'அரசியல் அநாகரிகத்தின் உச்சம் இது!' ஃபேஸ்புக் தாக்குதலைக் கண்டிக்கும் ஜோதிமணி | Jothimani condemns Sexual Harassment on Social Media and Phone

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (31/12/2016)

கடைசி தொடர்பு:20:15 (31/12/2016)

'அரசியல் அநாகரிகத்தின் உச்சம் இது!' ஃபேஸ்புக் தாக்குதலைக் கண்டிக்கும் ஜோதிமணி

 


"பி.ஜே.பி என்னைப்பற்றி செய்த பாலியல் ரீதியான அவதூறு கருத்துகளை டிவிட்டர் பக்கம் மூலமாக மோடிக்கும், தமிழிசைக்கும் இணைத்து அனுப்பினேன். இப்ப வரைக்கும் அவங்க அதுக்கு எந்த ரியாக்சனும் காட்டலை. பி.ஜே.பி.யிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்," என சமூக வலைதளங்களில் ஆபாசத்தாக்குதலுக்கு உள்ளான காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி தெரிவித்தார்.

அரசியல் என்றால் விமர்சனம் என்பது இருக்கும்தான். ஆனால் அதுவே சில சமயங்களில் அதிகமாகி ஆபாச அர்ச்சனைகளை அள்ளி தெளிக்கப்படுவதும் உண்டு. அந்த வகையில் இப்போது இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய முன்னாள் பொதுச் செயலாளர் ஜோதிமணி ஆபாச தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

பி.ஜே.பி தரப்பு போன் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் படுமோசமான ஆபாச தாக்குதல்கள் நடத்தி வருவதாக புகார் சொல்லியுள்ள ஜோதிமணி, ஆபாச தாக்குதல் பதிவுகளை வெளிப்படையாகவே வெளியிட்டுள்ளார். அவரைப்பற்றி பேஸ்புக்., வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் மிக கேவலமாக விவரித்து எழுதி இருப்பது, பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய ஆபாச தாக்குதலாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. அவரது தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு செய்யப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அநாகரிகத்தின் உச்சம்.

இது தொடர்பாக ஜோதிமணியிடம் பேசினோம். "பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் இதுபோன்ற தாக்குதல்களைச் சந்திப்பது என்பது புதியதில்லைதான். ஆனால், இதன்மூலம் பி.ஜே.பி தரப்பு இளைஞர்களை மோசமான பாதையில் வளர்த்தெடுக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. நான் கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய திருமங்கலம் என்கிற குக்குராமத்தைச் சேர்ந்தவள். எளிமையான விவசாய குடும்பம் என்னுடையது. மக்கள் பணி மீது எனக்கிருந்த தீராத ஆர்வத்தால்தான் சின்ன வயதிலேயே அரசியலுக்கு வந்தேன்.

22 வயதில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக போட்டியிட்டு வென்று, 1996ல் இருந்து 2006 வரை பத்து ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தேன். கட்சியிலும் இளைஞர் காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்திருக்கிறேன். கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். எனது சொந்த கிராமத்தில் 15 வருடங்களாக குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்ட தலித் மக்களுக்கு போராடி குடிதண்ணீர் பெற்று தந்திருக்கிறேன். இப்படிப்பட்ட,சூழலில் பி.ஜே.பி.யின் இந்த மோசமான தாக்குதல் பி.ஜே.பி, காங்கிரஸ் மோதல் என்பதைத் தாண்டி, ஒட்டுமொத்த பெண் குலத்துக்கு எதிரான ஆதிகாலத்து வக்கிர சிந்தாந்தமாகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதலாகவும் தான் நான் இதை பார்க்கிறேன்.

29-ம் தேதி எனது பேஸ்புக் பக்கத்தில் கோஷ்லா எழுதியதையும், பி.ஜே.பி. குறித்து அமீர்கான் எழுதியதையும் ஷேர் செய்திருந்தேன். நேற்று முன்தினம் இரவே திருநெல்வேலியில் இருந்து பி.ஜே.பி நிர்வாகின்னு ஒருத்தர் போன் செய்து, 'உன்னை யார் அப்படி போஸ்ட் போடச் சொன்னது?. ஒழுங்கா அதை ரிமூவ் பண்ணிரு'ன்னு சொல்லி, ஆபாசமா பேசினார். அதை நீக்க முடியாதுனு சொன்னேன். இன்னும் மோசமா பேச ஆரம்பிச்சார். போனை கட் பண்ணீட்டேன். அவரைத் தொடர்ந்து அந்த நம்பரில் இருந்தும், வேறு நம்பர்களில் இருந்தும் கால் தொடர்ச்சியாக வந்துச்சு. நான் எடுக்கலை. இப்ப வரைக்கும். ஆயிரத்துக்கு மேற்பட்ட மிஸ்டு கால்கள் வந்திருக்கு. இன்னொரு பக்கம் பேஸ்புக், வாட்ஸ்அப்புகள்ல, என் பேஸ்புக்கின் கமெண்ட் பாக்ஸ்லனு எல்லா சமூக ஊடகங்களிலும் என்னைப் பற்றி மிக கேவலமாக சித்தரித்து கருத்து போட்டார்கள். என் போன் நம்பரை அதில் போட்டு,'மோசமான பெண்..யார் வேண்டுமானாலும் ட்ரை பண்ணலாம். கால் பண்ணுங்க'ன்னு போட்டிருக்காங்க.

