வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (29/12/2016)

கடைசி தொடர்பு:18:30 (29/12/2016)

கோடியை குவித்த ரெப்கோ இயக்குநர்கள்! சி.பி.ஐ.யிடம் சிக்கிய பின்னணி

ரெப்கோ வங்கியின் துணை அமைப்பான ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன நிர்வாக இயக்குநர், செயல் இயக்குநர்கள், தலைமை பொது மேலாளர் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆரும் பதிவு செய்துள்ளது. 

 பர்மா, இலங்கை தாயகம் திரும்பிய அகதிகளுக்கான தமிழக பொதுத்துறை மற்றும் மத்திய உள்துறை கீழ் உள்ள ரெப்கோ (Repatriates Cooperative) வங்கியின் துணை அமைப்பு  "ரெப்கோ வீட்டுவசதி கடன் நிறுவனம்".  இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் வரதராஜன். அந்த நிறுவனத்தில் செயல் இயக்குநர்களாக பி.நடராஜன், ரகு மற்றும் தலைமை பொது மேலாளர் அசோக் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு விதிமுறைகளை மீறி எம்ப்ளாயீஸ் ஸ்டாக் ஆப்சன் திட்டம் (ESOP) மூலம் குறைந்த விலைக்கு பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் சி.பி.ஐ  இவர்களது வீடுகளில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் வரதராஜன், ரகு, நடராஜன், அசோக் ஆகியோர் மீது சி.பி.ஐ , எப்.ஐ.ஆரும் பதிவு செய்துள்ளது. அதில், வரதராஜனுக்கு 30 ஆயிரம் பங்குகளும், நடராஜனுக்கும் ரகுவுக்கும் 17 ஆயிரம் பங்குகளும், அசோக்கிற்கு 15 ஆயிரம் பங்குகளும் 2013 ஆண்டு  திட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 75 ரூபாயாகும். மார்க்கெட்டில் இந்த பங்குவின் அன்றைய விலை 177.85 ரூபாய்.  அந்த வகையில் 2014-15ம் ஆண்டில் ரூ.3,26,25,420 மற்றும் 2015-16ம் ஆண்டில் ரூ.3,54,47,260 ஆகமொத்தம் ரூ.6.80 கோடி வருமானம் கிடைத்துள்ளது.  விதிமுறைகளை மீறி பங்குகள் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சி.பி.ஐ வட்டாரங்கள் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனையை நடத்தினோம். நாங்கள் சோதனைக்கு செல்லும் முன் அவர்கள் பயன்படுத்திய கார்களில் இருந்த அரசு வாகனம் என்பதை குறிக்கும் 'ஜி' என்ற ஆங்கில எழுத்தை அழித்து விட்டனர். மேலும் அவர்களது வீடுகளில்  பங்குகளை கூடுதல் விலைக்கு விற்றதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. அது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றனர்.

ரெப்கோ வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே அரசு துறைகளில் பணியாற்றி விட்டு அதற்குரிய ஓய்வூதியங்களை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு சம்பளம் போக பங்குகளும் குறைந்த விலைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. அந்த பங்குகளை விற்றதில் அதிக லாபம் கிடைத்துள்ளது.இதை எதிர்த்த சில உயரதிகாரிகள் மேல் நடவடிக்கையும், சாதகமாக இருந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. எனவேதான் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது சிபிஐ" என்றனர்.


எஸ்.மகேஷ் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்