“அ.தி.மு.க-வுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்!” - பொதுக்குழு தீர்மானங்கள்

மிழக முதல்வராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று நடைபெற்றது.

ஜெ. மறைவுக்குப் பின்னர், யாரைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமான சூழ்நிலையில், அவரது நீண்டகால தோழியான வி.கே.சசிகலாவை கட்சித் தலைமைப் பொறுப்பேற்குமாறு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், முதல்வர் ஒ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் போயஸ் கார்டன் சென்று தொடர்ந்து வலியுறுத்தினர். 

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

கழக அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருடைய உருவப்படம், மேடையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ஜெ. படத்துக்குக் கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், கட்சியின் பொருளாளரும், முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

சசிகலா

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுக்குழு கூடியது. மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், பரிதி இளம்வழுதி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட மகளிர் அணியினர் உட்பட கழகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

பொதுக்குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக, முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் வாசித்தார். இதனைத் தொடர்ந்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 14-வது தீர்மானமான, அ.தி.மு.க-வுக்கு வி.கே.சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகப் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் வழிகாட்டுதலை நினைவில்கொண்டு, சசிகலா தலைமையின் கீழ், விசுவாசத்துடன் பணியாற்றப் பொதுக்குழு உறுதியேற்பதாக அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பது; அ.தி.மு.க-வை வழிநடத்த பொதுச் செயலாளர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குவது; ஜெயலலிதாவின் பிறந்த நாளை ‘தேசிய விவசாயிகள் தினமாக’ அறிவிக்க வலியுறுத்துவது; நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா திருவுருவச் சிலையை நிறுவுவது; அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பது மற்றும் ஜெயலலிதாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவது; பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மக்சைசாய் விருது வழங்குவது; ஜெயலலிதா நினைவு நாளில் கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்று கழகத்தை வழிநடத்துவது, கழகத் தொண்டர்கள் சசிகலா தலைமையில் ஒற்றுமையுடன் பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்துக்கு உடனுக்குடன் அனைத்து உதவிகளையும் செய்த மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், ஜெயலலிதாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிற மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அ.தி.முக. பொதுக்குழுவில் நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

- ஜெ.பிரகாஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!