"சசிகலா முதல்வர் பதவி ஏற்கவிருக்கிறாரா?’’ பொன்னையன் பதில்!

சசிகலா

.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்குமாறு வலியுறுத்தி, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சசிகலாவிடம் நேரில் வழங்கப்பட்டது. பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சென்னையில் இருக்குமாறு கார்டன்தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதனால், பொதுக்குழுவை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த தென் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பாதி வழியிலேயே சென்னை திரும்பினர்.

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, இன்று எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, அவர், நாளை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக்கழகத்துக்கு முதல்முறையாக வந்து, அதிகாரபூர்வமாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். தலைமைக் கழகத்துக்கு வருகை தரும் சசிகலாவை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகளை, கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர். பொதுச்செயலாளருக்கான இருக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி அலுவலகத்தில் உள்ள குளிர்சாதனப் பெட்டி சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. 

ஜனவரி 2-ல் முதல்வராகப் பதவியேற்பு?

சசிகலாஇந்த சூழ்நிலையில், தலைமைக்கழகத்தில் நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சசிகலா புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்படுவார் என்றும், அதனைத் தொடர்ந்து, ஜனவரி 2-ம் தேதியோ அல்லது 12-ம் தேதியோ முதல்வராக அவர் பதவியேற்பார் என்றும் அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா 2-ம் தேதி பதவியேற்பார் என்று பரவலாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

அ.தி.மு.க மூத்த நிர்வாகியும், அமைப்புச் செயலாளருமான சி.பொன்னையன், "கழக பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து, அதற்கான தீர்மானத்தை சின்னம்மாவிடம் வழங்கி விட்டோம். அவரும், அதனை ஏற்றுக் கொண்டு விட்டார். கழக பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டாலே, பொதுச் செயலாளராக பதவியேற்றதாகத்தான் அர்த்தம். கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, நாளை வரவிருப்பது, வெறும் சம்பிரதாயம்தான்" என்று தெரிவித்தார். முதல்வராக சசிகலா எப்போது பதவியேற்பார் என்று கேட்டபோது, "அதுபற்றி பொதுக்குழுவில் ஏதும் பேசப்படவில்லை. இப்போதைக்கு கட்சித் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். வேறு எதுவும் பொதுக்குழுவில் நாங்கள் விவாதிக்கவில்லை" என்று பதிலளித்தார்.

இதேபோல் அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறுகையில், "சின்னம்மா முதல்வராகப் பதவியேற்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. கட்சித் தலைமையிடம் இருந்து, அதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலிடத்தில் இருந்து அதுபோன்று தகவல் வந்தால் மட்டுமே எதுவும் கூற முடியும்" என்று குறிப்பிட்டார்.

- சி.வெங்கட சேது


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!