வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (31/12/2016)

கடைசி தொடர்பு:14:26 (31/12/2016)

சசிகலாவுக்கு பேனர் வைத்த தி.மு.க. பிரமுகர்..! இது நெல்லை கலாட்டா

நெல்லை மாவட்டத்தில் சசிகலாவுக்கு பேனர் வைத்ததாக திமு.க பிரமுகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.திமு.கவினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அகற்றப்பட்ட பேனர் மன்னார்குடி தலையீட்டால் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க பொதுக்குழுவில் ஜெயலலிதாவின்தோழி சசிகலா, பொதுச் செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் சசிகலாவுக்கு துதிபாட ஆரம்பித்து விட்டனர் கட்சியினர். அவரை வரவேற்று, வாழ்த்தி, வணங்கி தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லை மாவட்ட தி.மு.கவின் அனுதாபி ஒருவர் சசிகலாவுக்கு பேனர் வைத்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க ஊராட்சி கழகச் செயலாளர் நாலாயிரம், நெல்லை மாவட்டம் பழவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பர்னபாஸ் பேனரை அகற்றியுள்ளார். அடுத்து சில மணி நேரத்தில் போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் போலீஸ் டீமே அகற்றப்பட்ட பேனரை மீண்டும் வைத்துள்ளது.

இது குறித்து நெல்லை மாவட்டம்,  வள்ளியூர்  ஒன்றியம் இருக்கன்துறை ஊராட்சி அ.தி.மு.க செயலாளர் நாலாயிரத்திடம் பேசினோம். ‘’கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி என்ற தலைப்பில் அ.தி.மு.க கண்டெடுத்த மூன்றாவது முத்து, கழகத்தின் சொத்து, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பதவியேற்றிருக்கும் எங்கள் சின்னம்மா பணி சிறக்க வாழ்த்துகிறோம் என்ற வாசகத்துடன் மன்னை மைந்தன் எஸ்.சிவா, சின்னம்மா பேரவை மாநில இணையதள ஒருங்கிணைப்பாளர் என்றும்  நெல்லை மாவட்ட சின்னம்மா பேரவை இணையதள ஒருங்கிணைப்பாளர் சாரல் கே.குற்றாலம் ஆகிய இருவரும் பேனர் வைத்துள்ளனர். இதில் குற்றாலம் என்பவர் அ.தி.மு.க உறுப்பினராக இல்லை. அவரது அப்பா குப்புசாமி, திமு.கவில் உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட திமு.கவுக்கு வேலை செய்தார். அவர் எப்படி சின்னம்மா பேரவை என்ற பெயரை பயன்படுத்த முடியும். நான், கட்சியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறேன். எம்.ஜிஆரின் தீவிர ரசிகன். தற்போது ஊராட்சிக் கழகச் செயலாளராக உள்ளேன். இதனால் தி.மு.க பிரமுகர் குற்றாலம் பேனர் வைத்தது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தேன். அதன்பேரில் பேனர் அகற்றப்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் தி.மு,கவினருடன் சேர்ந்து குற்றாலம் அதே பேரை வைத்துவிட்டார்’’ என்றார்.

குற்றலாத்திடம் பேசியபோது,’’ என்னுடைய அப்பா தி.மு.க வில் இருக்கிறார். நான் பார்வேர்டு பிளாக் கட்சியில் மாவட்டச் செயலாளராக இருந்தபோது சின்னம்மாவின் உறவினர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. சின்னம்மா பேரவை இணையதளம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மன்னை சிவா என்பவர் தொடங்கினார். அதில் இணைந்துள்ளேன். இதனால் சின்னம்மாவை வாழ்த்தி பேனர் வைத்தேன். நான் தி.மு.க.வில் உறுப்பினராக கூட இல்லை’’ என்றவரிடம் அப்படியென்றால் அ.தி.மு.கவில் உறுப்பினராக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு ’’இல்லை’’ என்று  பதில் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பர்னபாஸிடம் கேட்டதற்கு, ’’முதலில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்து விட்டனர். நாலாயிரம் என்பவர் புகார் கொடுத்ததின்பேரில் விசாரணை நடத்தி பேனரை அகற்றினோம். தற்போது  அனுமதி பெற்று பேனர் வைத்து உள்ளனர். இது தொடர்பாக என்னிடம் யாரும் சிபாரிசு செய்யவில்லை’’ என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ’’மன்னார்குடி தரப்பில் இருந்து முக்கியமான ஒருவர் காவல்துறை அதிகாரிகளிடம் பேனர் விஷயமாக பேசி உள்ளார். இதனால் அகற்றப்பட்ட பேனரை மீண்டும் வைத்துள்ளது போலீஸ் என்றனர்.

நமது நிருபர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்