என் அங்கத்தையும், என் தோற்றத்தையும் மிக கேவலமாக பாலியல் ரீதியாக வர்ணித்து எழுதி இருக்கிறார்கள். பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் அல்லது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் அவள் அடிபணிந்து போவாள் என்கிற ஆதிகாலத்து சிந்தனையை பி.ஜே.பி தலைமை அந்த கட்சியின் இளைஞர்களிடம் வளர்த்து வருகிறது.

இந்த மோசமான செயல்களில் இளைஞர்களை இறக்கி விடப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இன்னொருபுறம் வருத்தமாகவும் இருக்கிறது. ஒரு பதிவில் 'அக்கா' என்று ஒருவன் ஆரம்பிக்கிறான். அதைப் பார்க்கும்போது அவன்மீது பரிதாபமாகத்தான் இருந்தது. தன் சிந்தனைகளுக்கு எதிராக வேறெவரும் கருத்து சொல்லக்கூடாது என நினைக்கிற இந்துத்துவச் சக்திகளின் வேலைதான் இது. நேரடியாக அறிமுகம் இல்லாத என் மீது இத்தனை வன்மத்தோடு, பாலியல் ரீதியான வார்த்தைகளை பிரயோகிக்கும் மனநிலையோடுதானே தனக்கு அறிமுகமான பெண்களை, சுற்றியிருக்கும் பெண்களை, தங்கள் வீட்டுப் பெண்களை அணுகுகிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.

எனக்கு இப்போது முதல்முறையாக நடக்கவில்லை. ஏற்கெனவே ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருமுறை இப்படி நடந்திருக்கு. அதேபோல்,பி.ஜே.பி அரசு கொண்டு வர இருந்த நில அபகரிப்பு சட்டத்துக்கு எதிராக நான் போஸ்ட் போட்டபோதும், என்னை ஆபாசமாக இதே குரூப் தாக்கியது. மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக நான் கருத்து போட்டபோதும், இப்படி ஆபாச தாக்குதல்கள் தொடுத்தார்கள். நான் அப்போது அதை அப்படியே விட்டுவிட்டேன். எனக்கு நடந்த இந்த விஷயம் மத்த தோழிகளுக்கும் நடந்திருக்கு. குறிப்பா மீடியாவில் உள்ள பெண்களுக்கு, அவ்வளவு ஏன் ஆண்களுக்கே நடந்திருக்கு. ராஜாஜி பேரனுக்கு கூட நடந்திருக்கு. அவர்கள் சைபர் கிரைமில் புகார் கொடுத்தும், பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. சைபர் கிரைமின் நிலைமை ஜீரோதான்.

அதனால், அப்படிப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பக்கங்களை சமூக வலைத்தளத்தில் பிளாக் செய்துவிட்டு ஒதுங்கிகொண்டார்கள். ஆனால், நான் அப்படி இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க, எதிர்தரப்புக்கும் அதே கருத்து சுதந்திரம் இடம் தருது. ஆரோக்கியமான விவாதம் செய்தால், அது நல்லது. ஆனால், அதை விடுத்து, இப்படி ஆபாச தாக்குதலில் இறங்குவது என்பது கொடுமை.

பூனைக்கு யாராச்சும் மணி கட்டணும்ல. அதான், என் மீதான பி.ஜே.பி.யின் தாக்குதல்களை எடுத்து, எனது பேஸ்புக் பக்கத்தில் ஓப்பனாக விமர்சித்திருக்கிறேன். அதில் ஓரளவு விசயத்தைதான் போட்டிருக்கிறேன். இன்னும் பல ஆண்களின் பெயர்களை போட்டு அவர்களோடு என்னை பாலியல் ரீதியாக தொடர்புபடுத்தி, எழுதி இருப்பதையும், முஸ்லிம்களைப் பத்தி கேவலமாக சித்தரித்ததையும் நான் பதியவில்லை. சட்ட ரீதியான நடவடிக்கைகளைப் போலவே சமூகத் தளத்தில் இதற்கான எதிர்ப்பினை செய்ய வேண்டியது கட்டாயம்.

