'புதிய முதலமைச்சர் தேர்வாகிறாரா?' -எம்.எல்.ஏக்கள் அழைப்பின் பின்னணி 

.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வருமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'நாளை பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் சசிகலா. தொகுதிகளில் எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகள் என்ன என்பது குறித்து, ஓ.பி.எஸ் தலைமையில் இன்று விவாதிக்க உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். நேற்று இரவு மீண்டும் தலைமைக் கழகத்தில் இருந்து அவசர அழைப்பு. ' நாளை காலை சென்னை வாருங்கள்' என்று. இதனால், எம்.எல்.ஏக்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "பொதுக்குழு உறுப்பினர்களால், ஏக மனதாக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இன்று மாலை ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மாலை போட இருக்கிறார். அதன்பிறகு, நாளை காலை பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என விளக்கிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "கட்சிக்குத் தலைமை தாங்க சீனியர்கள் அழைப்பது போலவும், அதன்பிறகு பொறுப்பை சசிகலா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போலவும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்கேற்ப, நிர்வாகிகள் மட்டும் கூடி பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தினர். 'கட்சிக்கு ஏற்பட்டுள்ள சூழலை தீய சக்திகள் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதாக'வும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் அதிகாரம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, ஆட்சி அதிகாரத்துக்குள் சசிகலாவைக் கொண்டு வரும் முயற்சி நடந்து வருகின்றன. 

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜகண்ணப்பன், முனுசாமி என எதிர்ப்பாளர்கள் பட்டியலில் இருந்தவர்கள் எல்லாம், சசிகலா தலைமையை ஏற்றுக் கொண்டுவிட்டனர். பொதுக்குழுவிலும் செங்கோட்டையனை முன்னிறுத்தினார் சசிகலா. எதிர்ப்பாளர்களை ஆதரவாளர்களாக மாற்றுவது முதல் கட்டம். இரண்டாவதாக அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெறும்விதமாக, பொதுக்குழுவில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார் சசிகலா. நிர்வாகிகளும் தீர்மான நகலை அவரிடம் கொடுத்து, தலைமை தாங்க அழைத்தனர். அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்து முடிந்தன. கடந்த சில நாட்களாக கார்டனில் நடக்கும் விவாதம் என்னவென்றால், சசிகலாவை உடனடியாக முதல்வர் ஆக்க வேண்டும் என்பதுதான். அதற்கேற்ப, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசுவதற்கு சீனியர்கள் சிலர் சென்றனர்.

அவர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ' இந்தப் பதவி அவர்கள் கொடுத்தது. அவர்களுக்கு எதிராக எந்த சூழ்நிலையிலும் செயல்பட மாட்டேன்' எனத் தெரிவித்தார். இதுவரையில் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர்களே, முதல்வராகவும் இருந்து வந்துள்ளனர். ' அந்த வரிசையில் சசிகலா முதல்வர் பதவியேற்க வேண்டும்' என அமைச்சர்களே வலியுறுத்தி வந்தனர். ' ஓ.பி.எஸ் மீது நம்பிக்கை இல்லையா?' என அரசியல் மட்டத்தில் கேள்வி எழுந்தாலும், கார்டன் வட்டாரத்தில் உள்ளவர்கள் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதைக் கணிப்பதற்காகவே அமைச்சர்கள் பேச வைக்கப்பட்டனர். கார்டன் வட்டாரத்தின் எதிர்பார்ப்பைப் போலவே, எந்தவித சிக்கலும் இல்லாமல் கட்சிப் பதவி சசிகலா வசம் வந்துவிட்டது. அடுத்து, முதல்வர் பதவியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்" என்றார். 

"அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் சீரியஸாக இருந்த கடைசி காலகட்டத்தில், எம்.எல்.ஏக்களுக்கு அவசர அழைப்பு அனுப்பப்பட்டது. மருத்துவமனைக்கு வந்தவர்களிடம் ஏழு கையெழுத்துகள் வாங்கப்பட்டன. அதில், ஒரு கையெழுத்தைத்தான் கட்சிப் பதவிக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்னும் ஆறு கையெழுத்துக்கள் இருக்கின்றன. அதை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பயன்படுத்தலாம். தற்போது சசிகலா மனதுக்குள் இரண்டு விதமான எண்ணங்கள் ஓடுகின்றன. 'எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் ஓ.பி.எஸ்ஸை முதல்வராகத் தொடர வைக்கலாமா அல்லது உடனே முதல்வர் ஆகலாமா' என்பதுதான். 'இப்படியொரு வாய்ப்பு இனி கிடைக்கப் போவதில்லை. அடுத்து வரக் கூடிய தேர்தல்கள் எப்படி இருக்கப் போகின்றன என்பதையும் கணிக்க முடியாது. எனவே, உடனடியாக முதல்வர் பதவியை ஏற்பதே சிறந்தது' என உறவுகள் வெகு சீரியஸாக பேசி வருகின்றனர். இன்று நடக்கும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அந்தந்த மாவட்டத்தில் எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகள் என்ன? மக்களுக்கு என்ன தேவை என்பது குறித்து ஓ.பி.எஸ் தலைமையில் கூட்டம் நடக்கிறது. நிர்வாகத்தை சிறப்பாகக் கொண்டு செல்லும்விதமாக சில முடிவுகளை எடுத்துவிட்டு, அதிகாரத்தில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று நடக்கும் கூட்டத்தில் கார்டன் வட்டாரத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தெரிந்துவிடும்" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

- ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!