வெளியிடப்பட்ட நேரம்: 11:54 (29/12/2016)

கடைசி தொடர்பு:12:08 (29/12/2016)

ஜெ. மரணத்தில் சந்தேகம் உள்ளது! உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தால் பரபரப்பு

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு மரணம் அடைந்தார். 75 நாள் சிகிச்சைக்குப் பின் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அதிமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது உடல் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட அமர்வு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அதிமுக பிரமுகர் ஜோசப் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் ஏன் முழுமையாக வெளியிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி வைத்தியநாதன், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- ஜோ.ஸ்டாலின்

நீங்க எப்படி பீல் பண்றீங்க