வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (02/01/2017)

கடைசி தொடர்பு:10:53 (02/01/2017)

மிக மோசமான புத்தாண்டு பரிசு! ராமதாஸ்

உலகில் எந்த நாட்டிலும் எரிபொருட்கள் மீது இந்த அளவுக்கு அதிகமாக வரி விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்,  பெட்ரோல், டீசல் விலைகளை மீண்டும் ஒருமுறை உயர்த்தியிருப்பதன் மூலம் இந்திய மக்களுக்கு மிக மோசமான புத்தாண்டுப் பரிசை மத்திய அரசு வழங்கியிருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலைகளை மீண்டும் ஒருமுறை உயர்த்தியிருப்பதன் மூலம் இந்திய மக்களுக்கு மிக மோசமான புத்தாண்டு பரிசை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் வழங்கியிருக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.1.66 உயர்ந்து ரூ.70.07-க்கும், டீசல் விலை ரூ.1.19 உயர்ந்து ரூ.59.47-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டித் தான் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரையிலான 15 நாட்களின் சராசரி விலையுடன் ஒப்பிடும்போது டிசம்பர் 16 முதல் 30-ம் தேதி வரையிலான 15 நாட்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெயின்  சராசரி விலை பெரிய அளவில் உயரவில்லை. இரு காலகட்டங்களிலுமே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 54 அமெரிக்க டாலர் என்ற நிலையில் தான் இருந்து வந்தன. ஆனால், இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் கடந்த 15 நாட்களில் ஏதோ ஒரு சில நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருந்ததைக் காரணம் காட்டி உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இது முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட முடிவாகும். 

கடந்த 2008-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தான் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால், அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.73.00 என்ற அளவிலேயே இருந்தது. அதன்படி பார்த்தால் பன்னாட்டுச் சந்தையில் இப்போது கச்சா எண்ணெயின் விலை 53.04 டாலராக உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 27.00 ரூபாய் என்ற அளவில் தான் இருக்க வேண்டும். ஆனால், அதைவிட 160 விழுக்காடு அதிகமாக ரூ.70.07-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசின் அனைத்து வருவாய் தேவைகளுக்கும் எரிபொருட்கள் மீதான வரிகளை சார்ந்து இருப்பது தான்  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாகும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் இன்றைய (02.01.2017) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.28.88 மட்டுமே. இது கச்சா எண்ணெய் மீதான சுங்கவரியையும் உள்ளடக்கியதாகும். ஆனால், சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70.07 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. இது அடக்கவிலையை விட ரூ.41.19 ஆகும். அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் அடக்கவிலை ரூ.27.58 மட்டுமே எனும் நிலையில் ரூ.31.89 கூடுதலாக சேர்த்து ரூ.59.47-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு லிட்டர் பெட்ரோல் மீது வரிகள் மற்றும் விற்பனையாளர் லாபமாக ரூ.41.19, ஒரு லிட்டர் டீசல் மீது வரிகள் மற்றும் விற்பனையாளர் லாபமாக ரூ.31.89 வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. உலகில் எந்த நாட்டிலும்  எரிபொருட்கள் மீது இந்த அளவுக்கு அதிகமாக வரி விதிக்கப்படவில்லை.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எரிபொருட்களின் விலைகளை உயர்த்துவதன் மூலம் அவர்கள் மீது இன்னொரு தாக்குதலை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தொடுக்கக் கூடாது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும் கடந்த ஆண்டு எரிபொருட்கள் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைத்து, அதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.18 வரை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க