இப்படி செய்தால் நான் அக்கவுன்டை பிளாக் செய்துவிட்டு ஒதுங்கிவிடுவேன்ன்னு கனவு கண்டாங்க. ஆனால்,இதை நான் சும்மா விடபோவதில்லை. இதை இப்படியே விட்டால்,நாளை எல்லா பெண்களுக்கும் எதிராக இப்படி மோசமான விமர்சனம் பண்ற தைரியம் எல்லாருக்கும் வந்துரும். பி.ஜே.பி.யில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசனுக்கும் இந்த நிலை வரும். அதேபோல்,தொடர்சியாக கால்கள் வருவதை பார்த்தால், இது சாதாரண பி.ஜே.பி தொண்டர்கள் பண்ணுவதாக தெரியவில்லை. தனி டீமை இதற்காக அமைத்து பி.ஜே.பி தலைமை, பண்ண சொல்கிறது. ஏனென்றால் நேற்று இரவு நான் முகநூலில் பதிந்த பதிவை, இன்று காலையில் புகார் அளித்து, நீக்கச் செய்திருக்கிறார் என்றால் பலரும் குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள் என்பதாகத்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
 
கோஷ்லாவே, 'எங்களை சோனியா காந்தியையும்,.ராகுல் காந்தியையும் கேவலமாக திட்ட சொல்வார்கள்'ன்னு ஓப்பனா சொல்லி இருக்கார். அதேபோல், எனக்கு கால் வரும் நம்பர்களும் ஐ.பி நம்பரா, பாரீனிலிருந்து வரும் அழைப்புகளாக தெரியுது. இந்த கேவலமான வேலையை செய்ய உலகம் முழுக்க பி.ஜே.பி நெட்வொர்க் வச்சுருக்கு.  பி.ஜே.பி எது பண்ணுனாலும் கண்ணை மூடிகிட்டு ஆதரிக்கனும் இல்லைன்னா வாயை மூடிகிட்டு இருக்கனும்ன்னு நினைக்குறாங்க. அதை மீறி கருத்துச் சொன்னா இப்படி தாக்குறாங்க. பி.ஜே.பி என்னைப்பற்றி செய்த பாலியல் கருத்துகளை டிவிட்டர் பக்கம் மூலமாக மோடிக்கும், தமிழிசைக்கும் இணைத்து அனுப்பினேன். இப்ப வரைக்கும் அவங்க அதுக்கு எந்த ரியாக்சனும் காட்டலை.

இவற்றையெல்லாம், என் மீதான தாக்குதல்களுக்கு மட்டுமே செய்யவில்லை. ஒரு பெண் மீதான அவதூறுகளையும் தாக்குதல்களுக்கு எதிர்வினையாகவே செய்கிறேன். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுசமூகத்தில் பணியாற்றும் பெண்களைக் குறிவைத்து தாக்குவதை எதிர்த்த போராட்டமாகவே செய்கிறேன். என்னை, நான் வெறும் பால் உறுப்பாக மட்டுமே பார்க்க வில்லை. ஆனால் என் மீது தாக்குதல் நடத்துவோர் தங்களை பால் உறுப்பாக மட்டுமே நினைக்கிறார்கள் போல. அதனால்தான் இப்படி செய்கிறார்கள். நான் அவர்களுக்கு அதே வழியில் பதில் அளிக்கப்போவதில்லை. நான் வளர்ந்த அரசியல் சூழல் அப்படியானதும் இல்லை. எனக்குப் பிடித்த புத்தர் கதை ஒன்று இருக்கிறது, ஒருவருக்கு ஒரு பரிசைத் தரும்போது, அவர் பெற மறுத்துவிட்டால் அந்தப் பரிசு கொடுக்க நினைத்தவரிடமே தங்கி விடும்.

இதுபற்றி கரூர் மாவட்ட எஸ்.பி இராஜசேகரன்கிட்ட புகார் கொடுக்க போறேன். அதைதவிர,எங்க கட்சி தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறேன்.கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் மலேசியா போயிருக்கிறதால, அவர்கிட்ட சொல்ல முடியலை. மாநிலம் முழுக்க அங்கங்கே பல பேர் தனியா கம்ளைன்ட் கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க. தூங்குற சைபர் க்ரைமை தட்டி எழுப்புவோம். நான் சமூக வலைத்தளங்களில் பதியிற போஸ்ட்கள் கடுமையா ரீச் ஆகுறதால்,அவங்களால தாங்கிக்க முடியலை. இதே பி.ஜே.பி சோனியா காந்தி,ராகுல்காந்தியை கடுமையா பலமுறை விமர்சனம் பண்ணி இருக்காங்க. அதுக்காக,நாங்க பதிலுக்கு ஆபாச தாக்குதலா நடத்தினோம். நாங்க ஆபாச தாக்குதல் நடத்த பி.ஜே.பிவிலும் பெண்கள் இருக்கிறார்கள். எங்க பக்கமும் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால்,நாங்க அப்படி செய்யமாட்டோம். கருத்தை மாற்றுக் கருத்து கொடுத்துதான் எதிர்கொள்வோம். என்மீதான பாலியல் தாக்குதலை சட்டரீதியாக எதிர்கொள்வதோடு,ஒரு இயக்கமாக இதை கொண்டு போய் பி.ஜே.பிவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்றார்.

- துரை.வேம்பையன், வி.எஸ்.சரவணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்