'லட்சங்களை வாங்கிட்டுதானே கட்சியில இருந்தீங்க!' நடிகர் ஆனந்தராஜுக்கு எதிராக ஒரு நடிகரின் குரல்

நடிகர் ஆனந்தராஜ், அ.தி.மு.கவிலிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, சசிகலாவையும் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்கார்த்திக். தேர்தல்  கூட்டத்தில் பேசுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் ஆன்ந்தராஜ் மீது நடிகர் விஜய்கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது தோழியான சசிகலா, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பு ஏற்றுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் தலைமையை ஏற்காத நடிகர் ஆனந்தராஜ், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது சசிகலாவையும், கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் அவர் விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ஜெ.எம். பஷீர் என்ற விஜய்கார்த்திக், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தராஜின் வீட்டை தன்னுடைய ஆதரவாளர்களுடன் முற்றுகையிட முயன்றார். போலீஸார் சமரசப்படுத்தியதால் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் ஆனந்தராஜ், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனால் ஆனந்தராஜ் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆனந்தராஜிக்கு எதிராக நடிகர் விஜய்கார்த்திக் நாளை பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார். 

இந்நிலையில் அவர், நம்மிடம் பேசுகையில், "அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருந்த ஆனந்தராஜ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அது அவருடைய சொந்த கருத்து. அம்மாவின் (ஜெயலலிதா) மறைவுக்குப்பிறகு கட்சியினரின் வற்புறுத்தலுக்கு மதிப்பளித்து பொதுச் செயலாளராக சின்ன அம்மா (சசிகலா) பொறுப்பேற்றுள்ளார். அவரைப் பற்றியும், கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் குறித்தும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி கட்சியை உடைக்க நினைக்கும் தி.மு.க.வின் கைக்கூலி நடிகர் ஆனந்தராஜ். தேர்தல் நேரத்தில் ஒரு இடத்தில் பேச ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கினார் ஆனந்தராஜ். எனவே கட்சியின் மூத்த நிர்வாகிகளையும், சின்ன அம்மாவையும் விமர்சித்ததற்காக ஆனந்தராஜ், மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு எதிரான அறவழியில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

- எஸ்.மகேஷ்  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!