்கியதும், வாங்கிய பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்ததும் தேர்தல் ஊழல் நடைமுறையாகும். இதற்காக அதிமுக வேட்பாளர்கள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்களை தகுதி நீக்கமும் செய்ய முடியும். இவை செய்யப்பட்டால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கும், அதன் தொடர்ச்சியாக அதிமுக அரசு பதவியிழக்கவும் வாய்ப்புகள் உள்ளன. 197 அதிமுக வேட்பாளர்களுக்கு சேகர் ரெட்டி பணம் கொடுத்ததாக இணைய  ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மையானவையா? என்பதைப் பொறுத்தே  அனைத்தும் அமையும்.

எனவே, சேகர் ரெட்டியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் பணம் கொடுத்து அதற்கான ஒப்புகை பெற்ற ஆவணங்கள் அடங்கிய கோப்பு கைப்பற்றப்பட்டதா என்பதை வருமானவரித்துறை விளக்க வேண்டும். இந்த சோதனைகள் வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தால், எடிட் செய்யப்படாத அதன் மூலப் பதிவை வெளியிட வேண்டும். அதிமுக வேட்பாளர்களுக்கு சேகர் ரெட்டி பணம் கொடுத்தது உண்மை எனத் தெரியவந்தால், அந்த பணத்தைக் கொண்டு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவும், வாக்காளர்களுக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்தும் வெற்றி பெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றி செல்லாதென அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!