'பொதுச்செயலாளராக யார் வரவேண்டும்' தங்கதமிழ் செல்வன் பேட்டி


முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக வின் முக்கிய நிர்வாகிகளால் ஒரு மனதாக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், அக்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், தமிழக அரசியலில் தினம் ஒரு நிகழ்வு அரங்கேறிக்கொண்டு வருகிறது. அதிலும், சசிகலாவை `சின்ன அம்மா'` என்று அதிமுக அமைச்சர்களும் தொண்டர்களும் பேனர் வைத்து திடீர் திருப்பங்களை தந்து தமிழகத்தை பிரமிக்க வைத்து வருகின்றனர். இதனால், யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக-வின் செயல்பாடு இருந்து வருகிறது. இதில் இன்னொரு பக்கம் மத்திய அரசின் சில அதிரடி நடவடிக்கைகளும் தமிழ்நாட்டு மக்களை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார் என்கிற கேள்வி வலுவாக எழுந்தபோது, அதற்கான பதிலை பொதுக்குழுவில் அறிவிக்க இருப்பதாக முடிவாக சொல்லப்படுகிறது.  

இந்நிலையில், நாளை சென்னையில் நடக்கும் பொதுக்குழுவில் என்ன நடக்கும் என்று தமிழகமே ஆவலாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் கோட்டையாகவும் தற்போதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊராகவும் உள்ள தேனியில்; அம்மாவட்ட கழக செயலாளரும், ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும் மான தங்கதமிழ் செல்வன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சென்னையில் நாளை நடைபெறும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக சென்னை விரைந்துள்ளனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ் செல்வன், ``கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், இதய தெய்வம் அம்மாவின் மறைவிற்குப் பிறகு, நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு தேனி மாவட்டத்தின் சார்பாக நாங்கள் செல்கின்றோம். இந்த பொதுக்குழு வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு. புரட்சித் தலைவி அவர்களின் நிழலாக, உற்ற தோழியாக, 35 ஆண்டுகள் தாயாக விளங்கிய சின்னம்மா, கழகத்தின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பது என்னுடைய நோக்கம். இந்த இயக்கத்தை வழி நடத்துவது மட்டுமல்லாமல், அம்மாவின் உண்மை தோழி சின்னம்மா தான் தலைமை ஏற்று முதலமைச்சராக வர வேண்டும். அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். சின்னம்மா தான், கழகத்தின் பொதுச்செயலாளராக வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் தமிழகத்தில் ராணுவக் கட்டுக்கோப்போடு இந்த இயக்கம் நடைபெறும். இதனால், நிச்சயமாக ஓ.பி.எஸ், சின்னமாவிற்கு வழிவிடுவார். சின்னம்மா பதவி ஏற்பார்கள்" என்று கூறினார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கடந்த சில வாரங்களாக வெறிச்சோடி இருந்த ஆண்டிபட்டி தொகுதி, தற்போது கண்ணிற்கு எட்டின தூரமெல்லாம் சசிகலா கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு மீண்டும் கலைகட்டி உள்ளது.

உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)
படம்: வீ.சக்தி அருணகிரி

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!